வயிறு பிரச்னைகளுக்கு ‘சுக்கான்’

Spread the love

உணவில் தினமும் ஒரு கீரையை வகையை சேர்த்து வந்தால், ஆரோக்கியமாக வாழலாம். உணவே மருந்து; மருந்தே உணவு என்ற தத்துவத்தில் முக்கிய பங்கு கீரைக்கு உண்டு. நோய் தீர்க்கும்; நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கீரைகளுக்கு உண்டு. சில கீரைகளின் மகத்துவங்களைப் பார்ப்போம்..

முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் நிறைவாக உள்ளன. முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளைத் தூக்கி எறிந்துவிடுகின்றனர். இது தவறு. முள்ளங்கியைப்போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு ‘குன்மநோய்’ என்று பெயர். பெண்கள் தொடர்ந்து 48 நாட்களுக்கு முள்ளங்கிக் கீரையைச் சாப்பிட்டுவந்தால், இந்த வலி குறையும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். முள்ளங்கிக் கீரைச் சாற்றைத் 30 மி.லி தொடர்ந்து 21 நாட்கள் காலை வேளையில் பருகிவந்தால், சிறுநீரகக் கற்கள் நீங்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். கல்லீரல் நோய்கள் குணமாகும்.

அகத்திக் கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன. உடலில் உள்ள அதிகமான பித்தத்தைத் தணிக்கும். மூலச்சூட்டைக் குறைக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கும். உடலின் நச்சுக்களை நீக்கும், விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

சுக்கான் கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. குடல்புண்ணைக் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள்காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து. வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.

மணத்தக்காளி கீரையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன. குடல்புண், வாய்ப்புண்ணுக்குச் சிறந்த மருந்து. மனஅழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு நல்ல பலன் தரும். உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.

லெட்யூஸ், நிறைய நார்ச்சத்தும், செல்லுலோசும் கொண்டது. லெட்யூஸில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டாகரோட்டின் இதயத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். லெட்யூஸில் பல வகைகள் உள்ளன. ரோமெய்ன், கிறிஸ்ப்ஹெட், பட்டர்ஹெட், ரெட் அண்ட் கிரீன் லீஃப் ஆகியவை சில வகைகள். ரோமெய்ன் வகை பொதுவாகக் கிடைக்கும். லெட்யூஸ் உடல்பருமனைக் குறைக்க உதவும். செரிமானத்தையும் சீராக்கும். லெட்யூஸில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள பித்தத்தை அகற்றவல்லது. இதன் மூலம் உடலின் கொழுப்பும் நீங்கும்.

வல்லாரை கீரையில் கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. சூடும் அல்லாத குளிர்ச்சியும் இல்லாத சமநிலை இயல்பு கொண்ட கீரை இது. மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, சிறப்பாகச் செயல் படவைக்கும். நினைவுத்திறனை அதிகரிக்கும். ஆட்டிசம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கவனச்சிதறல்களைக் குறைக்கும். உடல்சோர்வு, நரம்புத்தளர்ச்சி, பார்வை மங்குதல் ஆகியவற்றைக் குணமாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகும்.

தூதுவளை கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. தூதுவளை சூடு என்பதால், இதை மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாகவும் செய்து குடிக்கலாம். ஜலதோஷம் நீங்கும். நுரையீரலைச் சுத்தப்படுத்தும் தன்மை, இந்தக் கீரைக்கு உண்டு. தொண்டைக் கமறல், தொண்டைப்புண்ணைக் குணமாக்கும். தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த்தொற்று குணமாகும். நரம்புகளை வலுப்படுத்தும்.

கரிசலாங்கண்ணியில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளது. இது மஞ்சள்காமாலையைக் கட்டுப்படுத்தும். கல்லீரலைக் காக்கும். காலையில் கரிசலாங்கண்ணி சாறைப் பருகிவந்தால் பித்தப்பைக் கற்கள் மறையும். பித்தநீர் சரியாக சுரக்க உதவும். கரிசாலை இலைச்சாற்றைக் காலை, மாலை பருகிவந்தால், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

பாலக் கீரையில் வைட்டமின் கே, ஏ, பி, சி கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்புச்சத்து, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. குளிர்ச்சித்தன்மை கொண்டது. உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது. வெள்ளைப்படுதல் குணமாகும்.

மல்டி விட்டமின் கீரை எனப்படும் தவசிக் கீரையில் இரும்புச்சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவில் இருக்கின்றன. ரத்தசோகையைப் போக்கும். உடல் புத்துணர்வு பெறும். ஆண்மைக்குறைபாடு நீங்கும். இருமலைப் போக்கும்.

பருப்புக் கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளன. அனைவரும் சாப்பிட ஏற்றது. பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க உதவும். வெள்ளைப்படுதல், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைப் போக்கும். சீதபேதி, ரத்தபேதி குணமாகும். தலைவலி, காய்ச்சல் நீங்கும். கல்லீரல் வீக்கம் குறைய உதவும். பருப்புக் கீரை சாப்பிடுவதால், மது, புகை, போதை பழக்கத்திலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

துத்திக் கீரையில் வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இதன் கீரை, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும். மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமடையும். பார்வைத்திறனை மேம்படுத்தும். துத்திக் குடிநீரைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் சிறிதளவு பருகி வந்தால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்கள் கரையும்.

புளியாரைக் கீரையில் வைட்டமின் சி மற்றும் கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளன. உடல் வெப்பத்தைத் தணித்துப் பசியைத் தூண்டும். பித்த மயக்கம், வயிற்றுப்போக்கு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலக்கடுப்பு, மூலநோய் பாதிப்புகள் நீங்கும். வாத நோய்கள் தீரும். சீதபேதி குணமாகும். தோலில் உண்டாகும் மருக்கள் நீங்கும்.

புளிச்சக் கீரையில் வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. ஆரம்பநிலை காசநோயைக் குணமாக்கும். ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதய நோய்கள், நரம்புத்தளர்ச்சி, வாதம், ரத்தஅழுத்தம் உள்ளிட்டவற்றைப் போக்கக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். தேமல், படை போன்ற தோல் நோய்களைக் குணமாக்கும்.


Spread the love