ஸ்பைருலினா

Spread the love

ஸ்பைருலினா (Spirulina) என்பது ஒரு நுண்பாசி. நம்மவர்களில் சிலர், எளிதாக இதை சுருள்பாசி என்று அழைக்கின்றனர். இப்பாசி, இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 31/2 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது. முதன் முதலாக வான் வெளியில் உள்ள கார்பன்டை ஆக்சைட்டையும், சூரிய ஒளியையும் கொண்டு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது இது. சூழலைச் சரிசெய்யும் சமூகச் சேவையைச் செய்தது ஸ்பைருலினா. இதனால் நாம் சுவாசிக்கவும் உயிர் பிழைக்கவும் முடிந்தது. இவற்றுக்கெல்லாம் காரணமான, மிக முக்கியமான ஒரே ஒரு செல்லையே முழு உடம்பாகக் கொண்ட, புரதம் செறிந்த நுண் தாவரமான இதைப் பற்றி (Single cell protein) எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்பது நோக்கமல்ல; அதன் ஆக்கத்தையும் பயன்களையும் பெற்றுப் பலரும் தம் உடல் நலம் காக்க வேண்டும் என்பதே ஏக்கம்!

இந்தச் சிறிய ஸ்பைருலினா நுண்பாசிக்கு, புரதத்தை (protein) உற்பத்தி செய்யும் திறன் அதிகம். அதனால், இதில் 65 முதல் 70% புரதம் இருக்கின்றது. புரதத் திறன், இதனை வளர்க்கும் முறையைப் பொறுத்து மாறுபடுகிறது. இதிலுள்ள புரதம், வேறு சில தாவரங்களிலோ அல்லது பல விலங்கினங்களிலோ இருக்கும் புரதத்தைப் போன்றதல்ல. உயிரியல் பார்வையில், இது முழுமை பெற்றது. எப்படியெனில், இருக்க வேண்டிய அனைத்து வகையான (எட்டு) அவசியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) இதில் சரியான விகிதங்களில் இருக்கின்றன. மேலும், அவசியமற்ற அமினோ அமிலங்களான (Non – Essential Amino Acids ) 12இல் பத்தும், தேவைக்கேற்ப தரமான தாதுப்பொருட்களும் (Minerals), பத்து வகையான வைட்டமின்களும் (Vitamins), முக்கியமான நிறமிகளும் (Pigments), கொழுப்பும் (Fat), மாவுச்சத்தும் (Carbohydrate) சீராக உள்ளன.

இவற்றின் செயல்பாடுகளும், பயன்பாடுகளும், மக்களின் உடல் நலத்தோடு பின்னிப் பிணைந்துள்ளதால், அனைவரும் சுருள்பாசியைக் கட்டாயம் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். இதன் அருமையைத் தெரியாமல் இருப்பதும், பயன்களைப் புரியாமல் தவிப்பதும், மனிதகுலத்துக்குப் பெரும் இழப்பென்பதால், அந்த இழப்பைத் தடுத்திடவும், மக்களெல்லாம் பயனுறும்படி, தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

அமினோ அமிலங்களும் (Essential Amino Acids)நமது உடலுக்குத் தேவையான சிலவற்றைத் நமது உடலே தயாரித்துக் கொள்ள முடியும். ஆனால், அமினோ அமிலங்களைத் தயாரித்துக் கொள்ள இயலாது. இவை அனைத்தும், எளிதில் ஜீரணமாகும் வகையில், ஸ்பைருலினாவால் தயாரிக்கப்பட்டுத் தன்னில் வைக்கப்பட்டுள்ளதால், இவற்றை எல்லாம் ஸ்பைருலினா மூலம் பெற்றுக் கொள்வது நமது கடமை.

ஸ்பைருலினாவில் உள்ள எட்டு அமினோ அமிலங்களும் அவற்றின் செயல்பாடுகளும்

ஐசோலியூசின் (Isoleucin) – இது, முறையான உடல் வளர்ச்சிக்கும், புத்திக் கூர்மைக்கும் அவசியம் தேவை.

லியூசின் (Leucin) – இது மூளை வேலை செய்வதைத் தூண்டிவிடவும், உடலின் சக்தியைச் சிறக்கச் செய்யவும் உதவுகிறது.

லைசின் (Lysine) – இது இரத்தத்தில் ஆன்டிபாடிகளைக் (Antibodies) கட்டுவதற்கும், இரத்த ஓட்ட மண்டலத்தைச் சீராக்கவும், உடலில் செல்கள் இயல்பாக வளரவும் உதவுகின்றது.

மெத்தியோனின் (Methionine) – இது ஈரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நரம்பு மண்டலத்தில் எவ்வித அழுத்தமும் (Stress) ஏற்படாமல் தடுத்து, நரம்புகள் இயல்பான நிலையில் இருக்கவும் செயல்படவும் செய்கிறது.

ஃபினைலலனின் (Phenylaline) – நம்மிலுள்ள தைராய்டு (Thyroid) என்னும் சுரப்பி, தைராக்சின் என்ற திரவத்தைச் சுரக்கவும், அதனால் வளர்ச்சி (Metabolism) உண்டாகவும் வழிவகை செய்கிறது.

திரியோனின் (Threonine) – சிறுகுடல் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவும், அதாவது உணவு சரியாக ஜீரணமாகவும் அதன் பயன்கள் உடலில் சேரவும் செய்கின்றது.

ட்ரிப்டோஃபேன் (Tryptophane) – வைட்டமின் ‘ H ‘ யைப் பெரிதும் பயன்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருந்து, தேவையற்ற உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து, அமைதியைத் தருகிறது.

வேலைன் (Valine) – மூளையைத் திறம்படச் செய்து, செயல்பட வைக்கிறது. உடல் திசுக்கள் இணைந்து செயல்படவும் உதவுகிறது.

இவை அனைத்தும் சிறப்பாக நடைபெற நமக்கு இத்துணை அமினோ அமிலங்களும் அடங்கிய ஸ்பைரூலினா போதுமானது. ஸ்பைரூலினாவை தினசரி உபயோகித்தால் மேற்சொன்ன அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக நடைபெறும்.


Spread the love