கொழுப்பு அடுக்கு என்றும் கூறுவார்கள். இதன் மூலம் தான் உடலில் உள்ள குளிர், உஷ்ணம் இவை இரண்டினாலும் பாதிப்புக்கு அதிகம் உட்படாமல் பாதுகாப்பு கிடைக்கிறது. தோலின் கீழ் அடுக்கான இதில் தான் கொழுப்புச் சத்து சேமித்து வைக்கப்படுகிறது. இந்த அடுக்கின் பருமன் கண் இமைகளில் குறைவாகவும், அடி வயிறு, பிட்டம் போன்ற பகுதிகளில் அதிகமாகவும் இருக்கும். சருமத்தின் அமைப்பைக் கொண்டு ஒருவரது உடல்நலம் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். சருமத்தினை நான்கு அடிப்படைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:
1. இயல்பான சருமம்.
2. எண்ணெய்ப் பசை மிகுந்த சருமம்.
3. வறண்ட சருமம்.
4. இணைசேர் அல்லது கலவை சருமம் எனலாம்.
(1) இயல்பான சருமம் (Normal Skin):
இதில் சருமம் மென்மையாகவும், நளினமாகவும் இருப்பதுடன் மாசு, மருவின்றி எப்போதும் ‘பளிச்’ என்று காணப்படும். எண்ணெய் பசையானது மிக அதிகமாகவோ வறண்ட நிலையிலோ காணப்படாது. இயல்பான சருமத்தினை மிக எளிதாக பராமரிக்கலாம். தினசரி காலையும், மாலையும் மென்மையான சோப்பும், தண்ணீரும் கொண்டு முகத்தைக் கழுவினாலே போதுமானது. வீட்டில் தயாரித்த மாய்சரைசரை தடவிக் கொண்டு இரவில் படுக்கச் செல்லலாம்.
(2) எண்ணெய்ப் பசைமிகுந்த சருமம் (Oily Or Creasy Skin):
இத்தகைய சருமம் தேவைக்கதிகமான பளபளப்புடன் காணப்படும். வேர்வைத் துவாரங்கள் பெரியதாகவும் அளவில் அதிகமாகவும் இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எளிதாக ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருப்பதும், மேக்அப் செய்தாலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் போவதற்கும் வேர்வைத் துவாரங்களின் அமைப்பு காரணமாகிறது. சருமத்தின் நிறமும் ஒளியின்றி காணப்படும். நெற்றி, தாடை, மூக்கின் கீழ்ப்பகுதிகளில் மேக்அப் திட்டு திட்டாகவும், அடை போன்று பெயர்ந்து கொண்டும் வர நேரிடும்.
இச்சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணெய்ப் பசையை இரண்டு அல்லது மூன்று முறை தினசரி முகத்தைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான துவாலைக் கொண்டு முகத்தை நன்கு துடைத்து ஈரமின்றிச் செய்த பின்பு மேக்அப் போட்டுக் கொள்ளலாம். சோப்பினை உபயோகிக்கும் போது டெட்மோசால் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி சோப்பினை பயன்படுத்துங்கள். காரம் அதிகமான சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், சருமத்தின் மேல் பகுதியில் உள்ள எண்ணெய்ப் பசையை மட்டும் நீக்கி சருமத்தினை வறட்சியாக்கும். வாரத்திற்கு ஒருமுறை ஆவிபிடித்தல் (Streaming) முறையினைச் செய்துவர, அடைத்துக் காணப்படும் சருமத் துவாரங்களைச் திறக்கச் செய்யும். இதன் மூலம் முகத்தில் பருக்கள் தோன்றுவதையும் சரி செய்யலாம்.
பொதுவாக நெற்றி, தாடை, முகத்தின் கீழ்ப்பகுதி, மேல் உதடு போன்ற இடங்களில் எண்ணெய்ப் பசை கூடுதலாகக் காணப்படலாம். இதனைத் தடுக்க வியர்வைத் துவாரங்களின் விட்டத்தினை குறைக்க வேண்டும். இச்செயல்களைச் செய்ய உதவும் பொருட்களை சுருக்கிகள் (Astringent) என்று கூறுவர். சருமத்தின் வியர்வைத் துவாரங்களை குறுக்குவதற்குரிய எளிய சரும சுருக்கிகள் பல உள்ளன. அவைகளில் சில…
(1) கெட்டியான மோரினை பஞ்சினால் முகத்தில் தடவி காய விட வேண்டும். அதன் பின்பு 10 நிமிடம் சென்ற பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
(2) பழுத்த தக்காளிப் பழங்களை வட்ட வடிவமாக நறுக்கி முகத்தில் ஒட்டி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து தக்காளித் துண்டுகளை எடுத்து விட்டு முகம் கழுவி விடவும்.
(3) முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நன்றாக மிக்ஸியில் அடித்து நுரை எழச் செய்து அதனைக் கண்கள், புருவங்கள் தவிர்த்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக் கொள்ளவும். மேற்கூறியவற்றில் மோரும், முட்டையின் வெள்ளைக் கருவும் சருமத் துவாரங்களைச் சுருக்குவதில் அதிகம் பலன் தருகிறது.
(4) மேலும் சரியளவு வினிகர் மற்றும் தண்ணீரையும் கலந்து முகத்தில் தடவிக் காய விட்டுப் பின்னர் கழுவலாம். சருமத் துவாரங்கள் சுருங்குவதன் மூலம் அங்கு ஏற்படும் சுரப்பின் அளவும் கட்டுப்படுகிறது. இதன் மூலம் எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்த முடியும். தாமதப்படுத்தவும் இயலுகிறது. இதனால் முகத்திற்குப் போடும் மேக்அப்பானது கூடுதல் நேரம் வரை கலைந்து போகாமலிருக்கச் செய்ய இயலுகிறது.
மெல்லிய மாஸ்சரைசரை எடுத்து கவனமுடன் முகத்தின் மேல் பூசிய பின்னர் அதிக அளவு மாஸ்சரைசர் காணப்பட்டால், அதனை டவல் அல்லது டிஸ்யூ காகிதம் மூலம் துடைத்து எடுத்து விடவும். இதன் மூலம் ஒரளவு எண்ணெய்ப் பசையினைக் குறைக்க இயலும். நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கொழுப்பு அதிகம் உள்ளவற்றினைக் குறைத்துக் கொண்டாலும் நாட்கள் போகப்போக எண்ணெய் சுரப்பு குறைய வாய்ப்புண்டு.
(3) வறண்ட சருமம் (DrySkin):
முகத்தின் தோற்றம் வறண்டு, வெடிப்புற்றதாக காணப்படும். ஈரப்பசையினை தக்க வைத்துக் கொள்ள இயலாததினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதன் காரணமாக சருமத்தில் சுருக்கங்களும் திட்டுத் திட்டான வறட்சியும் ஏற்படுகின்றன. குறிப்பாக குளிர் காலத்தில் இந்த வறட்சியானது அதிக அளவில் தொல்லை தரும் என்றாலும் கரும்புள்ளிகள், பருக்கள் அதிகம் தோன்றாது. தோல் களையின்றி, நிறமின்றி காணப்படுவது தான் முக்கிய குறைபாடாகும்.
வறண்ட சருமத்தினை சரி செய்ய, மிக மென்மையான அல்லது பேபி சோப் பயனபடுத்துவது சிறந்தது. குளித்த பின்பு சிறிதளவு பேபி ஆயிலை தேவையான இடங்களில் மேலோட்டமாக தடவலாம். இரவு தூங்கச் செல்லும் முன்பு நாமே தயாரித்த எளிய கிரிம்களில் ஒன்றைத் தடவிக் கொள்வது நல்லது. கண்ணைச் சுற்றி இக்கிரிமை நன்கு தடவுவது நல்லது. சூரிய வெளிச்சம் உடலில் அதிகம் படுவதைத் தவிர்த்தால் உடல் சருமம் மேலும் வறண்டு போவதை உறுதிபடுத்தலாம். ஒரு முட்டையின் மஞ்சள் கரு, பால் இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தேன் அரை டேபிள் ஸ்பூன் கலந்து நன்றாக கலக்கிக் கொண்டு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். வாரம் ஒருமுறை இதனைச் செய்ய வறண்ட தோல் பிரச்சனை தீரும். மேலும் கெட்டியான பசும்பாலை மூன்று முறை தடவிக் காய விட்டுப் பின்னர் முகம் கழுவலாம். இதையும் வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். சருமத்தில் சிறுசிறு வெடிப்புகள் காணப்பட்டால், பாலாடை தேவையான அளவு எடுத்து முகம் முழுவதும் நன்றாகத் தடவிக் காய விட்டுப் பின்னர் கழுவி விடவும்.
கலவை சருமம் (CombinationSkin):
சருமத்தின் சில பகுதிகள் வறண்டும் ஒரு சில பகுதிகள் எண்ணெய்ப் பசையுமாக கலந்து காணப்படுவதை தான் கலவைச் சருமம் என்று கூறுகிறோம். பெரும்பான்மையானவர்களுக்கு இவ்வகை சருமம் தான் அமைந்துள்ளது. கலவை சருமத்தைப் பராமரிப்பதில் சிறிது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மூக்கு, தாடை பகுதிகளில் எண்ணெய்ப்பசையும், கன்னங்கள், நெற்றிப்பொட்டு, நெற்றி போன்ற இடங்கள் மற்றும் கண்களைச் சுற்றி வறண்டும் காணப்படலாம்.
கலவைச் சருமத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்:
எண்ணெய்ப் பசையுள்ள இடங்களில் கவனமுடன் சுத்தம் செய்யவும். அதன் பின்பு அஸ்ட்ரின்ஜன்ட் வியர்வைத் துவாரங்களை சுருக்கும் முறையினைக் கையாளவும். முகத்தின் பிற பாகங்களை டோனரில் நனைத்த பஞ்சினால் துடைக்கப்பட வேண்டும். மாய்ஸ்சரைசர் தடவும் போது வறண்டு காணப்படும் பகுதிகளில் நன்றாக தடவ வேண்டும். உடலின் அனைத்து உறுப்புக்களின் சருமமும் பளபளக்க நீராடுதல் அவசியம். ஒரு சிலர் தினசரி இரண்டு வேளை குளிப்பார்கள். ( தண்ணீர் கஷ்டத்தில் குடிப்பதற்கு ஒரு குடம் கிடைத்தாலே போதுமென்று எண்ணும் கிராமங்களும் இந்தியாவில் உள்ளன தான். அந்த கிராமத்து மக்களின் பெருமூச்சு கோபத்தைக் கூட வரவழைக்கலாம் ) என்ன செய்வது! குளியல் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. நீராடுவதால் உடல் சுத்தமும், ஆண்மையும், நீண்ட ஆயுளும் ஏற்படுகின்றன. அழுக்கு, வியர்வை நீக்கி உடல் வலிமை பொருந்தி ஒளி வீசுகிறது என்று ஆயுர்வேத மருத்துவ நூல்கள் விளக்குகிறது.