பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வயிற்றுக் கோளாறுகள் தீர்வுகள்.

Spread the love

சாதாரணமாக இருக்கிற பெண்களுக்கு வயிற்றுக் கோளாறு இருந்தாலே கவனமாக பார்க்க வேண்டும். அதுவும் கர்ப்ப காலம் என்றால் வயிறு சார்ந்த எந்த உபாதையாக இருந்தாலும் உடனடியாக கவனிப்பது நல்லது.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது தொடக்க வாரங்களில் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களாலும் கர்ப்பத்தின் பின் பகுதியில் கருப்பை இரைப்பையை அழுத்துவதாலும் ஏற்படுகிறது. பத்தில் எட்டு பெண்கள் கர்ப்பத்தின் போது ஏதாவதொரு காலகட்டத்தில் அஜீரணக் கோளாறுக்கு ஆளாகிறார்கள். நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், குமட்டல் போன்ற அஜீரண அறிகுறிகள், பொதுவாக உணவு உண்ட பின் ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் அஜீரணத்தை அறவே அகற்றிவிட முடியும். கர்ப்ப காலம் என்பதால் அஜீரணத்திற்கு சிகிச்சை வேண்டியதாக இருந்தால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை அவசியம். சுய சிகிச்சை கூடாது.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வயிறு மற்றும் குடலில் அடிக்கடி ஏற்படும் நோய்கள் இருவகைப்படும். ஒன்று கர்ப்பத்தினால் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றது இதர வயிறு சார்ந்த பிரச்சனைகள் என்று சொல்லலாம்.

பொதுவாக, கர்ப்ப காலதின் முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக தலை சுற்றல் வாந்தி, பசியின்மை, அதிகம் ஏற்படும். ஒரு சில உணவு வகைகளைக் கண்டால கூடப் பிடிக்காத நிலையிருக்கும். இதற்குக் காரணம் உடலில் ஏற்படும் ஹாரமோன் தொடர்பான மாற்றங்கள்தான். பிட்யூட்டரி சுரப்பியில் இருக்கும் மனிதக் கரு வெளியுறை கருவகவூக்கி அதிக அளவில் சுரப்பதால் இத்தகைய உபாதைகள் ஏற்படுகின்றன. இதற்கென்று தனியாக எந்தவித வைத்தியமும் இல்லை. புளிப்புச் சுவையுடைய பண்டங்களை உட்கொள்வதால இந்த உபாதைகள் சிறிது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனாலேயே கர்ப்ப காலத்தில் பெண்கள் இஞ்சி, மாங்காய், எலுமிச்சை போன்றவைகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.

அந்த மாதங்களிலும் பெண்களுக்கு அவ்வளவாக உணவு உண்ணப் பிடிக்காது. ஆனால், நேரம் தவறாமல் சாப்பிடுவதும் இந்த உபாதைகளைத தடுக்கும் வழிகளில் முக்கியமான ஒன்று. மொத்தமாக ஒரே வேளையில் உணவினை உண்பது என்று இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையோ சிறிது சிறிதா உண்ணலாம். சாப்பாட்டைத் தவிர்த்தால் உணவுக் குழாயில் புண்கள் ஏற்பட்டு, மீண்டும் அது வாந்தி மயக்கம் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்து விடக் கூடும் ஜாக்கிரதை.

பெண்களுக்கு கர்ப்பப்பை விரிவடைவதால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை நெஞ்சுக்குழி அடைத்துக் கொள்வது. குழந்தையின் தலையானது அடிப்புறமாகத் திரும்பாதபோது இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே இதனைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கர்ப்ப காலத்தில் முக்கியமான வயிறு சம்பந்தப்பட்ட உபாதையாகக் கருதப்படுவது, மலச்சிக்கல், நிறை மாத காலத்தில் அதிகப்படியாக சுரக்கும் புரோஜெஸ்ட்டி ரோன் ஹார்மோன் பெருங்குடலில் உணவின் நகர்தலைக் கட்டுப்படுத்துகிறது. நீர்ச்சத்தினையும் உடல் அதிக அளவில் உறிஞ்சிக் கொண்டு விடுவதால், அதிக அழுத்தம் காரணமாக மலப்பாதையில் சிக்கல் ஏற்படுகிறது. கூடுதலாக, அந்தக் காலங்களில் எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்து மாத்திரைகளும் இதற்கு ஒரு காரணி. இதிலிருந்து மீள, அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உடலுக்குத் தேவை. கீரைத்தண்டு, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

சில நேரங்களில் அதிக மலப்போக்கு பிரச்சனையும் ஏற்படுவது உண்டு. தொற்று டயேரியாவால் ஏற்படும் இதன் உச்ச கட்டத்தில் மலத்தில் ரத்தப் போக்கும் காணப்படும். இது அதிகமானால் மூலத்தால் பாதிக்கப்படவும் வாய்ப்பு உண்டு. இந்தக் காலங்களில் உடலில் ரத்தச் சோகை ஏற்படலாம். இந்த நோய் தீர்க்க மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியம்.

உணவு விஷயத்தில் கவனமாக இருந்துவிட்டால், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தாற் போலத்தான். ஆகவே, பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதே நல்லது.


Spread the love
error: Content is protected !!