நீண்ட நேரம் நின்றபடியே பணி செய்ய வேண்டிய சூழல் பலருக்கு இருக்கிறது. மளிகை கடையில் வேலை பார்ப்பவர்கள், சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்ப்பவர்கள், காவலர்கள், ஃபேக்டரி தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர்கள், செக்யூரிட்டிகள் போன்றோர் பல மணி நேரம் நின்றபடியே வேலைசெய்கின்றனர். இதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் முக்கியமானது வெரிகோஸ் வெயின். கால் ரத்தக் குழாய்கள் சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரியும். தாள முடியாத வலி இருக்கும். கால்கள் வீங்கிக்கொள்ளும். ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
இதயத் துடிப்பால் ரத்தக்குழாய்கள் வழியாக உடல் முழுவதும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் பாய்கிறது. இப்படி உடல் முழுக்கப் பயணிக்கும் ரத்தம், உடல் திசுக்களால் பயன்படுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றம் அடைந்த பின், மீண்டும் இதயத்தை நோக்கிப் பயணிக்கிறது. இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகளால் பயன்படுத்தப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்துக்குச் செல்லும்போது, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கிச் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு உதவியாக, ரத்தநாளங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் கதவுகள் போல திறந்து, மூடும் வால்வுகள் அமைந்திருக்கின்றன. இந்த வால்வுகள் மேலே சென்ற ரத்தத்தை மீண்டும் கீழ் நோக்கி எதிர்திசையில் வர அனுமதிக்காது. வயதாகும்போது, ரத்த நாளங்கள், தளர்ச்சி அடையும். அளவில் பெரிதாகும். இதனால், வால்வுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளி அதிகரித்து, மேலே செல்ல வேண்டிய ரத்தம் புவி ஈர்ப்பு விசையால் கீழ் நோக்கிப் பயணிக்கும். குறிப்பாக, கால்களில் இந்த பாதிப்பு இருக்கும். இவ்வாறு எதிர்த் திசையில் கீழ்நோக்கிப்போகும் ரத்தம், ரத்தக் குழாயைச் சுருளச்செய்கிறது. இதனால், தொடையிலும் கணுக்காலுக்கு மேற்புறமும் ரத்தக் குழாய்கள் புடைத்துக்கொண்டு பழுப்பு அல்லது நீல நிறத்தில் வெளியே தெரியும்.
தொடர்ச்சியாக நின்றுகொண்டே செய்யும் பணியில் இருப்பவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதீத உடற்பருமன் உடையவர்கள். பரம்பரையாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உடையவர்களின் வாரிசுகள். கர்ப்பிணிகளில் அடிவயிற்று நரம்புகளில் அதிக அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படலாம்.
ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சைக்குச் சென்றால், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலமாகவே இதனைச் சரிசெய்ய முடியும். ஆரம்பகட்டத்தைத் தாண்டியவர்களுக்கு மட்டுமே அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.