சர்க்கரை நோய்க்கு ஆரம்பத்திலேயே அக்கறை

Spread the love

கேள்வி: டாக்டர் அவர்களுக்கு, தங்கள் பத்திரிக்கையின் வாசகன் எழுதும் கடிதம். எனது மகன் தனியார் நிறுவனத்தில் அலுவலக அதிகாரியாக பணிபுரிகின்றான். வயது 35 ஆகின்றது. எங்கள் குடும்பத்தில் பரம்பரையாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஏதும் இருந்தது இல்லை. தற்போது எனது மகனுக்கு சுகர் சிறிது அதிகம் உள்ளதாக மருத்துவ கூறுகிறார். நீரிழிவு காரணமாக கண்கள், இதயம், கை, கால் சார்ந்த உறுப்புக்களையும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பலவித பரிசோதனைகளை செய்வதுடன் நீண்ட நாள் சிகிச்சையும் அவசியம் என்று கூறுகிறார். இது குறித்து உங்கள் அறிவுரையும் விளக்கமும் கோருகின்றேன்.

பதில்: உடலில் பிரச்சினை எதுவும் இன்றி உங்கள் மகனுக்கு சர்க்கரை நோய் வந்து இருப்பதால் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் பார்வை மங்கலாகத் தெரிதல், காயம் ஆறாமல் இருத்தல், அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை, தொடர்ந்து கை, கால் வலி உட்பட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறச் சென்றதன் மூலமாக சர்க்கரை நோய் இருப்பதாக தெரிய வந்தால், சர்க்கரை நோய் எப்போதோ உங்கள் மகனுக்கு வந்திருக்கிறது என்று அர்த்தமாகும். இவ்வாறு சர்க்கரை நோய் இருப்பது கால தாமதமாகத் தெரிய வரும் நிலையில் பிரச்சனைக்கு ஏற்ப கண், இதயம், சிறுநீரகங்கள், கால் நரம்புகள் ஆகியவற்றைத் தொடந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கெனவே சொன்னது போல குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் 30 வயதை எட்டியவுடனும், ஆரோக்கியமான நிலையில் இருந்தால் 40 வயதை அடைந்தவுடனும் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சர்க்கரை நோய் இருப்பது தெரிந்து விட்டால் முதலில் மாதம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறத் தொடங்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன், டாக்டரின் பரிந்துரைப்படி மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு, சிகிச்சைப் பெற்று வந்தால் போதுமானது. ஆண்டுக்கு 4 முறை ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறும் நிலையில் ரத்தச் சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பின் விளைவுகளை எளிதாகத் தவிர்க்க முடியும்.

சர்க்கரை நோயினால் முதலில் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு

சர்க்கரை நோயின் காரணமாக முதலில் பாதிக்கப்படுவது கண்கள் தான். கண்ணின் விழித்திரை ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வையானது மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் விழித்திரை பாதிப்புக்கு டயாபெடிக் ரெடினோபதி என்று கூறுவாகள்.

சிறுநீரகங்களையும் பாதிக்கும்

கண்களுக்கு அடுத்த படியாக சிறுநீரகங்களை சர்க்கரை நோய் பாதிப்பதற்குண்டான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே சர்க்கரை, நோயாளிகள் இரத்த அழுத்த அளவையும் இயல்பானதாக வைத்துக் கொள்ள வேண்டும். எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் (மைக்ரோ புரோட்டின் யூயாடெஸ்ட்) சர்க்கரை நோயினால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆரம்பித்து உள்ளதைக் கண்டுபிடித்துவிடலாம். மருத்துவ சிகிச்சை மூலமே சிறு நீரகச் செயலிழப்பைத் தடுத்து விட முடியும். ஆனால் தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது அவசியம். கால் வீக்கம் வரை சென்று விட்டால் சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்க முடியாது.

இதயத்தைப் பாதிக்கும் சர்க்கரை நோய்

உடலில் உள்ள கொழுப்பைப் பிரிக்கும் செயல்பாட்டுக்கு இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. உடலில் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையில், கொழுப்பு பிரியாமல் கெட்ட கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) அதிகமாகி இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதன் காரணமாக இரத்தக் குழாய்கள் குறுகலாகும். இதற்கு அதீரோ குளோரோசிஸ் என்று பெயர். இதனால் சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதய இரத்தக் குழாய்களிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு சர்க்கரை நோயினால் இதயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் காரணமாக இதய நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி உணர்வை உண்டாக்கும்.

ஆற்றலில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்சு வலி இல்லாத மாரடைப்பு ஏற்படும். இதனை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பர். இதன் காரணமாக ஒரு சில மரணமடைய நேரிடுகிறது. இதனால் தான் சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் நோயாளியின் வயதைப் பொருத்து இரத்தக் கொழுப்புச் சத்து சோதனைகளும் செய்யப்படுகின்றன. கொழுப்புச் சத்து அளவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் இதனைக் காக்கும் சிகிச்சையும் சேர்த்துச் செய்யப்படுகிறது.

காலில் ஏற்படும் பாதிப்புகள்

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில் பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளும் இருக்காது. எனினும் சிலருக்கு நுனிப் பாதப் பகுதியில் குத்தல் அல்லது எரிச்சல், பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகள் இருக்கும். கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் தோன்றலாம். சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்பு, இரத்தக் குழாயின் தன்மையை கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ள இயலும்.

எடை குறைய மட்டுமா

 ‘நட’ராஜா சர்வீஸ்

கேள்வி உடல் எடையைக் குறைக்க மட்டும் தான் நடைப் பயிற்சி உதவுமா? நடை பயிற்சி செய்வதற்குரிய காலம் காலையா? மாலையா? நடை பயிற்சிக்கு என்று கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா?

பதில் உடல் எடை குறைக்க உடற்பயிற்சி அவசியம்தான். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில் நடைப் பயிற்சியிலிருந்து துவங்கலாம். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது. நடைப்பயிற்சியை சுறுசுறுப்போடு தினமும் அரை மணி நேரம் செய்யும் பொழுது உடலில் இருந்து 150 கலோரிகள் கரைகின்றன. இத்துடன் உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் ஒரு வாரத்தில் ஓரு கிலோ கரைந்து விடும். பொதுவாக இப்போதுள்ள வாழும் சூழலில்  உடற்பயிற்சிக்கு நேரம் அதிகம் ஒதுக்க இயலாது. அதுபோல எல்லோராலும் ஓட்டப் பயிற்சி, நீச்சல், ஜிம்முக்குச் சென்று பயிற்சி எடுத்தல் என்பதும் இயலாத காரியம். ஆனால் நடை பயிற்சி அனைவருக்கும் ஏற்ற ஒன்று. ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது.

இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து ஆறு மாதங்களுக்குள் 5, 6 கிலோ மீட்டர் நடக்கப் பழகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்து வரும் பொழுது இருக்கும் எடையை சற்றுக் குறைத்து எடை கூடுவதை முற்றிலும் தவிர்த்து உடலை ஸ்லிம்மாக, பலமாக வைத்துக் கொள்ளலாம்.

நடைப் பயிற்சியுடன் தலைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் என்று கூறப்படும் நடைப் பயிற்சி, ஓட்டம் மற்றும் சைக்கிளில் செல்லுதல் போன்றவை 60 சதவீதம் வரை தசைகளை வலுவாக்கும். புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள் 40 சதவீதமும் செய்ய உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம் எனினும் காலை வேளை மிகச் சிறந்தது. உற்சாகமும் நாள் முழுவதும் கிடைக்கும். காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் பொழுது எண்டாபின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்தால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுக்கும். முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்து வந்து அதன் பின்பு தான் ஜிம் பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும். அதுவும் உடற்பயிற்சி தரும் ஆசிரியர் அல்லது டிரெய்னர் அனுமதியுடன் மட்டுமே பளு தூக்குதல் போன்ற கடினமான பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் காபி, டீ அருந்தக் கூடாது. 20 நிமிடங்கள் கழிந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் குடித்தால் போதுமானதே. அதுபோல சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உணவு உட்கொண்டு இரண்டு மூன்று மணி நேரம் கழித்துத் தான் உடற்பயிற்சி செய்யலாம். அதிக அளவு உடற்பயிற்சி செய்வதனால், சீக்கிரமே உடல் எடை குறைக்க முடியும். ஆனால் இம்முறை உடலுக்கு ஏற்றதல்ல. எல்லா நேரங்களிலும் நாம் இது போல் அதிக அளவு, அதிக நேரம் என்று உடற்பயிற்சி செய்ய இயலாது. எனவே தினமும் 300 முதல் 500 கலோரிகள் எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்து வந்தால் போதுமானது.


Spread the love