சீப்பு சீடை
தேவை
பச்சரிசி – 800 கிராம்
பொட்டுக்கடலை – 200 கிராம்
தேங்காய் – 1 மூடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை களைந்து, ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, ஈரப்பதத்துடன் ஈர அரிசி மிஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவும்.
அந்த மாவை வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மணல் போல் வறுத்து எடுத்து, சலித்து வைத்துக் கொள்ளவும். (மாவு சிவந்து விடக்கூடாது).
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து உப்பு கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து மாவில் ஊற்றி பிசையவும்.
பிசைந்த மாவை சீப்பு சீடை அச்சில் வைத்து, பேப்பரில், நீள நீளமாகப் பிழியுவும். அதை ஒரு விரல் நீளத்திற்கு வெட்டி, அதை விரலில் வைத்து சுற்றின மாதிரி ஒட்டவும். கொஞ்ச கொஞ்ச மாவாக எடுத்து சீடைகளாகச் செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஒட்டிய சீடைகள் விரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக வித்தியாசமாக இருக்கும்.
தட்டை
தேவை
புழுங்கல் அரிசி – 800 கிராம்
பொட்டுக்கடலை – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
தேங்காய் – 1 மூடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தனி மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
புழுங்கல் அரிசியை களைந்து, ஊற வைத்து, உப்பு சேர்த்து கிரைண்டரில் நன்றாகக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஊற வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், தனி மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாகப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். உருட்டிய உருண்டைகளை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். காரத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மகிழம்பூ முறுக்கு
தேவை
புழுங்கல் அரிசி – 800 கிராம்
பொட்டுக்கடலை – 200 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை
புழுங்கல் அரிசியை நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். ஊறிய அரிசியை கிரைண்டரில் உப்பு சேர்த்து நைசாகக் கெட்டியாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலித்துக் கொள்ளவும். அரைத்த அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சீரகம் சேர்த்து, வெண்ணெயை கையில் தொட்டுக் கொண்டு நன்றாகப் பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். இந்த முறுக்கு சாப்பிடுவதற்கு சுவையாகவும், வெள்ளை நிறத்துடனும் இருக்கும்.
ரிப்பன் பக்கோடா
தேவை
புழுங்கல் அரிசி – 5 ஆழாக்கு
பொட்டுக் கடலை – 200 கிராம்
வர மிளகாய் – 12
பூண்டு – 15 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
புழுங்கல் அரிசியைக் களைந்து, ஊற வைத்து கிரைண்டரில் உப்பு சேர்த்து நன்றாகக் கெட்டியாக அரைக்கவும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலித்துக் கொள்ளவும். வரமிளகாய் பூண்டு, சீரகம் விழுதாக அரைக்கவும்.
அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, அரைத்த விழுது பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் வைத்து காய்ச்சிய எண்ணெய்யில் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
ஒமப்பொடி
தேவை
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 1/4 ஆழாக்கு
ஓமம் – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஓமத்தை நன்றாக அரைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து, வடித்து வைத்து ஓமத்தண்ணீரையும், தண்ணீரையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
மிக்சர்
தேவை
காராசேவ் – 1 கப்
காராபூந்தி – 2 கப்
ஓமப்பொடி – 2 கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
நிலக்கடலை பருப்பு – 1/2 கப்
முந்திரி பருப்பு – 20
கருவேப்பிலை – சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கருவேப்பிலை ஒவ்வொன்றையும் தனித்தனியே வறுத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காராசேவ், காராபூந்தி, ஓமப்பொடி, வறுத்த முந்திரி, கடலை, பொட்டுக்கடலை, கருவேப்பிலையைப் போட்டுக் கிளறவும்.
தனி மிளகாய்த்தூளுடன், உப்பு சேர்த்து கலந்து கொண்டு மிக்சர் மேல் தூவி கலக்கவும். ருசியான மிக்சர் தயார்.
உணவு நலம் நவம்பர் 2010
சீப்பு சீடை, செய்முறை, பச்சரிசி, பொட்டுக்கடலை, தேங்காய், உப்பு, எண்ணெய்,
தட்டை, செய்முறை, புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, தேங்காய், உப்பு, எண்ணெய், தனி மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், மகிழம்பூ, முறுக்கு, செய்முறை, புழுங்கல் அரிசி, சீரகம், உப்பு, வெண்ணெய், ரிப்பன் பக்கோடா, செய்முறை, புழுங்கல் அரிசி, பொட்டுக் கடலை, வர மிளகாய், பூண்டு, சீரகம், உப்பு, எண்ணெய், பெருங்காயத் தூள், ஒமப்பொடி, செய்முறை, கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், உப்பு, எண்ணெய், மிக்சர், செய்முறை, காராசேவ், காராபூந்தி, ஓமப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை, தனி மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய்,