முளைகட்டிய பூண்டு

Spread the love

தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை?

நீங்கள் எப்போதாவது உங்களுடைய பாட்டி சமையலறையில் செய்யும் வேலைகளை கவனித்திருக்கிறீர்களா? நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும், அவர்கள் ஒருபோதும் பழைய பூண்டுகளைத் தூக்கி வீசவே மாட்டார்கள். சருகைத் தவிர வேறு எதுவும் குப்பைக்குச் செல்லாது. அதிலும் முளைவிட்டு விட்டாலும் கூட, அதை தூக்கி வீசமாட்டார்கள். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பூண்டுக்குள் இருக்கும் ஈரப்பதம் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பித்ததும் முளைவிட ஆரம்பித்துவிடும். பூண்டு முளைவிட ஆரம்பித்ததும் நல்ல அடர்ந்த பச்சை நிறத்தில் வளர ஆரம்பிக்கும். அதுபோன்று வருவதற்கு முன்பாக லேசான மஞ்சள் நிறத்தில் துளிர்விட ஆரம்பிக்கும். அதன்பிறகு தான் பச்சை நிறம் துளிர்விடும். இந்த பச்சை நிறத்துக்குள் தான் அத்தனை மகத்துவமும் இருக்கிறது.

ஊட்டச்சத்துக்கள்

பூண்டின் இந்த பச்சை நிற முளைவிட்டதில் தான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்ற அத்தனை ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் தான் பன்னெடுங்காலமாக இது அற்புத மகத்துவம் நிறைந்த நீக்கவே முடியாத ஒரு பொருளாக நம் வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

நன்மைகள்

பூண்டை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்முடைய முன்னோர்கள் உணவிலும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இன்றளவும் கூட மக்கள் இதை மருத்துவப் பொருளாகக் கொண்டாடத் தான் செய்கின்றனர். நேரடியாக பூண்டையோ அல்லது அதற்கு நிகராக சப்ளிமெண்ட்டாகவோ சாப்பிட்டு வருவதன் மூலமாக இயற்கையாகவே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதய நோய்கள் உண்டாவதன் ஆபத்தையும் இயற்கையாகவே குறைக்கும் ஆற்றல் கொண்டது.

அலட்சியப்படுத்துதல்

பொதுவாக பூண்டு முளைவிட்டு விட்டபிறகு, அதை நாம் மிக எளிதாகத் தூக்கி எறிந்துவிடுவோம். அதை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. பல்வேறு ஆய்வில் வெளிவந்த முடிவின்படி, ஒரு விதை முளைக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குள் பல்வேறு புதிய புதிய காம்பவுண்ட்டுகள் உருவாகத் தொடங்கும். அந்த விதையைக் காப்பாற்றுவதற்காகவும் கூட பாதுகாப்பு வளையம் உருவாகும்.

மெட்டபாலிசம்

முளைக்க வைத்த ஐந்து நாட்களுக்கு உள்ளாகவே பச்சை நிற முளையை உங்களால் பார்க்க முடியும். இந்த முளைகள் நம்முடைய உடலின் மெட்டபாலிசம், செல் வளர்ச்சி மற்றும் செல் பாதிப்பு பிரச்சனைகளை சரிசெய்து உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கத் தொடங்கிவிடும்.  பூண்டை உணவில் சேர்க்கும்போது எப்படி பயன்படுத்துவோமோ அதேபோல் வழக்கமாக பயன்படுத்தலாம். துருவி சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். கொஞ்சம் பெரிதாக வளரவிட்டு, ஸ்பிரிங் ஆனியனைப் போன்று சாலட், சூப் மற்றும் ஃபிரைடு ரைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சத்யா


Spread the love
error: Content is protected !!