இயற்கையான மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே மூலிகை ஸ்நான பவுடர் தயாரித்து வைத்து உபயோகிப்பது மிக மிக நல்லது. சாதாரண தினசரி உபயோகத்திற்கு சீயக்காய் கலக்காமலும் எண்ணெய் குளியல் அல்லது எண்ணெய் பிசுக்கை அகற்ற சீயக்காய் கலந்து வைத்துக் கொண்டும் உபயோகிக்கலாம். மூலிகை ஸ்நான பவுடரை தயிர், பால், தண்ணீர், இளநீர், பன்னீர், வெள்ளரி, ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் கலந்து பிசைந்து வைத்து பின்னர் தடவி குளித்திட சிறந்த பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
சோம்பு – 10 கிராம்
பச்சிலை – 10 கிராம்
கோஷ்டம் – 10 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
தாளிசபத்திரி – 10 கிராம்
கோரைக்கிழங்கு – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
சந்தனத் தூள் – 150 கிராம்
மாகாளி கிழங்கு – 10 கிராம்
விலாமிச்சை வேர் – 10 கிராம்
மஞ்சிட்டா – 10 கிராம்
ரோஜா மொட்டு – 10 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
மரிக்கொழுந்து – 100 கிராம்
மகிழம் பூ – 100 கிராம்
உலர்ந்த எலுமிச்சம் பழத் தோல் – 350 கிராம்
செய்முறை
இவை அனைத்தையும் நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும் எலுமிச்சம் பழச் சாறு பிழிந்த தோல்களை மட்டும் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினசரி குளியலுக்கு அப்படியே உபயோகிக்கலாம். அல்லது பால், தயிர், இளநீர், பன்னீர், வெள்ளரி ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் ஊற வைத்தும் உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்கைப் போக்குவதற்கு சீயக்காய்த்தூள் அல்லது அரப்புத் தூளுடனும் சேர்த்து உபயோகிக்கலாம். பயத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு சாதம் வடித்த கஞ்சி ஆகியவற்றுடனும் சேர்த்து உபயோகிக்கலாம்.
இது வியர்வை துர்நாற்றத்தை போக்கி தோல் வறட்சியை நீக்கி, அரிப்பு எரிச்சல் போன்றவற்றையும் நீக்கி, மேனிக்கு பொலிவும், இயற்கை மணமும், மென்மையும் தோலுக்கு பாதுகாப்பும் திசுக்களுக்கு வலுவும் அளிக்கக்கூடியது.