ஸ்டெதாஸ்கோப் உருவான கதை

Spread the love

ஸ்டெதாஸ்கோப்பை காதில் மாட்டாமல், கழுத்தில் மாட்டிக் கொண்டு நோயாளியின் இதயத் துடிப்பை பரிசோதிக்கும் காமெடி காட்சியை பழைய சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால், 1819ல் ‘ரெனே லென்னக்’ என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நோயாளியின் மார்பில் காதை வைத்தே இதயத்துடிப்பை தெரிந்து கொண்டார்களாம்.

ஆண் நோயாளிகளைப் பொறுத் தவரை இப்படிச் செய்யலாம். டாக்டர்களைப் பொறுத்தவரை எல்லா உறுப்புகளும் அவர்களுக்கு ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு இது சங்கடத்தைதான் வரவழைத்தது. இதிலும் இன்னொரு சிக்கல் மருத்துவர் லென்னக்குக்கு ஏற்பட்டது. பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அந்த நோயாளிப் பெண்ணின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார் ரெனே லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரீஸ் நகரில், நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.

இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனையைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். இதைப் பார்த்த லென்னக், ‘இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே’ என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.

இதை அடிப்படையாக வைத்து 1819ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப். அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.


Spread the love