எல்லோரும் தடையின்றி உண்ணக்கூடிய வகையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவான “சூப்பர் முட்டைகள்” (Super Eggs) ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக் கழகத்தினர் உருவாக்கியுள்ளனர். மற்ற முட்டைகளைக் காட்டிலும் இம்முட்டைகளில் கொழுப்பும், பிற சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைக்கப்பெற்றுள்ளன. இந்தச் சத்துக்களின் சமச்சீர் கலவை இதயத் தமனி நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.
இந்த சூப்பர் முட்டைகளை மேலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பின்னர் விற்பனைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ளனர். இவ்வகை முட்டைகள் இடுவதற்கென்றே இம் முட்டையிடும் கோழிகளுக்கு மீன் எண்ணெய் (Codliver oil) கனோலா எண்ணெய் (Canola oil) தானியங்கள், எலும்பு, இறைச்சித் துணுக்ககள், வைட்டமின்கள் மணிச்சத்து போன்றவைகளைச் சரிவிகிதத்தில் கலந்த கலவையை உணவாக இடுகின்றனர்.
மீன்களில் காணப்படும் ஓமேகா 3 வரிசைச் செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள், தமனிகளில் படிந்துள்ள கடினமான திசு scar கரைத்து அடைப்புகளை நீக்கிச் சமன் செய்வதால் (neutralise) உணவில் மீன் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்று உடல் நலவியலாளர்கள் கருதுகிறார்கள்.
இயல்பான முட்டைகளைக் காட்டிலும் பெரிய அளவில் இருக்கும் இந்த சூப்பர் முட்டைகளை நாளொன்றிற்கு இரண்டு முட்டைகள் வீதம் 45 பேர்களுக்குத் தொடர்ந்து ஏழு வாரங்களுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் நுணுக்கமான சில முடிவுகள் தெரியாது போனாலும், அவர்களது இரத்தக் கொலஸ்ட்ரால் அளவு உயரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆய்வுகள் இன்னமும தொடர்கின்றன.
ஆயுர்வேதம்.காம்