தெய்வீக மரங்கள்

Spread the love

நமது கிராமங்களில், அவற்றின் குளக்கரைகளில் அல்லது ஏரிக்கரைகளில் ஓங்கி வளர்ந்த அரச மரமும், வேப்ப மரமும், கூடவே பிள்ளையார் (அல்லது நாகம்) இவைகள் நிச்சயமாக இருக்கும். இந்த இரண்டு மரங்கள் தமிழ் மக்களால் போற்றி வளர்க்கப்படுகின்றன. குளம், ஏரி இவை இல்லாத ஊர்களில், கோவிலின் இந்த மரங்களை காணலாம். காரணம் இம்மரங்கள் தெய்வீக தன்மையுடையதாக கருதப்படுகின்றன. அரசமரத்துடன் வேப்ப மரமும் இருப்பதற்கு காரணம் – அரசு ஆணினம் வேம்பு பெண்ணினம் – இவை சேர்ந்திருந்தால் ஊருக்கு நல்லது என்று நம்பப்படுகிறது.

அரசமரம்: “அரசமரத்தை சுற்றினாளாம், அடி வயிற்றை தொட்டாலாம்“ என்று ஒரு பழமொழி உண்டு. அரசமரக்காற்று பெண்களின் குழந்தை பேறின்மை குறையை நீக்கவல்லது. இதனால் பெண்கள் அரசமரத்தை சுற்றினால் அதன் காற்று மேலே படும். அரசமரத்தின் இலைக் கொழுந்துகளை பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சித்த வைத்தியத்தில் – இந்த மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து, பிள்ளையேறு இல்லாத பெண் மணிகளுக்கு எலுமிச்சபழம் அளவு மூன்று நாள், சூதகத்திற்கு முன் கொடுத்து வர, கர்ப்பம் உண்டாகும் – என்று சொல்லப்படுகிறது.

அரச மரத்தின் வித்துக்களை பொடிசெய்து உட்கொண்டுவர மலச்சிக்கல் போய், நல்ல பசி எடுக்கும். இந்த மரப்பட்டையும் மருத்துவ குணங்கள் உடையது.

அரச மரத்தை விறகிற்காக அல்லது வேறு பல உபயோகத்திற்கு பயன்படுத்துவது வழக்கமில்லை. அதன் குச்சிகள் ஹோமம் போன்ற புண்ணிய காரியங்களுக்கு எரிபொருளாக பயன்படுகிறது.

வேம்பு

இதன் பயன்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மன மகிழ்ச்சியை தரும். கோடையின் வெய்யிலுக்கு, வேப்பமரத்திலிருந்து வரும் குளிர்ந்த காற்று இதமளிக்கும். வேம்புல் உபயோகப்படாத பொருட்களே கிடையாது. வேம்பு ஒரு சிறந்த கிருமி நாசினி. வீட்டில் வேப்ப இலையின் புகையை போட்டோமானால் கொசுக்கள் மறையும். வேப்பம் பூவினால் செய்த ரசம் உடலுக்கு நல்லது. வேப்பங் கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணை தோல் வியாதி, புண்களை போக்கும். அம்மை போன்ற வியாதிகளுக்கும், சித்தப் பிரம்மைக்கும் வேப்பிலை அடிப்பது கிராமங்களில் இன்றும் வழக்கம். பல விதங்களில் பயன்படும் வேம்பு, மிக அதிகமாக பயன்தரும் தாவரங்களில் ஒன்று. இன்றும் சில ஊர்களில் அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love