வயிறு மண்ணீரலின் வலது பக்கமும், கல்லீரலுக்கு கீழேயும் உள்ளது. உணவுக்குழாய் டியோடீனம் இவற்றின் இணைக்கும் பகுதி. டியோடீனம் சிறுகுடலின் முன் பகுதியாகும். வயிற்றின் மேல் பகுதியில் உள்ள ‘வால்வ்’ கார்டியாக் ஆரிஃபிஸ். கீழ் பகுதியில் உள்ளது பைலோரிக் ஸ்பிங்டர். உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை வயிற்றினுள்ளே அனுப்பி வைப்பது கார்டியாக் ஆரிஃபிஸ் வால்வு. நாம் சாப்பிட்ட உணவு உணவுக் குழாயிலிருந்து வயிற்றில் நுழைய கார்டியாக ஆர்ஃபிஸ் வால்வு திறக்கும். அதே சமயம் வயிற்றின் கீழுள்ள வால்வு மூடியிருக்கும். வயிற்றின் முக்கிய வேலை வாயில் ஆரம்பிக்கப்பட்ட ஜீரண வேலைகளை தொடருவது. வயிறு சுருங்கி விரியும் தன்மை உடையது.
இந்த வயிற்றுக்காகத்தான் உலகின் எல்லா ஜீவராசிகளும் உழைப்பது. இரைப்பையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். அவை – கார்டியா, ஃபண்டஸ் மற்றும் பைலோரிக் ஆண்ட்ரம் இரைப்பையின் மேல் பகுதி உணவுக்கிடங்கு. உணவை சேமித்து வைக்கப்படும் பகுதி. ஃபண்டஸ் பகுதியில் நரம் அறியாமல் விழுங்கும் காற்று, உணவுக்குமேல் மிதந்து கொண்டிருக்கும். மூன்றாவது பகுதி பைலோரிக் ஆண்ட்ரம் வழியாக சிறு குடலுக்கு உணவை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளுகிறது.
வயிறு என்ற வார்த்தையை பேச்சு வழக்கில் நாம் சிறுகுடல், பெருங்குடல் இவைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக குறிப்பிட உபயோகிக்கிறோம். மருத்துவ மொழியில் இதை இரைப்பை என்றும் கூறலாம்.
வயிற்றின் ஜீரண வேலைக்கு உதவ, வயிற்றிலிருந்து கேஸ்டிரிக் ஜீஸ் சுரக்கும். வயிற்றின் சுவர்களை நான்கு சவ்வுப் படலங்கள் மூடி இருக்கும். அவை
மியூகோஸா – இது வயிற்றில் மட்டுமல்ல, வாயில், சுவாசப்பாதைகள், பித்த நீர், கணைய நீர் இவை வரும் நாளங்களிலும் இருக்கும் சவ்வுப் படலம். ஈரமான இந்த படலம். மேற்பரப்பு திசுக்களின் உதவியால் “சளி” யை சுரக்கும் சுரப்பிகளை உடையது. இந்த படலத்தில் மியுக்கஸ் ஜெல் என்ற அடர்த்தியான “கோழை” போன்ற பொருளால் பரவியுள்ளது. மியூகோஸாவில் தான் அமிலம் சுரப்பதால், வயிற்றின் சுவர்களை அமிலம் தாக்காமல் இருக்க, இந்த மியூக்கஸ் ஜெல் கவசம் போல் காப்பாற்றுகிறது.
சப் மியூகோஸா – இந்த படலம் ஈரமான சளி சவ்வுக்கு கீழே உள்ள சவ்வு. ரத்த நாளங்கள் உள்ளது.
மஸ்குலாரிஸ் – இந்த தசையால், உணவுப் பொருள் சீரணமாக ஏதுவாக உணவுக் குழம்பு சுற்றப்படும். அதற்காக மஸ்குலாரின் தசைகள், “கிரைண்டர்” போல், அசைந்தாடி, சுருங்கி விரிந்து, உணவுப் பொருட்களை உயர் அழுத்தத்தில் தூளாக்கும்.
சீரோஸா – இது வயிற்றின் வெளிச்சுவரின் சவ்வு. இது இரண்டு பகுதியாக செயல்படும். அவயங்கள் (உதாரணமாக வயிறு) அமைந்துள்ள குழியை மூடும். அவயங்களையும் சுற்றிலும் மூடும். இந்த சவ்வு, ரத்தத்திலிருந்து கிடைக்கும் மெல்லிய திரவம்.
வயிற்றில் சுரக்கும் ஜீரண சாறு
உண்ட உணவை சீரணிக்க அமிலங்கள், என்ஜைம்கள் தேவை. வயிற்றில் உள்ள சுரப்பிகள் தினமும் 11/2 லிட்டர் வரை கேஸ்ட்ரிக் ஜீஸ் சுரக்கப்படுகிறது.
பெப்சின் அமிலத்தன்மை உள்ள சூழ்நிலையில் தான் நன்றாக செயல்படும். மாமிசஉணவில் உள்ள கொல்லாஜென் என்ற புரதத்தை, பெப்சின் என்ஜைமால் மட்டுமே ஜீரணிக்க முடியும்.
வயிறு சுரக்கும் மற்றொரு என்ஜைம் “ரென்னின்”. இதை நேரடியாக வயிறு சுரப்புவதில்லை. வயிறு சுரக்கும் செயலற்ற “ப்ரோரெனின்” என்ற சுரப்பை, ஹைட்ரோகுளோரிக் அமிலம் ரென்னீனாக மாற்றுகிறது. இந்த ரென்னின் பால்புரதத்தை, கால்சியம் அணுக்களின் உதவியுடன், திரவத்தில் கரையாத கேசின் ஆகமாற்றுகிறது. ரென்னின் பால் குடிக்கும் குழந்தைகளின் வயிற்றில் நிறைந்திருக்கும். பாலை கிரகிக்க உதவுவது இது தான்.
வயிற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் –
ஜீரண சாறுகள் தவிர வயிறு ‘ம்யூகஸ்’ என்ற சளி, கோழை போன்ற பொருளை சுரக்கிறது. இதனால் வயிற்றின் சுவர்கள்; அமிலம், என்ஜம் தாக்குதலால் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது. வயிறு ஒரு க்ளைகோ புரோட்டீன் என்ற இயற்கையான ஒன்றையும் சுரக்கிறது. இந்த காரணி வைடமின் பி – 12 ஜீரணித்து, உடலில் கிரகிக்க உதவுகிறது. இல்லாவிடில் சோகை உண்டாகும். வயிற்றின் ‘பைலோரிக்‘ பகுதியிலிருந்து, காஸ்ட்ரின் என்ற ஹார்மோனும் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரக்க தூண்டுவது உணவு. பதிலுக்கு இந்த ஹார்மோன் ஜீரண சாறுகளை சுரக்க தூண்டுகிறது.
சாதாரண நிலையில் வயிற்றின் கொள்ளளவு – ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை இருக்கும். நாம் சாப்பிடும் போது கூடுதலாக சாப்பிட்டாலும் இரைப்பை விரிந்து கூடுதல் உணவை ஏற்றுக் கொள்ளுகிறது. தேவைப்பட்டால் நான்கு லிட்டர் உணவைக் கூட விரிந்து ஏற்றுக் கொள்ளும்
வெறும் ஜீரண சாற்றை சுரப்பது மட்டுமில்லாமல் வயிறு சுழன்று, சுழன்று, தான் ஏற்றுக் கொண்ட உணவுக் கூழை நன்றாக கடைகிறது. இந்த சுழற்சியினால் உணவு கூழ் போல் ஆகிறது. இதை சிலீஹ்னீமீ (கைம்) என்பார்கள்.
வயிற்றில், அதாவது இரைப்பையில், உணவிலிருந்த புரதம் மாத்திரம் தான் பிரிக்கப்படும். கொழுப்பு மற்றும் ஸ்டார்ச், இவைகளை ஜீரணிப்பது சிறுகுடல்.