சன்பாத் எடுங்கள்

Spread the love

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று திரைப்படம் ஒன்றில் எம்.ஜி.ஆர்.  பாடுவார்.  ஆனால், தூசி, அழுக்கு, புகையினாலும், அசுத்தக் காற்றினாலும் உண்டான ஒரு மிகப்பெரிய மாசுப்படலம்.  மிகப்பெரிய போர்வையாகத் தெற்கு ஆசியாவின் மேலே பரவி, சூரிய ஒளியை மூடி மறைத்து இந்தியாவின் மேல் விழும் சூரிய ஒளியை சுமார் 10 சதவீதம் குறைத்து விட்டதாக ஒரு புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ சத்து நமது உடலுக்குப்போதுமானதாக இல்லை என்பதால் வெயிலில் தினமும் கொஞ்ச நேரமாவது நிற்க வேண்டும்.  கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் பூமத்தியரேகையைத் தாண்டி வாழ்கிறார்கள்.  எனவே அவர்களுக்கு சூரிய ஒளி குறைவான நேரமே கிடைக்கும்.  அதாவது  அங்கெல்லாம் வெயில் அதிகம் கிடையாது.  அப்படியே இருந்தாலும் மண்டையைப் பிளக்கும் வெயில் கிடையாது.

ஆனால் இந்தியர்கள் கொடுத்துவைத்தவர்கள்.  பூமத்திய ரேகைக்கு அருகில் நாம் வாழ்வதால் வெயில் நமக்கு அதிகமாகவே கிடைக்கிறது.  நம்மூரில் மார்ச் மாதத்தில் வெயில் காயும் நேரம் மிக அதிகமாக இருக்கும்.  அதாவது பகல் நேரம் அதிகம், இரவு நேரம் குறைவு.  ஒரு ஆண்டில் 2 ஆயிரத்து 716 மணி நேரம் வெயில் நம்மூரில் அடிக்கிறது.  எனவே வெயிலை நாம் எல்லோரும் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான ‘வைட்டமின் டி சத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

‘வைட்டமின் டி’ பற்றிய டாக்டர்களுக்கான ஒரு மீட்டிங் சமீபத்தில் சென்னையில் ஒரு மிக பெரிய ஓட்டலில் நடைபெற்றது.  நானும் கலந்து கொண்டேன்.  மீட்டிங்கில் கலந்து கொள்ள வந்திருந்த  டாக்டர்கள் அனைவருக்கும் அவரவர்களின் ‘வைட்டமின் டி’ அளவு தெரிந்து கொள்ள இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.  வேடிக்கை என்னவென்றால் முக்கால்வாசி டாக்டர்களுக்கு இரத்தத்தில் ‘வைட்டமின் டி’ யின் அளவு இருக்க வேண்டியதைவிட மிகக் குறைவாகவே இருந்தது.  என்னையும் சேர்த்துத்தான்.

காரணம் வெயில்படாமலே வாழ்வதுதான்.  அந்தக் காலத்தில் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்ததைப்போல இந்தக் காலத்தில் அனேகம் பேர் நவீன குகைகளாகிய வீடு,  கார்,  ஆபிஸ் என்று  வெயில் படாமலேயே வாழ்கிறோம்.  இவர்களுக்கு வெயில் எப்படி உடலில் படும்?  இவர்களுக்கு ‘வைட்டமின் டி’ எப்படி கிடைக்கும்.

சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு சருமப் புற்றுநோய் அதாவது தோலில் புற்றுநோய் வருவது மிகக் குறைவு என்று அமெரிக்கா &  நார்வே கூட்டறிக்கை ஒன்று கூறுகிறது.  மற்ற நாடுகளை ஒப்பிடும்போது தோலில் ஏற்படும் புற்றுநோய் நம் நாட்டில் மிகமிகக் குறைவுதான்.  காரணம்  நம்நாடு வெயில் அதிகமுள்ள நாடு.  தெரிந்தோ, தெரியாமலோ நம் மக்களும் வெயிலில் அதிக நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.  அதனால், தோல் புற்றுநோயும் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது.

கொளுத்தும் வெயிலில் நின்றால்தான் ‘வைட்டமின் டி’ நமது உடலுக்கு கிடைக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.  தோலைக் கருப்பாக்காத மிக மிதமான சாதாரண வெயிலில் நின்றால் கூட உடலுக்குத் தேவையான ‘வைட்டமின் டி’ கிடைக்கும்.  வயதாகாக தோலில் சுருக்கம் ஏற்பட்டு விடுவதால் சூரிய ஒளியை உள்வாங்கி ‘வைட்டமின் டி’ யை உற்பத்தி பண்ணும் சக்தி வயதானவர்களுடைய தோலுக்குக் குறைந்து விடுகிறது.  எனவே 65 வயதுக்கு மேலானவர்கள் தினமும் 10 மைக்கிரோகிராம் (1 மைக்ரோ கிராம் & 40 யூனிட் ஆகும்) ‘வைட்டமின் டி’ சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.  கர்ப்பிணிப் பெண்களும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் கூடத் தினமும் ‘வைட்டமின் டி’ சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருப்பாக இருப்பவர்கள் சிகப்பாக இருப்பவர்களைவிட வெயிலில் அதிக நேரம் நிற்க வேண்டும்.  அப்பொழுதுதான் அவர்களுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ கிடைக்கும்.  சிகப்பாக இருப்பவர்களுக்கு சீக்கிரமே வைட்டமின் ‘டி’ உற்பத்தியாகி விடும்.  கருப்பாக இருப்பவர்களுக்குக் கருப்பு நிறத்தை உண்டு பண்ணக்கூடிய ‘பிக் மெண்ட்ஸ்’ அதிகமாகத்தோலில் இருப்பதால் சூரிய ஒளியை உள்வாங்க அதிக நேரம் எடுக்கும்.

சற்று மாநிறமான பெண் ஒருவருக்கு ஏற்பட்டிருந்த மார்பகப் புற்றுநோய், அதிக நேரம் சூரிய ஒளியில் அந்தப் பெண் இருந்ததால் புற்றுநோய் அதிகமாக பரவாமல் லேசான பாதிப்புடன் போய்விட்டது.  அந்தப் பெண் சூரிய ஒளியில் அதிக நேரம் உலவாமல் இருந்திருந்தால் புற்றுநோய் அதிகமாகப் பரவியிருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சூரிய ஒளி மூலம் உடலில் உருவான ‘வைட்டமின் டி’ க்கு சக்தியைக் கொடுப்பது, நமது சிறுநீரகங்களும் கல்லீரலும் தான்.  எனவே, கல்லீரல் அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலினுள் இருக்கும்  ‘வைட்டமின் டி’ க்குச் சக்தி கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.  எனவே, கல்லீரல், சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக ஒழு ங்காக வைத்துக் கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.

வெயில் அதிகமாக வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக நாம் வீட்டு ஜன்னல்களிலும், கதவுகளிலும் ‘சன்ஸ்கிரீன் பேப்பர்’ ஒட்டி வீட்டை குளிர்ச்சியாக மாற்றி விடுகிறோம்.  இந்தப் பேப்பர்கள் சூரிய ஒளியிலுள்ள ‘அல்ட்ரா வயலெட் பி’ கதிர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து விடும்.  இந்தக் கதிர் படாவிட்டால் உள்ளே வரும் வெயில் பட்டாலும் வைட்டமின் டி  உருவாகாது.  இது தெரியாமல் நாம் கூல் பேப்பர்களை ஜன்னல் முழுவதும் ஒட்டி வைத்து விடுகிறோம்.

உடலில் அதிகமான ‘வைட்டமின் டி’ இருப்பதும் நல்லதல்ல.  எனவே உங்கள் டாக்டரைச் சந்தித்து ரத்தத்தில் ‘வைட்டமின் டி அளவு சரியாக இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் கடற்கரையோரங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அரைகுறை ஆடையுடன் சூரிய ஒளியில் படுத்திருப்பதை நீங்கள் திரைப்படங்களிலும், நேரிலும் பார்த்திருப்பீர்கள்.  ‘சன்பாத்’ என்று சொல்லப்படும் இந்த சூரிய ஒளிக்குளியல் உடலுக்கு ‘வைட்டமின் டி’ யைத் தருவதோடு மட்டுமல்லாமல், உடலிலுள்ள பல நோய்களைக் குணப்படுத்திம, உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, உடலை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

நூற்றுக்கணக்கான ஏன்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் இந்தப் பூமியில் நிர்வாணமாகத்தான் சூரியனுக்குக் கீழே அலைந்து கொண்டிருந்தான்.  சூரிய ஒளி மனிதனுக்குத் தீங்கு பண்ணியிருந்தால் இன்றைக்கு மனித இனமே இருந்திருக்காது.  எனவே, சூரியனால் மனிதன், மிருகம், செடி, கொடி ஆகிய அனைத்துக்குமே நன்மைதானே தவிர, தீமையில்லை. எனவே சூரியனைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.


Spread the love