சர்க்கரையை கட்டுப்படுத்தும் கீரை

Spread the love

கீரைகள் ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்களின் சுரங்கம். வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீசியம், பீட்டாகரோட்டின், நுண்ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் கீரைகளில் நிறைந்துள்ளன. கலோரி மிகக் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கிறது, புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதிக மக்னீசியம், குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்டதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

அரைக்கீரையில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளன. இந்தக் கீரை நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்துக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது. அரைக்கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், சளி, இருமல் நீங்கும். நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும். சோர்வைப் போக்கும். உடலுக்குச் சுறுசுறுப்பளிக்கும்.

சிறுகீரையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன. புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. சிறுநீர்க்கடுப்பு, கண் எரிச்சலைப் போக்குகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகையைப் போக்கும். பித்தம் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கும். காசநோயைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.

வெந்தயக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். வாயுக்கோளாறைச் சரிசெய்யும். செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரைநோயைக் கட்டுப் படுத்தும். எலும்புகளை வலுவாக்கும். பற்கள் உறுதியாகும்.

முருங்கைக் கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. முருங்கை கீரையை உணவில் சேர்ப்பதால் எலும்பு, பற்கள் வலுப்பெறும். ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையைப் பெருக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும். கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையில், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. இந்தக் கீரை காசநோய், கண் நோய், உடல் உஷ்ணம், வாதம், கபம் ஆகியவற்றைப் போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும். ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூலச்சூடு நீங்கும். பித்த மயக்கம், கைகால் எரிச்சலைப் போக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். கல்லீரல் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

பசலைக் கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன. நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு, பால்வினை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வாகும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு உகந்தது. சிறுநீரைப் பெருக்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும். தைராய்டு பிரச்னைகள் குணமாகும். கால்சியம் குறைபாட்டால் உண்டாகக்கூடிய அனைத்துவிதமான நோய்களையும் போக்கும். கர்ப்பப்பைவாயில் ஏற்படும் புண்களைச் சரிசெய்ய உதவும். வெள்ளைப்படுதல் பிரச்னையைப் போக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கைத் தடுக்கும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால், ஆண்களின் விந்து தானாக வெளியேறுவது தடுக்கப்படும்.

முடக்கத்தான் கீரையில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால், 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது. பற்கள் உறுதியாகும். எலும்புகள் வலுப்படும். எலும்பு மஜ்ஜை ஆரோக்கியம் மேம்படும். நரம்புமண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வாதத்தைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, இடுப்பு எலும்புகள் வலுவாகும். கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். உடல்வலி குறையும்.

முளைக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி, ஆக்சாலிக் அமிலம் உள்ளிட்டவை நிறைவாக உள்ளன. இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் உடல் வெப்பத்தைக் குறைக்கக்கூடியது. முளைக்கீரை வயிற்றுப் புண், அல்சர் பிரச்னையைக் குணமாக்கும். குழந்தைகளுக்கு முளைக்கீரை சூப் கொடுக்கலாம். இதனால், அவர்களது உயரம் மற்றும் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து, நீரைப் பாதியாகச் சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகும்.


Spread the love