ராஜேஷுக்கு காலையில் ஜிம்முக்குப் போவதென்றால் ரொம்பவும் பிடிக்கும். அதாவது, தன் உடலை டிரிம்மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.
கல்லூரியில் படிப்பவன் ஆச்சே? இளமைக்கு ஏற்ப நல்ல உடற்கட்டுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லையே?
இந்த நிலையில், ஒரு நாள் ஜிம்மில் ராஜேஷ் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
வெயிட் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். எப்போதும், தான் தூக்கக் கூடிய அளவுக்கு வெயிட் போட்டு தூக்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது, அதே ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த ராஜேஷின் நண்பன் அருண் வந்து, ‘எத்தனை நாளுக்குத்தான் ஒரே வெயிட்டை தூக்கிக்கிட்டிருப்பாய், இன்னிக்கி கொஞ்சம் அதிக வெயிட் போட்டுத் தூக்கு’ என்றான்.
முதலில் தயங்கினாலும், கூடுதலாக 10 கிலோ எடையைத் தூக்க ராஜேஷ் முயற்சி செய்தான். அப்போது, நிலை தடுமாறி வெயிட்டுடன் அப்படியே கீழே விழுந்தான். கீழே விழுந்ததில், அவனது வலது காலில் சுளுக்கிக் கொண்டது.
‘என்ன ஆச்சு?’ என்று அருண் கேட்க, காலில் சுளுக்குப் பிடித்த இடத்தைக் காட்டினான். கொஞ்ச நேரத்திலேயே அந்த இடம் பெரிதாக வீங்கத் தொடங்கியது.
ஜிம் என்பதால், இதுபோன்று சுளுக்கு ஏற்படுவது சகஜம் தான். அதனால், ஜிம்மில் போதுமான மருத்துவ முதல் உதவி சிகிச்சைக்கான பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ராஜேஷுக்கு அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடற்பயிற்சிக் கூடம் என்று மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சுளுக்கு ஏற்படலாம். சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?.
கை, கால் மூட்டுகளைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் காயத்தைத்தான் சுளுக்கு என்கிறோம். ஏதோ ஒரு விபத்தினால், இந்த திசுக்கள் தங்களை அளவுக்கு அதிகமாக விரிவுபடுத்திக் கொள்ளும்போது, அவற்றில் ஓட்டை, விழுகிறது. சில சமயங்களில் அந்த திசுக்கள் முழுவதுமாகக் கிழிந்துவிடுகின்றன. மூட்டுகளில் உள்ள எலும்புகளை, அவற்றுக்குரிய இடத்தில் பொருத்தி வைப்பது இந்த திசுக்கள் தான். அந்த வகையில் சுளுக்கு ஏற்பட்ட பிறகு அத் மூட்டை அசைக்கும்போது வலி அதிகமாகிறது.
பெரும்பாலும், கணுக்கால், கால்முட்டி, பாதத்தில் உள்ள வளைவுப் பகுதிகளில் தான் அதிகமாக சுளுக்கு ஏற்படுகிறது. சரி, சுளுக்குக்கு என்ன முதல் உதவி?.
* சுளுக்கு ஏற்பட்டு வீக்கமாக இருக்கும் பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். நேரடியாக ஐஸ் கட்டியை வைக்க வேண்டாம். ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து அதைக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சுமார் அரை மணி நேரத்துக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தொடர்ச்சியாக ஒத்தடம் கொடுப்பதைவிட நடுநடுவே கொஞ்சம் இடைவெளி விட்டுக் கொடுப்பது நல்லது.
* வீங்கிய இடத்தில் ஒரு எலாஸடிக் பட்டை அல்லது பேண்டேஜை அழுத்தமாகச் சுற்றுங்கள். அப்போது, வலி அதிகமானால் இதைச் செய்ய வேண்டாம்.
* சுளுக்கு ஏற்பட்ட காலை கொஞ்சம் உயரமாகத் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* சுளுக்கால் பாதிக்கப்பட்ட கால் அல்லது கை மூட்டை சில நாள்களுக்குப் பயன்படுத்தாமல் ஓய்வு கொடுங்கள்.
* சுளுக்கு ஏற்படும்போது, ‘படக்’ என்று ஏதாவது சத்தம் கேட்டிருந்தாலோ, மூட்டை முழுவதுமாகப் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காரணம், மூட்டைச் சுற்றியுள்ள திசுக்கள் முழுவதுமாகக் கிழிந்திருக்க வாய்ப்பு உண்டு.
* மற்றபடி, சாதாரண சுளுக்கு என்றால் மேற்படி முதல் உதவிகளைச் செய்து விட்டால் போதும். இரண்டு மூன்று நாள்களில் சரியாகிவிடும்.
&& ராஜ்வேலவன்.