ஸ்ட்ரெஸ்ஸினால் வரும் சிக்கல்கள்

Spread the love


மனநலம் தொடர்பாகப் பேசுகின்ற போது உளவியல் மருத்துவர்கள் டென்ஷன் (Tension) ஸ்ட்ரெஸ் (Stress) அங்க்ஸைட்டி (Anxiety) என்று பல சொற்களைக் குறிக்கின்ற சொற்கள் தான் என்றாலும் அவை ஒவ்வொன்றிற்குமிடையே துல்லியமான வேறுபாடுகள் உள்ளன.

Stress என்ற சொல்லுக்கு நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு அழுத்த நிலை என்று பலர் பொருள் கொள்கின்றனர். இது முற்றிலும் சரியென்று சொல்ல முடியாது. இதை ஒரு மனநிலை சார்ந்த நெருக்கடி அல்லது ஸ்ட்ரெஸ் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

நடைமுறை வாழ்வில் இந்தச் ஸ்ட்ரெஸ் (Stress) சிறிதும் இன்றி எவராலும் செயல்பட முடியாது. இந்த ஸ்ட்ரெஸ் உடன்பாடாகவும் அன்றி எதிர்மறையாகவும் செயல்படக்கூடும். வெற்றிக்குக் காரணமாகவும் இருக்கலாம். வேதனையையும் உண்டாக்கலாம்.

தன் முனைப்பு, போட்டி, முன்னேற வேண்டுமெனும் துடிப்பு மற்றும் கவலை, துக்கம், அச்சம், உணர்ச்சிப் பெருக்கு போன்ற பல மனநிலை மாற்றங்களை எதிர் கொள்ளும் வகையில் நமது உடல் தன்னிச்சையாகத் தோற்றுவிக்கின்ற ஒரு நிலையே இந்த ஸ்ட்ரெஸ். இது மிகுகின்ற போது உடல் தனது தற்காப்பு நிலையில் தாழ்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் கடுமையான ஸ்ட்ரெஸ்ஸினால் சூழப்பட்டிருக்கும் போது நோய்கள் உங்களை எளிதாகத் தொற்றக்கூடும். உங்கள் மனதில் மிகுதியான ஸ்ட்ரெஸ்ஸைத் தோற்றுவித்துவிட்டு அதே நேரத்தில் உங்களை ஒரு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக்கினால் நீங்கள் அந்தத் தாக்குதலுக்கு எளிதாக இலக்காகி விடுவீர்கள்.

உடல் சார்ந்த நோய்களை ஸ்ட்ரெஸ் நேரடியாக உருவாக்குவதில்லை எனினும் நரம்பு மண்டலத்தையும், இதயத்தையும் இரத்தக் குழாய்களையும், தசைகள், திசுக்கள் மற்றும் பிற உறுப்புக்களையும் கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன் சுரப்புகளையும், மூளை வேதிகளையும் தூண்டிவிட்டு உடல் உள்ளம் உடல் என்ற சுழற்சியை ஏற்படுத்தி விடுகிறது.

உடல் களைப்புற்றோ உற்சாகமின்றியோ உடல் திறன் குன்றியோ இருக்கின்ற வேளைகளில் உங்கள் நோய் எதிர்ப்புத் திறனை மேலும் குறையச் செய்து ஆஸ்த்துமா, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மூட்டுவலி, முதுகு வலி போன்ற பல நோய்களை உண்டுபண்ணக்கூடும்.

ஆனால் இந்தச் ஸ்ட்ரெஸ் முற்றிலும் தீங்கானது, உடலுக்குத் தேவையற்றது எனவும் கூறி விடமுடியாது, குகைகளில் வாழ்ந்த கற்கால மனிதனைக் கொல்ல முயன்ற கொடிய விலங்குகளை எதிர்த்துப் போராட உதவியதும், போக்கு வரத்து மிகுந்த சாலையில் நடந்து செல்கின்ற போது எதிரே விரைந்து வந்த பேருந்து ஒன்று தாறுமாறாக ஓடத் தலைப்பட்டு நம்மைக் குறிவைத்து வரும்போது எட்டடி உயரம் தாண்டிக் குதித்துத் தப்பித்துக் கொள்ள உதவுவதும் இந்தச் ஸ்ட்ரெஸ்தான். உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் அவசியம் ஏற்படும் போது மனிதனது சக்திக்கு மிஞ்சிய செயல்களைச் செய்ய வைப்பதும் இந்த ஸ்ட்ரெஸ்த்தான் .
ஸ்ட்ரெஸ் தொடர்புடைய நோய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 1. மனதில் தோன்றும் அச்சத்தையும், செயல்களையும் உடலானது தனது வேதிப் பொருள் ஆயுதங்களால் எதிர்க்கிறது.
  2, அச்சத்திற்குரிய காரணம் நீங்கிவிட்டபோதும் இந்த வேதிப் பொருள்களின் செயல்பாடு நீடிக்கிறது.
 2. இந்நிலை நீடிக்கின்ற போது உடல் சோர்வடைகிறது. உள்ளுறுப்புக்கள் சேதமுறுகின்றன. ஆனால் உடல் இயக்கக் கோளாறுகள் அனைத்திலும் ஸ்ட்ரெஸ்க்குத் தொடர்பிருப்பதில்லை.
  உளவியல் அளவில் இந்நிலையில் ஒத்துக் கொள்ளப்பட்டாலும் உடலியக்க அளவில் குற்ற உணர்வு ஆழ்ந்த வருத்தம் மிகு இரத்த அழுத்தத்தையும், அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள் மார்பகப் புற்றையும், மூட்டு வலியையும் ஏற்படுத்தின என்று அறிவியலாரால் இன்றைய அளவில் மெய்ப்பிக்க முடிவதில்லை. ஏனெனில் இந்நிலைகளில் உடல் சேதம், மரபு வழிப் பண்பியல் கூறுகள் மற்றும் நுண்ணியிரிகளின் தொடர்பு ஆகியவைகளும் சேர்ந்தே உள்ளன. ஆனால் நோய், ஸ்ட்ரெஸ், தனிமனித செயற்பண்புகள் ஆகிய மூன்றும் இணைந்தே செயல்படுகின்றன என்று மெய்ப்பிக்கக் கூடிய சான்றுகள் பெருகிவருகின்றன என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே எத்தகைய செயற்பண்புகள் கொண்ட மனிதர்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடும் என்ற அட்டவணை ஒன்று தயாராகி வருகிறது.
  இந்தக் கணிப்பு 100 விழுக்காடும் சரியாகவோ துல்லியமாகவோ இருக்குமெனக் கூற முடியாவிட்டாலும் ஸ்ட்ரெஸினால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதய நோய்களும், இரத்த அழுத்தமும், வயிற்றுப்புண், ஆஸ்த்துமா, சரும ஒவ்வாமை, குழந்தையின்மை சிறு நீர்குழல் தொற்று, புற்று நோய் போன்றவைகள் ஏற்படுகின்ற வாய்ப்பு மிகுதியும் உண்டு.
  மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளில் பெரும்பான்மையோர் நோய்வாய்ப்படும் முன்னர் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஆட்பட்டவர்களே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் நோயாளிகளில் பலர் வெளிப்பார்வைக்கு அமைதியானவர்களாகத் தோன்றினாலும் தங்களது ஆத்திரத்தை சினத்தை வெளிக்காட்ட முடியாமல் அடக்கி வைத்திருப்பவர்களாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
  அடக்க முடியாத கடுஞ்சினம் அகந்தையும் ஆளுமை மோகமும் உடைய பெண்கள் ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்னும் மூட்டு வலிக்கு ஆளாகின்றனர். மண வாழ்வில் மனநிறைவில்லாதவர்கள், மணமுறிவு, மணவிலக்குப் பெற்றவர்கள், மனைவியைக், கணவனை இழந்தோர், தனிமைத்துயருக்கு ஆட்பட்டோரில் பலர் இதயத்தாக்கினாலும், மூளைத் தாக்கினாலும், உயர் இரத்த அழுத்தத்தினாலும் புற்று நோயாலும் இறந்து போகின்றனர்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love