பிறக்கும் குழந்தையின் படபடக்கும் கருவிழி இமைகளும், விழிகளும், அசைக்கும் கை, கால் உறுப்புகளும், பஞ்சினைப் போன்ற மிருதுவான உடலும்,பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதுடன் அந்த அழகு நமக்கு தரும் சுகம் நம்மால் வருணிக்க முடியாது. இளம் வயதுப் பெண் அன்ன நடையுடன், மெல்லிய இடையின் இலாவகத்துடன் இயங்க, ஒவ்வொரு ஆடவனின் கண்களும் மது குடித்த வண்டு போல அழகின், மறுவடிவமாக பெண்ணை ரசித்துப் பார்க்கிறான். இயற்கையில் நாம் காணும் அழகு கோடிக்கணக்கில் கொட்டிக்கிடந்தாலும் ஒரு பெண்ணின் அழகு தான் முதலில் உலகில் முன்னிறுத்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை அழகு ராணியாக, உலக அழகியாக தேர்தெடுக்கப்படும் பெண்மணியை பார்த்து நம்மூர் பெண்கள் பெருமூச்செறிகிறார்கள் என்றால் அழகின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அழகு என்பது ஆறிலிருந்து அறுபது வரை பராமரிக்க இயலும் என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் ஏதோ கடமைக்கு என்று வாழ்க்கை நடத்துகிறோம். உடலும் உள்ளமும் வலிமையாக இருந்தால் தான் உண்மையான அழகு நிலைக்கும். உடலுக்கு மட்டும் பயிற்சியும், உணவும் கொடுத்தால் போதாது. எளிமையான வாழ்க்கை மனம் நிம்மதியாக அமையும் வண்ணம் எவ்வித கவலையும், நோயில்லாமலும் வாழ முயற்சித்தால் கூடுதல் அழகும் கிடைக்கும். செயற்கைப் பூச்சுகளை உடல் சருமத்தில் பூசுவதும், பியூட்டி பார்லரில் அலங்காரங்களும் உண்மையில் பெண்களை ( ஆரம்பத்தில் அழகுபடுத்தினாலும் வயது ஏற ஏற இருக்கும் இயற்கை அழகையும் கெடுத்து விட்டுச் சென்று விடும் ) இரசாயனக் கலவை மருந்துகள் தீர்க்க இயலாத பலவித தோல் நோய்களையும், மன வேதனைகளையும், தாழ்வுமனப்பான்மையையும் தருகின்றன என்பது தான் நிஜம்.
அந்தக் குழந்தை அழகாக இருக்கிறது. நாம் நேற்றுப் பார்த்து வந்த பெண் மூக்கும் முழியுமாக அழகாக இருக்கிறாள். சிறிது உதட்டை விளித்து சிரிக்கும் பொழுது ஏற்பட்ட கன்னக்குழி பிளாஷ் அடிச்சது போல இருந்தது என்று யாராவது பெண் பார்க்கும் படலத்தில் பையன் வீட்டுக்காரர்கள் கமெண்ட் அடித்திருப்பதை கொஞ்சம் கவனியுங்கள். அழகு என்பது என்ன? அழகாக தெரிவது என்ன? நமது உடலின் தோல் பகுதி தான். தலை முதல் கால் வரை தோலால் மூடப்பட்டுள்ள உடம்பு பளபளப்பாக இருக்க மாசு, மருவில்லாத ஒன்றாக அமைய ஆரோக்கியமான உடல் நிலை அவசியம். சருமம் என்று கூறப்படும் தோல் மேல்பகுதிக்கு பளபளப்புத் தருவதுடன் இன்னும் சில பணிகளைச் செய்கிறது. நமது உடலில் பெரிய உறுப்பு ( தோல் ) சருமம் தான். நமது உடலைச் சருமம் மூடியிருப்பதினால் தான் வெளியிலிருந்து கிருமிகள் உடலைத் தாக்க முடிவதில்லை. உடலானது அதிக உஷ்ணத்தினால் அல்லது அதிக குளிரினால் பாதிப்பது தவிர்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும், அதிகரிக்கும் உடல் சூட்டை சருமம் விரிவடைந்து, வியர்த்து, உஷ்ணத்தை வியர்வையாக வெளியேற்றுகிறது. குளிர் அதிகரிக்கும் போது சருமம் சுருங்கி தனது நுண்ணிய துவாரங்களை மூடி உடல் சூடு வெளியேறாமல் பாதுகாக்கிறது. உடலில் நீர்ச்சத்துகளை சரியான அளவில் வைக்கவும், உடலில் தேவையில்லாத நீரை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவுகிறது. தோல் தொடு உணர்ச்சியை உணரச் செய்கிறது. வலியினையும், இன்பத்தினையும் உணரச் செய்கிறது. உடலில் உள்ள வாசனைச் சுரப்பிகள் பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன. இவை தோல் சார்ந்த உறுப்புகள் ஆகும். ஆண், பெண் இருவருக்குமுரிய தனித்துவ புறத்தோற்றத்தைத் தருகிறது. மனித உடலில் உடலில் சருமத்தின் சராசரி பரப்பளவு 18 சதுர அடி ஆகும். மனித எடையில் 10 சதவீதம் சருமத்தின் எடை ஆகும். மேல் தோல் அல்லது புறத்தோலின் செல்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை புதிதாக உருவாகின்றன. உடலில் உள்ள தோலின் தடிப்பு சராசரி 2 மில்லி மீட்டர்.
பொதுவாக உடலில் உள்ள ஒரு சில உறுப்புகளை மற்றவர்களுக்குபொருத்த இயலும். ஆனால், தோலின்முக்கியத்துவம் வித்தியாசமானதாகும். ஆமாம். ஒருவரின் தோலை எடுத்து மற்றவர்களுக்குபொருத்த முடியாது. காயங்கள்,தீப்புண்களால்சருமம் தீய்ந்து போனால் அந்த இடத்தில் காயம் பட்டவரின் உடலில் இருந்து மட்டும்தான் தோலை எடுத்து ஒட்ட வேண்டும்.
தோலின் அமைப்பு:
தோல் மூன்று அடுக்குகளால் ஆனது. அவை,
(1) மேல் தோல் அல்லது புறத்தோல். (Epidermis)
(2) அடித் தோல் (Dermis)
(3) ஹைப்போ டெர்மிஸ் (Hypodermis)
(அ) தோல் கீழ் அடுக்கு. (Sub- Cultanean Layer)
(ஆ) தோல் கொழுப்பு அடுக்கு. (Fat Layer) இரண்டு வகையுள்ளது.
(1) மேல் தோல் அல்லது புறத்தோல். (Epidermis):
புறத்தோலினை தண்ணீர் தாக்க முடியாது. புறத்தோல் stratum coneum எனப்படுகிறது. இது பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர கிருமிகள் உடலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதுடன், உள் உறுப்புகளையும் அடி, காயம் போன்றவைகளிலிருந்து பாதுகாக்கிறது. தட்டையான புறத்தோல் செல்களாலானது கெராடின் (Keratin) என்னும் புரதத்தால் ஆனது. கெராடின் நம் முடியிலும், நகங்களிலும் உள்ளது. புறத்தோலின் செல்கள் பழையதாகி நலிந்து போகும் போது புதிய செல்கள் கீழிலிருந்து மேலாக எழுந்து வந்து பழைய செல்களை வெளியேற்றுகிறது. மேல் தோலின் கீழ்ப் பகுதியில் உள்ள மெலானோசைட்ஸ் (Melanocytes) என்று கூறப்படும் செல்கள் நமது உடலுக்கு நிறத்தை கொடுக்கிறது. இவை மெலானின் (Melanin) என்ற சாயப் பொருளை உற்பத்தி செய்து உடலுக்கு நிறத்தினைக் கொடுப்பதுடன் சூரிய ஒளியில் இருந்து வரும், மனித உடலுக்கு தீங்கு தரும் புற ஊதா வெப்பக் கதிர்வீச்சைத் தடுக்கிறது. மேல் தோலானது அதிக பாதுகாப்பு தேவைப்படும் உள்ளங்கை, பாதம் போன்ற உறுப்புகளில் சற்று தடிமன் அதிகம் காணப்படும்.
மேல் தோலில் லாங்கர் ஹார்ன் செல்களும் உள்ளன. தோலின் நோய் தடுப்புச் சக்தியாக, உடலில் உண்டாகும் பாதிப்புகளை “ஒவ்வாமை”யாக காட்டும்.
(2) அடித்தோல் (Dermis):
இந்த அடுக்கில் நார் போன்ற எலாஸ்டிக் புரத திசுக்கள் உள்ளது. இது தோலுக்கு வளையும் தன்மை, நீட்சியை, பலத்தை தருகிறது. இந்த அடுக்கில் நரம்பு நுனிகள், வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய்ச் சுரப்பிகள், முடிக்கால்கள் (துவாரங்கள்), இரத்த நாளங்கள் இவைகளும் இந்த அடுக்கில் இருப்பவை. நரம்பு நுனிகள் மூலம் தொடுதல், வலி, குளிர் இவற்றை உணர இயலுகிறது. விரல் நுனிகள், கால் கட்டை விரல் பாகங்களில் உடலின் மற்ற பாகங்களைவிட நரம்பு நுனிகள் அதிகம் இருப்பதால் தொடு உணர்ச்சியை மிக விரைவில் உணர முடிகின்றன. இது போல உதடுகள், மார்பகங்கள், மார்பு நுனிகள் உடலுறுப்புகளின் தோலில் அதிக நரம்புகள் உள்ளதால் மேற்கூறிய இடங்களைத் தொட்டால் உணர்ச்சிகள் பெருகும். இதன் காரணமாகத் தான் உதட்டினைத் தொடும் பொழுது, முத்தம் தரும் பொழுது பாலுணர்வு தூண்டப்படுகிறது. வியர்வைச் சுரப்பிகள் முன்னர் கூறியபடி உஷ்ணத்தால் வியர்வையினை சுரந்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வியர்வையிலிருக்கும் பொருள்கள் நீர், உப்பு மற்றும் ஒரு சில இரசாயனப் பொருட்கள் ஆகும். அக்குள் மற்றும் பிறப்புறுப்புகளிலும் உள்ள வியர்வைச் சுரப்பிகள் கெட்டியான எண்ணெய் போன்ற வியர்வையைச் சுரந்து, உடலுக்கு விசேஷமான, வித்தியாசமான வாடையைத் தோற்றுவிக்கின்றன. இந்த வாசனையின் மூலமும் பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்பட உதவுகிறது. எண்ணெய் சுரப்பிகள் உடலுக்கு எண்ணெய் பசையை உண்டாக்கி, சருமத்தை வழவழப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. எண்ணெய் சுரப்பிகள் எண்ணெயைச் சுரப்பது இல்லை. இந்த சுரப்பிகளின் செல்கள் உடைந்து கொழுப்பாக மாறி முடிக்கால்களின் வழியாக மேலே வந்து விடுகின்றன. முகப்பரு உண்டாவதற்குரிய காரணம் இந்த செல்களின் வேலை தான். அடித் தோல் அடுக்கில் காணப்படும் இரத்த நாளங்கள், தோலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளை அளிப்பதுடன் உடல் உஷ்ணம் காக்க உதவுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக உஷ்ணத்தை வெளியேற்றுகின்றன. குளிரின் போது இரத்தக் குழாய்கள் சுருங்கி, உடல் உஷ்ணத்தை குறைய விடாமல் காக்கின்றன. மேற்கூறிய வியர்வை, எண்ணெய் சுரப்பிகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் உடலில் இடத்திற்கு இடம் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.
தோல் கீழ் அடுக்கு: (Hypodermis)
கொழுப்பு அடுக்கு என்றும் கூறுவார்கள். இதன் மூலம் தான் உடலில் உள்ள குளிர், உஷ்ணம் இவை இரண்டினாலும் பாதிப்புக்கு அதிகம் உட்படாமல் பாதுகாப்பு கிடைக்கிறது. தோலின் கீழ் அடுக்கான இதில் தான் கொழுப்புச் சத்து சேமித்து வைக்கப்படுகிறது. இந்த அடுக்கின் பருமன் கண் இமைகளில் குறைவாகவும், அடி வயிறு, பிட்டம் போன்ற பகுதிகளில் அதிகமாகவும் இருக்கும். சருமத்தின் அமைப்பைக் கொண்டு ஒருவரது உடல்நலம் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.