எப்பொழுதுமே ஆயுர்வேதம் அக அழகுக்கும், புற அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இவை இரண்டும் நெருங்கி இணைந்தவை. புற அழகை உணவால், வாழ்க்கை முறையால், அழகு சாதனங்களால் மேம்படுத்தலாம். அக அழகை கட்டுப்பாட்டில் வைத்து, யோகா, தியானம் மற்றும் நற்செயல்களால் மேம்படுத்தலாம்.
வாதம், பித்தம், கபம் அமைந்த சருமம் உடையவரை தெரிந்து கொள்வது எப்படி?
மனிதனின் அழகு உடலின் மேலே உள்ள தோல் பகுதியினை வைத்தும், உள் அழகு மனதின் ஆரோக்கியமான கட்டுப்பாட்டில் வைத்தும் பெறப்படுகிறது. புற அழகை உணர்வால், வாழக்கை முறையால், அழகு சாதனங்களால் மேம்படுத்த இயலும். அக அழகைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து யோகா, தியானம் மூலம் மேம்படுத்த இயலும். மனிதர்களின் உடல் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று வகைகளிலே தான் அடங்குகின்றன. சருமத்தின் பாதிப்பும் இம்மூன்று தோஷங்களின் ஏற்றத் தாழ்வான அளவுகளில் இருப்பதால் ஏற்படுகிறது.
வாத சருமம் உடையவர்:
வாத சருமம் உடையவரின் தோல்கள் குளிர்ச்சியாக இருக்கும். கை, கால்கள் அதிக அளவு குளிர்ச்சி பொருந்தியது. உலர்ந்த சருமம். விரைவில் நீர்மச் சத்துகளை இழந்துவிடும். சீதோஷண நிலை சிறிது மாறுபாடு ஆனாலும் சருமம் பாதிக்கப்படும். சருமம் மெலிந்த, நுண்ணிய துவாரங்கள் உடையது. கருத்த மேனி உள்ளவர்.
பித்த சருமம் உடையவர்:
பித்த சருமம் உடையவரின் சருமம் சிவந்த, அழகான அமைப்புடையது. மருக்கள், பழுப்பு நிறப் புள்ளிகள் உடைய சருமம் என்பதால் இரசாயன பொருட்களில் எளிதில் பாதிப்படையும். சாப்பிடும் உணவுகளின் வகையினாலும் எளிதில் பாதிப்படையும்.
கப சருமம் உடையவர்:
தடினமான தோலும்,ஈரமான சருமமும் அமையப் பெற்றவர். சருமம் தொடுவதற்கு பஞ்சு போல் மிருதுவாகவும், குளுமையாகவும் இருக்கும். மற்ற இரண்டு தோஷங்களையும் விட சரும சுருக்கங்கள் குறைவு. இதன் காரணமாக மெதுவாகத்தான் வயது அதிகரிக்கும் பொழுது பாதிப்பு ஏற்படலாம். வாதம், பித்தம், கபம் மூன்றும் அல்லது இரண்டும் கலந்த கூட்டு குணங்கள் உடைய சுபாவமுடைய சருமத்தையுள்ளவரும் உண்டு.
தோல் பராமரிப்புக்கு மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றை அமையப் பெற்ற சருமம் உடையவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய ( எண்ணெய் மசாஜ் மற்றும் எண்ணெய் குளியலுக்கு ) தைலங்கள்:
தோஷத்திற்குரிய அடிப்படை எண்ணெய்:
வாதம் – நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், முளைக் கட்டிய கோதுமை எண்ணெய்.
பித்தம் – தேங்காயெண்ணெய், அரிசி உமி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்.
கபம் – ஆலிவ், பாதாம் எண்ணெய், விட்டமின் ‘ஏ’ எண்ணெய்கள்.
தோஷத்திற்குரிய கலவை எண்ணெய்:
வாதம் – இலவங்கப்பட்டை, மல்லிகை, கஸ்தூரி, ரோஜா, சந்தனம்.
பித்தம் – கார்டெனியா, மல்லிகை, லெமன் கிராஸ், ரோஜா, புதினா, வெட்டி வேர், சந்தனம்.
தோஷத்திற்குரிய மூலிகைகள்:
வாதம் – அஸ்வகந்தா, வல்லாரை, வெந்தயம், கடுக்காய், துளசி, சதவாரி, இலவங்கப்பட்டை.
பித்தம் – நெல்லிக்காய், தனியா, மல்லிகை, சந்தனம், மஞ்ஜிஸ்டி.
கபம் – அஸ்வகந்தா, வெங்காயம், வேம்பு, கடுக்காய், கஸ்தூரி, யூகலிப்டஸ்.
மேற்கண்ட அடிப்படை எண்ணெய் உடன் கலவை எண்ணெயையும் கலக்க வேண்டிய விகிதம் 2 அவுன்ஸ் அடிப்படை எண்ணெய்க்கு 20 சொட்டு கலவை எண்ணெயினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீழ்க்கண்ட மூலிகை களிம்புகளை பயன்படுத்தலாம்
வாத பிரகிருதிகளுக்கு – ஓட்ஸ் (அ) மைசூர் பருப்பு + எள் (அ) கோதுமை (அ) விளக்கெண்ணெய் + பால்.
பித்த பிரகிருதிகளுக்கு – பார்லி (அ) அரிசி மாவு + சூரிய காந்தி எண்ணெய் + கற்றாழை சாறு (அ) எலுமிச்சை சாறு கபப் பிரகிருதிகளுக்கு – கம்பு மாவு + ஆலிவ் (அ) பாதாம் எண்ணை + சுனை நீர்.