சிறிய மெனக்கெடல்; நிறைய நன்மைகள்

Spread the love

ஒருவர் கெட்டவராவது ரொம்ப ஈஸி. நல்லவராக இருப்பதுதான்.. நல்லவராக நடப்பதுதான் ரொம்ப கஷ்டம். இதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது போலத்தான் நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் போகப் போக அது பழகி நமக்கு இன்பத்தை கொடுக்கும். சிகரெட் பிடிப்பது கெட்ட பழக்கம்; உடல் நலத்திற்கும் உயிருக்கும் கேடு. அதை எளிதில் நாம் வசப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சிகரெட்டை விட முயற்சி எடுத்தால்.. அது லேசில் முடிகிற காரியமில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ‘எனக்குத்தான் கெட்ட பழக்கமே இல்லையே’ என்று நீங்கள் நினைக்கிறார்களா? அப்படியானால் உங்களிடம் நல்ல பழக்கம் என்ன இருக்கிறது சொல்லுங்கள் என்று கேட்டால் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

சிகரெட் பிடிக்காமல் இருப்பதோ, மது குடிக்காமல் இருப்பதோ நல்ல பழக்கம்தான். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பேண ஏதாவது நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கிறோமா? என்றால் இல்லை. கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம்மைக் காப்பாற்றுவது போலவே, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சர்க்கரை நோய் பாதிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது வந்து விட்டால் ஆயுசு முழுக்க மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்க்கு பரம்பரை, உணவு முறை மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல காரணங்கள் இருந்தாலும், தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் சர்க்கரையை நம் உடலில் அண்டாமல் தடுக்கலாம். ஆனால், சோம்பல் நம்மை சுற்றி வளைக்கிறது. காலையில் எழுந்திருக்க வேண்டுமே.. என்று சோம்பல்; நாளைக்கு பார்த்துக் கொள்ளலாமே.. என்று சோம்பல்.

இதைப் போக்க சிறிய திட்டமிடல் இருந்தால் போதும். ஒரு மாதம் நடைப்பயிற்சி செய்துதான் பார்க்கலாமே என்று திட்டமிட்டு முடிவெடுங்கள். முதல் நாள் 5 நிமிடம் நடங்கள். அடுத்த நாள் 10 நிமிடம் நடங்கள். அதற்கடுத்த நாள் 15 நிமிடம் நடங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் நேரத்தை கூட்டிக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு வாரம் போய்விட்டது.. இன்னும் மூணு வாரம்தானே என்று எண்ணம் வந்துவிடும்.

அப்படியே ஒரு மாதம் ஆன பின்பு, நடைப்பயிற்சியை நிறுத்தி விடுவீர்களா நீங்கள்? வாய்ப்பே இல்லை. அதற்கு காரணம் உங்களுக்கு ஏற்பட்ட பழக்கம்தான். அலாரம் வைக்காமலேயே சரியாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவீர்கள். நடைப்பயிற்சி தொடங்கும் முன்பு எல்லாம் உங்களுடைய ‘யேர்லி மார்னிங்’ 8 மணியாகத்தான் இருந்திருக்கும். நடைப்பயிற்சி செய்த தினமெல்லாம் நீங்கள் சுறுசுறுப்பாக காணப்பட்டிருப்பீர்கள். நன்கு பசி எடுத்திருக்கும். உங்கள் வேலைகளை சரியாக முடித்திருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கும். சிறிய மெனக்கெடல், நிறைய நன்மைகள் அளிக்கும். முயல் ஆமையை ஜெயிக்கலாம்; ஆமை முயலை ஜெயிக்கலாம். ஆனால், ‘முயலாமை’ உங்களிடம் இருந்தால் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல.. நீங்கள் எதிலுமே வெற்றி பெற முடியாது. நல்ல பழக்கத்தை கொஞ்ச நாள் தொடர்ந்து கடைபிடியுங்கள். பின்பு அது, நிரந்தரமாக உங்களை பின் தொடரும்.


Spread the love