அவசியமான தூக்கம், அதை எவ்வாறு பெறுவது?

Spread the love

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எவ்வாறு நல்ல உணவு தேவையோ அதேபோல் நல்ல தூக்கமும் தேவை. ஆரோக்கியமான உடம்பில் தூக்கம் நன்றாக வரும். இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடம்பில் ஏதோ குறையிருக்கும். மூளை அல்லது உடல் சோர்வடைந்தால் களைப்பால் பகலில் தூக்கம் வரலாம். நோய்நொடி, போதை வஸ்துக்கள் காரணமாக தூக்கம் வரலாம். ஆனால் இதை நல்ல தூக்கமென்று சொல்ல முடியாது. இரவில் ஆழ்ந்து தூங்குவது ஆரோக்யத்தின் அறிகுறி.

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம், குறைந்தது ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லையென்றால் ஆபத்தின் அறிகுறி. வயதானா தூக்கம் குறையும். உடம்பில் வாதத்தின் அளவு அதிகமாவதால் தூக்கம் குறைந்து விடுகிறது.

பகலில் தூங்கினால் கபம் அதிகமாகி உடலின் பாகங்கள் செயல்படுவது பாதிக்கப்படும். குழந்தைகள், வயதானவர்கள், நோயால் அவதிப்படுபவர்கள் அரைமணி நேரம் பகலில் தூங்கலாம். அதையும் தவிர்த்தால் நல்லது.

சூரியன் மறைந்து நாலுமணி நேரம் கழித்துப் படுக்கைக்குச் சென்றால் நல்ல தூக்கம் வரும். கபம் ஆதிக்கம் செலுத்தும் நேரம். எனவே நல்ல தூக்கம் வரும். பதினொரு மணியானால் பித்தத்தின் ஆதிக்கம் அதிகரித்து தூக்கம் வராமலிருக்கும்.

காலையில் ஐந்து மணி அளவில் எழுந்து, யோகா, உடற்பயிற்சி செய்தால் சுறுசுறுப்புடன் நாள்பூரா இயங்கலாம். நன்றாக தூங்கவில்லையென்றால் தலைசுற்றல், உடல் அசதி, கண்ணில் எரிச்சல், உடலில் வலி, மயக்கம், அஜீரணம் போன்றவை நம்மைக் கஷ்டப்படுத்தும்.

பெண்கள் வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனித்தல் போன்றவற்றால் களைப்பு மேற்பட்டு உடன் பகலில் தூங்க முற்படுவர். இது நல்லதல்ல.

மூளையிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் நம் அன்றாட வேலைகளைத் தீர்மானிக்கின்றன. காலை ஆறுமணிக்கு இவைகள் நிறைய சுரக்கும். சுரப்பிகள் காலை ஆறுமணிக்கு சுரக்க ஆரம்பித்து உச்சக் கட்டத்தை மதியானம் இரண்டு மணியிலிருந்து ஆறுமணி அளவில் அடையும் இரவில் பொதுவாக குறைந்து சுரக்கும். இரவு இரண்டு மணிக்கு மிதமாக சுரக்கும். எனவே சுரப்பு அதிகமாக இருக்கும்பொழுது வேலை நிறையச் செய்ய வேண்டும். சுரப்பு குறைவாக உள்ள பொழுது தூங்கி விட வேண்டும்.

இவற்றிற்கு மாறுபட்டு நாம் செயல்புரிந்தால் உடல் நலம் குன்றும்.

நல்ல தூக்கத்தை எவ்வாறு பெறுவது?

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்று தூங்கச் செல்லுங்கள். அப்பொழுது தான் உண்ட உணவு ஜீரணமாகி தூக்கத்தை வரவழைக்கும். மாலை 5 மணிக்கு மேல் காபி, டீ, தவிர்க்கவும். தூங்குமுன் வெந்நீரில் குளித்து சூடாக சுக்குபவுடர் போட்ட பால் ஆகியவற்றை குடித்தால் நல்ல தூக்கம் வரும். சூடான புழுங்கலரிசி சாப்பாடு நல்லது. நேரத்திற்கு படுக்கச் செல்லவும். நேரம் மாறக் கூடாது. படுக்கும் அறை புழுக்கமின்றி, சுத்தமாக இருக்க வேண்டும். சுவரில் நீலக்கலரில் பூச்சு இருப்பது நல்லது. அதிகக் குளிர் கூடாது. ஏர்கண்டிஷனர் இருந்தால் மின் விசிறி கூடாது. காது மந்தமாகிவிடும். இதயம் கெடலாம்.

படுக்கை கனமாகவும், மிருதுவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்திலிருக்க வேண்டும்.

சோக நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டாம். சந்தோஷத்தைத் தரக் கூடிய நினைவுகள் இருக்கட்டும். டெலிவிஷன் பார்த்ததும் படுக்க வேண்டாம். கண்கள் தூங்கத் தயாராக இருக்காது. படுக்கை அறையில் ஊதுபத்திவாசனை, இனிமையான இசை, பிரார்த்தனை போன்றவை மனதில் தேங்கி நிற்கும் அழுத்தத்தைப் போக்கும்.

படுத்ததும் தூக்கம் வரவில்லையா? புரண்டு படுக்காதீர்கள். ஏதாவது வேலையைச் செய்யுங்கள். படியுங்கள். பின்பு படுத்தால் தூக்கம் வரும்.

உடல் சூட்டால் தூக்கம் வராமலிருக்கலாம். கபம குறைந்து தூக்கத்தைக் கெடுக்கும். எனவே கபத்தின் ஆற்றலைப் பெருக்க கரும்புச் சாறு வெறும் வயிற்றில் காலை, மாலை குடிக்கவும். போளீ, அதிரசம் மாலையில் சாப்பிடவும். வெல்லம், அரிசி மாவு சேருவதால் இவை நல்ல பலனைக் கொடுக்கும். கால் பாதங்களில் நடுவில் தேங்காய் எண்ணை தடவி, ஒரு மணிநேரம் ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

சூடான சாதம், மிளகு ரசம், சுட்ட அப்பளம், பருப்புத் துவையல், பாலும், மோரும் கலந்த தயிர் சாதத்தை சாப்பிடவும். இவை உறக்கத்தைக் கொடுக்கும்.


Spread the love