கோடைக்காலம் என்றாலே நினைவுக்கு வருவது கொளுத்தும் வெயில் தான். வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன.
இது மட்டுமில்லை, விடிந்ததில் இருந்து உறங்க செல்லும் நேரம் வரை வெயிலின் காரணமாக தாகம் தொண்டையை காய செய்கிறது. இதன் காரணமாக நம் கையில் கிடைக்கும் பானங்களை எல்லாம் எடுத்து குடிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனை பயன்படுத்தி தான் விளம்பரகாரர்கள் மற்றும் ஊடகங்களும் மென்பானங்களை நம்மிடம் விற்று விடலாம் என்ற எண்ணத்துடன் நம் கண்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் தயாரித்து மயக்குகின்றனர். இதனால் தான் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவருக்குமே மென்பானங்களின் மீது மோகம் தான்.
இந்த மென்பானங்களினால் நம் தாகத்தைத் தணிக்க முடியுமே தவிர, அதை குடிப்பதனால் ஏற்படும் கெடுதல்களை நாம் மறந்து விடக்கூடாது.
குளுகுளு பானங்கள்
நமக்கு எளிதில் கிடைக்கும் பழங்களை கொண்டு குளிர்பானங்களை தயாரித்து, நம்மை இந்த கோடை காலத்தில் இருந்து பாதுகாக்க ஏற்ற குளிர்பானங்கள் என்ன என்பதை கீழே காண்போம்.
கிர்ணி ஜுஸ்
தேவைப்படும் பொருட்கள்
கிர்ணி பழம் – 1
பால்(காய்ச்சியது) – 5௦௦ மில்லி
சர்க்கரை – 1௦௦ கிராம்
செய்முறை
கிர்ணி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சர்க்கரையை சேர்த்து மிக்சியில் அரைத்து அதனுடன் பாலை சேர்த்து அரைக்கவும். பரிமாறுவதற்கு முன் ஐஸ் கட்டிகளை சேர்த்தும் பரிமாறலாம்.
குறிப்பு : கிர்ணி பழ துண்டுகளுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு குறையும்.
மாதுளை ஜூஸ்
தேவையான பொருட்கள்
மாதுளை பழம் – 1
சர்க்கரை – 1௦௦ கிராம்
தேன் – 2 டீஸ்பூன்
பால்(காய்ச்சியது) – ஒரு கப்
செய்முறை
மாதுளம் பழத்தை தோல் உரித்து அதனுடன் பாலையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை வடிக்கட்டி அதில் சர்க்கரை மற்றும் தேனை நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன் ஐஸ் கட்டிகளை சேர்த்து கொள்ளலாம்.
இதில் இரும்புசத்து மற்றும் வைட்டமின் சத்து அதிகம். இது பித்தத்தையும் குறைக்க கூடியது.
ஜில்ஜில் ஜிஞ்சர் மோர்
தேவைப்படும் பொருட்கள்
மோர் – 5௦௦ மில்லி
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 1௦ இலை
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் மோர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன், உப்பு, பெருங்காய் தூள் மற்றும் வெட்டி வைத்த கொத்தமல்லியை போட்டு கலந்து பரிமாறவும். ஜில்ஜில் ஜிஞ்சர் மோர் தயார்.
கோடையை குளிர்காலமாக மாற்ற
· கோடை காலங்களில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
· எண்ணெயில் பொரித்த கடை பண்டங்களுக்கு பதிலாக வெள்ளரிக்காய் மற்றும் இதர பழங்களை சாப்பிடலாம்.
· பகல் நேரங்களில் இளநீர், பழச்சாறு, மோர் போன்றவற்றை குடிக்கலாம்.
· ஐஸ் கீரிம் மற்றும் மென்பானங்களை குடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக பழசாற்றை குடிக்கலாம்.
· உடல் சூட்டை தணிக்க தர்பூசணி, எலுமிச்சை, தக்காளி போன்றவற்றில் சாறு செய்து குடிக்கலாம்.
· வாரம் இரு முறை எண்ணெய் குளியல் குளிக்கலாம்.
· வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.
· காரம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
· குளிர்ந்த நீரை குடிக்க விரும்புபவர்கள் பானை நீரை குடிக்கலாம்.
· கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
· அசைவ உணவுகளை குறைத்து கொள்வது நல்லது.