கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் செயற்கை குளிர்பானங்களை தேடி செல்கிறோம். செயற்கை குளிர்பானங்களில் பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் உள்ளது. இதை அருந்துவதால் பல் ஈறுகள் தேய்ந்து, பல் கூச்சம் ஏற்படுகின்றது. மேலும் கல்லீரலும் பாதிப்படைகின்றது. எனவே இயற்கையான குளிர்பானங்களை அருந்துவதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். ஒவ்வொரு மனிதனின் சராசரி உடலின் வெப்பநிலை 98.6 டிகிரி வரை இருக்கும். இந்த அளவை விட உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகவும் அவசியமானதாகும்.
ஒரு மனிதனின் உடலில் நாளொன்றுக்கு வெளியேறும் நீரின் அளவு:
சிறுநீராக & 1.5 லி
மலம் வழி நீராக & 200&300 மி.லி
சுவாசம் வழி நீராக & 300&400 மி.லி
வியர்வை மூலம் & 300&400 மி.லி
உடலிலிருந்து வெளியேறும் நீரை சமநிலைக்கு கொண்டு வருவதற்கு, இரண்டரை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எப்போதும், அமர்ந்த நிலையில் தண்ணீர் குடிப்பது நல்லது. சிறுநீர் கழித்த பின் நீர் அருந்துவது அவசியமானதாகும். வெயில் காலங்களில் வியர்ப்பதனால், அதிகளவு நீர் வெளியேறுகிறது. எனவே அடிக்கடி நீர் அருந்த வேண்டியுள்ளது. அதற்கென்று அளவிற்கு அதிகமாக நீர் அருந்துவதினாலும், சிறுநீர் வழியே உடலிலுள்ள பொட்டாசியம் வெளியேறிவிடும். அதிகளவில் பொட்டாசியம் வெளியேறுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலுவிழந்து நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம். எனவே தண்ணீருக்கு பதிலாக பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம்.
நாம் அன்றாட வாழ்வில் சாப்பிடும் உணவுகளில் வெங்காயம், வெந்தயம், தக்காளி ஆகியவற்றை அதிகளவில் சேர்த்து உண்டு வந்தால் உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சி பெறும். உடலிற்கு குளிர்ச்சி தரும் கீரைகளையும், நீர் சத்து மிகுந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லது. இதனால் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
காலை எழுந்ததும் பழைய கஞ்சி, வெந்தயம் இவற்றை சாப்பிட்டு வரலாம். மேலும் நீர்சத்து நிறைந்த காய்கறி, பழங்களான பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கேரட், மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றை சாப்பிட்டு வருவதால் உடலின் வெப்பநிலையை குறைக்கலாம்.
இளநீர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வருவதால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
இளநீர், மோர் இவற்றை அருந்துவதால் நமது குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு, தேவையான அளவு வைட்டமின்களும் கிடைக்கின்றது.
சிறிதளவு தேங்காயை எடுத்து அதனுடன் இளநீர், நுங்கு சேர்த்து அரைத்து, இந்த கலவையை உடல் முழுவதும் தடவி, குளித்து வருவதால் உடல் வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியடைவதை உணரலாம்.
நன்னாரி வேர்
நன்னாரி வேரை பயன்படுத்தி செய்யப்படும் சர்பத், உடலின் வெப்பநிலையை தணிப்பதற்கு சிறந்த பானமாகும். மேலும் நன்னாரி நீருடன் பாலும், சர்க்கரையும் சேர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெருகும்.
நன்னாரி, உடலின் எரிச்சலை குறைத்து சமம்படுத்துகிறது. இது வியர்வையை உண்டாக்கி, உடல் வெப்பத்தை குறைக்கிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரித்து, சிறுநீர் பிரிய உதவுகிறது.
மண்பானை தண்ணீர்
மண்பானையில் தண்ணீரை ஊற்றி, அதை தினமும் குடித்து வருவதால் உடலின் வெப்பநிலையை சீராக வைக்கலாம். மேலும் மண்பானையில் உள்ள நீரானது நமது சோர்வை நீக்கி சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது உடல் வறட்சி நீங்கி, உடலில் உள்ள வெப்பமும் குறையும்.
முலாம்பழம்
முலாம்பழம் உடலின் வெப்பநிலையை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் அதிகளவு நீர்சத்து உள்ளது. இந்த முலாம்பழத்தை ஜுஸ் செய்து குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை குறைவதை காணலாம். இதை ஒரே நேரத்தில் அதிகளவு அருந்தினால், உடலில் குளிர்ச்சி அதிகமாகி காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளரிக்காய்
கோடைக்காலங்களில் வெள்ளரிக்காய் அதிகளவில் கிடைக்கின்றது. இதில் அதிகளவு நீர்சத்து உள்ளதால் உடல் வெப்பத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
புதினா
இயற்கை வைத்தியத்தில், உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா மிகவும் சிறந்ததாகும். அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள் புதினாவை ஜுஸ் செய்து குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
முள்ளங்கி
முள்ளங்கியில் அதிகளவு நீர்சத்தும், வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்து வருவது நல்லது. இவை நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
எள்
எள் சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை தணிந்து, உடலில் நீர்சத்தும் அதிகரிக்கிறது.
சீரகம்
நமது உடலின் வெப்பத்தை தணிப்பதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூங்குவதற்கு முன்பு சீரகத்தை சுடுநீரில் போட்டு அதை, மறுநாள் காலையில் குடித்து வரவும். இவ்வாறு செய்வதால் உடலின் வெப்பநிலை குறைகிறது.
மாதுளை
மாதுளை பழத்தில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. எனவே நாம் அடிக்கடி மாதுளம் பழ ஜுஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் தணிந்து, ஆரோக்கியமாக இருக்கும்.
வெந்தயம்
வெந்தயம் குளிர்ச்சியை தரக்கூடியதாகும். வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பம் குறையும். இது பழமையான இயற்கை வைத்தியமாகும். இதனால் வயிற்று வலி குறைந்து, உடலின் வெப்பநிலையும் குறைகிறது. இரவில் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாளில் அதை அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வருவதாலும், உடல் வெப்பம் குறையும்.
குளிர்ச்சியான பால்
குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் வெப்பநிலை குறையும்.
கசகசா
தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கை கசகசா சாப்பிட்டு நீர் அருந்தவும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற்று, உடலின் வெப்ப நிலையையும் சீராக வைக்கலாம்.
மோர்
நாம் சாப்பிடும் உணவுடன் தயிரை விட மோர் அதிகளவு பயன்படுத்துவது நல்லது. மேலும் தினமும் மோர் குடித்து வந்தால், உடலின் வெப்பநிலை குறையும்.
நல்லெண்ணெய் குளியல்
வாரத்திற்கு இரண்டு முறை, தலை மற்றும் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருவது நல்லது.
உடலின் தலைமை செயலகம் மூளையாகும். எனவே நாம் குளிக்கும் போது காலில் இருந்து நீரை ஊற்றி குளிப்பதால் உடலின் வெப்பம் மூக்கு, கண்கள் வழியே வெளியேறுகிறது.
நேரடியாக தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பதால் உடலிலுள்ள வெப்பமானது வெளியே செல்ல முடியாமல் தலையில் சேர்ந்து அதன் மூலம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கின்றது. எனவே காலில் இருந்து நீரை ஊற்றி குளிப்பது உடல் வெப்பத்தை குறைக்க சிறந்த வழியாகும்.
கேழ்வரகு கூழ்
கோடைகால வெயிலின் வெப்பத்தை தணிக்க கேழ்வரகு கூழ் மிகச்சிறந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். கேழ்வரகு கூழை எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
வேர்க்கடலை – 1 கைப்பிடி
உப்பு -தேவையான அளவு
செய்முறை
வெறும் கடாயில் வேர்க்கடலையை போட்டு வறுக்கவும், பின் கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும். வெந்ததும், இறக்கி பரிமாறலாம்.
கம்மங்கூழ்
கோடைக்கால பானங்களில் கம்மங்கூழ் மிகவும் இன்றியமையாததாகும். இதில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் நார்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவைகள் உடலில் செரிமானத்தை எளிதில் ஏற்படுத்துகின்றது.
வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்ததாகும். கம்பை நன்கு வறுத்து பொடி செய்து சலித்து அதனுடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொடுத்தால் குழந்தைகளுக்கு தேவையான சத்து கிடைத்து, நன்கு வளருவார்கள். சதைப்பற்றும் அதிகரிக்கும்.
செய்முறை:
முதலில் இதை தூசி, கற்கள் இல்லாமல் சுத்தம் செய்து அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பின் அந்த நீரை வடித்து அதை 15 நிமிடங்கள் நிழலில் காய வைக்கவும். பின் இதை ரவை பக்குவத்தில் அரைத்து வைக்கவும்.
இதை 1 லிட்டர் நீரில் கொதிக்க விடவும். கொதிக்கும்போது கட்டிப்பிடிக்காதவாறு நன்கு கிளறிவிட்டு, அரை மணி நேரம் நெருப்பில் வேக வைத்து, கூழ் பதத்தில் இறக்கவும்.
மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு, அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, அதை கம்மங்கூழுடன் கலந்து, தினமும் ஒருவேளை அருந்தி வந்தால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் காணப்படும்.
ஜோ.கி