நாளை படித்துக் கொள்ளலாம் என்று எந்தப் பாடத்தையும் தள்ளிப் போடாதீர்கள். அது பாடச் சுமையை அதிகரிக்கவே செய்யும். அன்றைய பாடத்தை அன்றே படித்து விடுவதுதான் நல்லது.
அன்று ஆசிரியர் வகுப்பில் நடத்தவிருக்கும் பாடத்தைப் புரிந்தும் புரியாமல் காலையிலேயே ஒருமுறை வீட்டில் நீங்கள் நோட்டமிட்டுச் சென்றால் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடம் எளிதாகப் புரியும்.
படிக்க வேண்டிய பாடங்களைத் தேதி, நேரம் போட்டு அட்டவணை தயார் செய்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் தேர்வு ரொம்ப ஈ.ஸி.
சாட்டிங், குறுஞ்செய்தி, வெட்டி அரட்டை ( நேரில், செல்போனில் ) பகல் உறக்கம் போன்றவற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டு பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
மெடிக்கல் அல்லது இன்ஜினியரிங் இவற்றில் உங்கள் ஆசைக் கனவு எதுவோ அதை அடைந்தே தீர வேண்டும். அதற்கான பலப் பரீட்சைதான் இந்தத் தேர்வு என்பதை அடிக்கடி மனதில் நிறுத்துங்கள்.
முதல்நாள் படிக்காமல் போன பாடத்தை மறுநாள் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படித்து முடிக்கப் பாருங்கள், பாடச் சுமையும் பாவச் சுமைபோல்தான்.
அக்கம் பக்கத்து விசேஷம், சொந்தக்காரர்கள் கல்யாணம் இவற்றைத் தவிர்த்திடுங்கள்.
வகுப்பில் மாதாந்திரத் தேர்வு வைப்பதுபோல் நீங்கள் உங்களுக்கு வீட்டில் வாராந்திரத் தேர்வு வைத்துச் சுயமாகத் தேர்வு எழுதிப் பழகுங்கள்.
கூடிப் படிக்கும் பழக்கம் மாணவர்களிடம் உண்டு. ஆனால், இரண்டு பேருக்கு மேல் சேராதீர்கள். எண்ணிக்கை அதிகரிக்கும்போது வெட்டி அரட்டையும் அதிகரிக்கும்.
ஆசிரியர்களிடம் மிக நட்பாக இருங்கள். பாடத்தில் எந்தச் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.