நமக்கு உடல் நலம் குன்றிய போது உணவு பிடிக்காமல் போகும். உணவைப் பார்த்தாலே எரிச்சல் வரும். ஆனால் அந்த மாதிரி சமயங்களில் தான் ஓரளவாவது சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பழ ரசங்கள், நீர்மச்சத்துக்கள் இழப்பை ஈடு செய்யும் பிரத்யேக உப்பு – சர்க்கரை கரைசல், சூப்புகள், கஞ்சிகள் முதலியவை, உடல் நலம் சரியில்லாத போது உதவும் உணவுகளாகும். சுலபமாக ஜீரணமாகும் சில சத்து உணவுகளின் செய்முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
கஞ்சிகள், கூழ்கள்
நமது வீடுகளில் நோயாளிகளுக்கு ஆகாரமாக கஞ்சி கொடுப்பது வழக்கம். ஏன், ஆரோக்கியமாக இருந்தாலும் கஞ்சி நல்ல உணவு தான். ஆயுர்வேதத்தின் ஆணிவேரான ‘சரக சம்ஹிதையில்‘ பல வகை கஞ்சிகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக பேயா, விலேபி, மண்டம், லாளுபேயா போன்ற சில கஞ்சிகளைப் பற்றி ஸம்ஹிதை சொல்கிறது.
பேயா
இந்த கஞ்சியை புழுங்கலரிசி, கோதுமை, போன்ற தானியங்கள், பாசிப் பயிறு போன்ற பருப்பு வகைகள் இவற்றை வறுத்து குருணையாக்கி, 60 கிராம் குருணையை 1 லிட்டர் நீரிலிட்டு காய்ச்சவும். நீர் கால் பகுதியாக குறைந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி உபயோகிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு புஷ்டியை தரும். ஸம்ஹிதை சொல்வது – இது பசி, நாவறட்சி, சோர்வு, வலிவுக் குறைவு, வயிற்றுக்குள் தோன்றும் நோய், காய்ச்சல் இவற்றைப் போக்கும். வியர்வையை உண்டாக்கும். சடராக்னியைத் தூண்டி விடும். கீழ்நோக்கிச் செல்லும் வாதத்தையும், மலத்தையும் சரிப்படுத்தும். மேலும் சில மூலிகை கஞ்சிகளை ஆயுர்வேதம் விவரமாக சொல்கிறது.
நெற்பொரி கெட்டிக் கஞ்சி
தேவை
அரிசிப்பொரி பொடி – 1 டே.ஸ்பூன்
சர்க்கரை – 11/2 டே. ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
நீர்த்த பால் – 1/2 கப்
ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
செய்முறை
அரிசிப்பொரி பொடி, சர்க்கரை, தண்ணீர் மூன்றையும் நன்றாக கலக்கவும். குறைந்த தீயில் சமைக்கவும். அடிக்கடி கிளர வேண்டும். கலவை கெட்டியானவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, சூடு குறைந்ததும் ஏலக்காய் பொடியை போட்டு கலக்கவும். சூடாகவோ (அ) குளிரவைத்தோ பரிமாறவும். இந்த கெட்டியான கஞ்சி, நாவறட்சி, பேதியை தணிக்கும். ஆயுர்வேதத்தில் இந்த திட – திரவ கஞ்சி ‘லாஜ பேயா‘ எனப்படுகிறது.
அரிசிக்கூழ்
சமைத்த (அரிசி) சாதத்தை 1/2 கப் எடுத்துக் கொண்டு, மசித்து, 2 கப் தண்ணீர் சேர்த்து மறுபடியும் மீடியம் தீயில் சமைக்கவும். சிறிது உப்பு சேர்த்து மோருடன் எடுத்துக் கொள்ளலாம். இது நீர்மச்சத்துக்களை தரும்.
ஜவ்வரிசி கஞ்சி
இரண்டு (அ) மூன்று டீஸ்பூன் ஜவ்வரிசியை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற வைக்கவும். பிறகு நீராவியில் (பிரஷர் குக்கரில்) சமைக்கவும். இந்த கஞ்சியை பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது மோர், உப்பு சேர்த்து குடிக்கலாம். பேதிக்கு நல்லது.
சூப்புகள்
பசலைக்கீரை சூப்
தேவை
பசலைக்கீரை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 500 மி.லி
தக்காளிப் பழம் – 1
சீரகப்பொடி –1/2 டீஸ்பூன்
வெண்ணெய் –1 டே. ஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
வெங்காயம் – 1
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம் முதலியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பைத் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும், பருப்பை வடிகட்டிக் கொள்ளவும். வெண்ணெய்யை நன்கு உருக்கி அதில் வெங்காயம், பூண்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு பருப்பு நீரை ஊற்றி, அதில் பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கிப் போட்டு சூப்புடன் சேர்த்து வேக வைக்கவும். சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பிறகு எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து பரிமாறவும்.
கேரட் சூப்
தேவை
கேரட் – 250 கிராம்
செலரி – சிறிது
வெண்ணெய் – 1 டே. ஸ்பூன்
தண்ணீர் – 1 லிட்டர்
பட்டை பொடி – 2 சிட்டிகை
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
கேரட்டை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். செலரியின் பச்சையான பகுதியையும் கொஞ்சம் சேர்த்து நறுக்கிக் கொள்ளவும். கேரட்டையும், செலரியையும் 5 நிமிடம் வெண்ணெயில் வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்த காய்கறிகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த காய்கறிகளோடு உப்பு, மிளகுத்தூள், பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக மீதமுள்ள வேக வைத்த காய்கறிகள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். இந்த சூப்புகள் பசியை தூண்டும். இரும்புச்சத்து கிடைக்கும்.
மிருதுவான இட்லி
இட்லி தென்னிந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் முக்கியமான உணவு. ஆவியில் வேக விடுவதால் ஆரோக்கியமான சிறந்த காலை உணவு.
மிருதுவான இட்லிகளின் செய்முறை
தேவை
இட்லி அரிசி – 3 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
அவல் (அ) வெந்த சாதம் – 1/2 கப்
மிளகு – 4 – 5
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
காலையில் இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித் தனியாக நீரில் நனைத்து 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தனித் தனியாக அரைக்கவும். இட்லி அரிசியை விழுதாக அரைக்க வேண்டாம். சிறிது கரடு முரடாக இருக்கட்டும்.
அரைக்கும் பொழுது அவல் அல்லது வெந்த சாதத்தை சேர்க்கவும். உப்பையும், பெருங்காயத்தையும் சேர்க்கலாம். அரைத்த பின் இரண்டு மாவுகளையும் நன்றாகக் கலக்கவும். ஒரு ஆழமான பாத்திரத்தில் இட்லி மாவு கலவையை போட்டு ‘திக்‘கான துணியால் பாத்திரத்தின் ‘வாயை‘ மூடிக்கட்டவும்.
இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் பயன்படுத்தும் போது மறுபடியும் கிளறுவதோ, கலப்பதோ கூடாது. கரண்டியில் எடுத்து இட்லி கிண்ணங்களில் போட்டு வேக விடவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும். இட்லி மல்லிகைப் பூ போல் மிருதுவாக வரும்.
குறிப்பு
இட்லி உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு கூட நல்லது.
உணவு நலம் அக்டோபர் 2010
மென்மை உணவுகள், சூப்பு, கஞ்சிகள், கூழ்கள், நோயாளிகள், கஞ்சி, ஆரோக்கியம், ஆயுர்வேதம், சரக சம்ஹிதை, பேயா, விலேபி, மண்டம், லாளுபேயா, பேயா, புழுங்கலரிசி, கோதுமை, தானியங்கள், பாசிப் பயிறு, பருப்பு வகைகள், பசி, நாவறட்சி, சோர்வு, வலிவுக் குறைவு, வயிற்று நோய், காய்ச்சல், வாதம், மலம், மூலிகை கஞ்சிகள், ஆயுர்வேதா, நெற்பொரி, கெட்டிக் கஞ்சி, செய்முறை, அரிசிப்பொரி பொடி, சர்க்கரை, தண்ணீர், நீர்த்த பால், ஏலக்காய்ப் பொடி, அரிசிக்கூழ், செய்முறை, அரிசி சாதம், தண்ணீர், உப்பு, நீர்மச்சத்துக்கள், ஜவ்வரிசி கஞ்சி, செய்முறை, ஜவ்வரிசி, பால், சர்க்கரை, மோர், சூப்புகள், பசலைக்கீரை சூப், செய்முறை, பசலைக்கீரை, பயத்தம் பருப்பு, தக்காளிப் பழம், சீரகப்பொடி, வெண்ணெய், பூண்டு, வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள், கேரட் சூப், செய்முறை, கேரட், செலரி, வெண்ணெய், பட்டை பொடி, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, மிருதுவான இட்லி, தமிழர்கள், ஆரோக்கியம், காலை உணவு, மிருதுவான, இட்லி, செய்முறை, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, அவல், வெந்த சாதம், மிளகு, பெருங்காயம், உப்பு,