கோடை காலத்தில், வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிக்கும். இதனால், சருமம் கறுத்துவிடுகிறது. மேலும் வியர்க்குரு, வேனல் கட்டிகள், உடல் உஷ்ணம் அதிகரித்தல், கண் எரிச்சல், தேமல், படை, சொறி, வெண்புள்ளி, சிரங்கு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இறுக்கமான ஆடைகளை அணிவதால், சருமத்தில் வியர்வை தேங்கி படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இவற்றிலிருந்து விடுபடவும், இவைகள் வராமல் பாதுகாக்கவும் சில இயற்கையான, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான குறிப்புகளை பார்ப்போம்.
உடல் உஷ்ணம் நீங்க:
உடல் சூட்டினால் அவதிபடுகிறவர்கள் தாங்கள் உண்ணும் உணவில் அதிகளவு வெந்தயம், மணத்தக்காளி கீரை, வெங்காயம் இவற்றை தொடர்ந்து சேர்த்து வர உடல் சூட்டை தணிக்கலாம்.
திராட்சை பழம் உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலிற்கு குளிர்ச்சியை உண்டாக்கி, மலச்சிக்கலையும் நீக்குகிறது.
மேலும் மோர், இளநீர், தர்பூசணி மற்றும் தண்ணீர் போன்றவற்றை பருகுவதினாலும் உடல் சூட்டை தணிக்கலாம்.
கண் கட்டி மற்றும் எரிச்சல் நீங்க
உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து விரைவில் குறைந்து விடுகின்றது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, உடலில் வேனல் கட்டிகளும், முகத்தில் பருக்களும் ஏற்படுகின்றது. இந்தக் கட்டிகளை கையால் தொடவோ அல்லது கிள்ளவோ கூடாது.
உடல், தலையில் ஏற்படும் கட்டிகளை சீதாப்பழ மர இலை மற்றும் உப்பு இவற்றை சேர்த்து அரைத்து, கட்டி மீது வைத்து கட்டவேண்டும். பின் கட்டிகளின் மீது எருக்கம்பால் தடவி வர அவை விரைவில் பழுத்து உடைந்து விடும்.
உருளைக்கிழங்கு தோலை சீவி அதனை கண் கட்டி மீது சில மணி நேரம் வைத்து வர கண் கட்டி கரையும்.
வியர்க்குரு நீங்க
வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. அதிகமான தூசி, புகை மற்றும் மாசு கலந்த வெப்ப காற்று ஆகியவற்றால் தோலில் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு மிகவும் எளிதில் கிடைக்க கூடிய பனை நுங்குவை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வியர்க்குரு அதிகமாக உள்ள இடத்தில் சிறிதளவு தயிரை தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின் இதனை குளிர்ந்த நீரில் கழுவி வர நல்ல பலனை காணலாம்.
மேலும், வியர்வையை உறிஞ்சும் நல்ல காட்டன் ஆடைகளை அணியவும். வியர்வை உடம்பில் தங்காதவாறு முகத்தை வெறும் நீரால் கழுவ வேண்டும். உடலை குளிர்ச்சியுடனும், காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது மிகவும் நல்லது.
சரும அரிப்பு நீங்க
சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படுகின்றது. இதனால் சருமத்தில் அரிப்பு ஏற்படுகின்றது.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் பூவரச இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும் போது தோலில் ஏற்படும் அரிப்பு ஆகியவை நீங்கும்.
பூவரசம் மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து, அதை தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசிவர சரும அரிப்பு குணமாகும். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிப்பதில் பூவரசம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் இரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் நீங்கும்.
தினமும் இருமுறை சருமத்தை ஐஸ் கட்டிகளை கொண்டு மசாஜ் செய்யவும். இதன் மூலம், கோடையில் ஏற்படும் சரும அரிப்புகளை தடுக்கலாம்.
கற்றாழையில் கூட சரும அரிப்புகளை குணப்படுத்தும் தன்மை உள்ளது. தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவவும். இதனால் அரிப்பு நீங்கி, சருமம் பளபளப்புடன் காணப்படும்.
வேப்பிலையை அரைத்து அதனை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவவும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை அரிப்புகளை தடுக்கின்றது.
தோல் வியாதி நீங்க
தோல் வியாதிகளுக்கு அருகம்புல் நல்ல பலனை தருகின்றது. ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து, பசையாக்கி அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து குளித்து வர தோலில் ஏற்படும் அரிப்பு நீங்கும். மேலும், தோல் மென்மையாகவும் காணப்படும்.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வர இரத்தம் சுத்தமாகும். இதில் உள்ள புரத சத்து உடலுக்கு பலம் தரும். ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகின்றது.
குப்பைமேனி சொறி, சிரங்குக்கு நல்ல பலனை தரக்கூடியதாகும். ஒரு கைப்பிடி குப்பைமேனி இலை, சிறிதளவு மஞ்சள் கிழங்கு, தேவையான அளவு கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பாதிக்கப்பட்ட தோல் பகுதி முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும். இதனை காலை நேரத்தில் பூசி குளித்து வருவது நல்லது.
கல்லுருவி இலையை சுத்தம் செய்து அரைத்து, அந்த சாற்றை போட்டு வர தோல் வியாதி குறையும்.
ஜோ.கி.