தோலின் அமைப்பு

Spread the love

உடலில் உள்ள அவயங்களில் பெரியது எதுவென்றால் ‘கல்லீரல்’ என்பீர்கள். இல்லை, ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் ‘தோல்’ தான். தோல் ஒரு கவசமாக போர்வையாக உடலை பாதுகாக்கிறது. உடலில் பல நச்சுப்பொருட்கள் புகாமல், சூரிய ஒளியின் கெடுதலான கதிர்வீச்சுகள், நம்மை தாக்காமல் தடுக்கிறது. மனிதரின் புற அழகுக்கு காரணமாகிறது. சருமம் மூன்று அடுக்குகளால் ஆனது. ஒவ்வொன்றும் ஒரு வேலையை செய்கின்றன.

இவை,

1. எபிடெர்மிஸ் (Epidermis) – இது வெளிப்புற அடுக்கு. புறத்தோல். இதில் துணை அடுக்குகளும் உள்ளன. வெளியில் காணும், மெல்லிய தோல் பரப்பு, ஸ்ட்ரேடம் கார்னியம் (Stratum corneum). இது தண்ணீரால் சேதமடையாத ‘வாட்டர் ப்ரூஃப்’ (Water Proof), அடுக்கு! இது தான் முதல் நுழைவாயில் கதவாக, பாக்டீரியா, வைரஸ் இவை உள்ளே நுழையாமல் தடுக்கிறது. எபிடெர்மிஸின் மேல் பரப்பு கடினமான நார் போன்ற ‘கெராடின்’ எனும் புரதத்தால் ஆனது. (இந்த கெராடின் தான் நகத்திலும் முடியிலும் இருப்பது). மேற்சொன்ன Stratum corneum – இதன் கீழே உள்ள அடுத்த அடுக்கு ‘ஸ்ட்ரேடம் கிரானுலோசம்’ (Stratum Granulosam). இதன் கீழ் ‘ஸ்ட்ரேடம் ஜெர்மினேடிவம்’ (Stratum Genminativum) அல்லது ‘மால்பிகியின்’ (Malpighian) அடுக்கு. எபிடெர்மிஸின் உள்பகுதியில், கீழ் பாகத்தில் ‘மெலானோசைட்ஸ்’ உள்ளன. இவை ‘மெலானின்’ என்னும் நிறமியை உண்டாக்குகின்றன. இந்த மெலானின் தான் நீங்கள் சிகப்பா, கறுப்பா? என்பதை தீர்மானிக்கிறது. மேல்தோலில் உள்ள செல்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுகின்றன. அதாவது ‘இறந்த’ செல்கள் – இவை எபிடெர்மிஸில் கீழுள்ள அடுக்குகளிலிருந்து மேல் தள்ளப்பட்டு வெளித்தோலை வந்தடையும்.

2. டெர்மிஸ் – இந்த அடுத்த அடுக்கு தான் ‘நிஜமான’ தோல். கொல்லாஜன் (Collagen) மற்றும் ஃபிப்ரிலின் (Fibrillin) என்ற புரதங்களால் ஆனது. இவை தோலுக்கு மீள்சக்தி, வளையும் தன்மை இவற்றை தருகின்றன. டெர்மிஸில் நரம்பு நுனிகள், சுரப்பிகள், ரத்த நாளங்கள் – முக்கியமாக முடி ஃபோலிக்குகள் (Hair follicles)  உள்ளன. இவற்றை ‘முடி உறை’ என்று கூறலாம். டெர்மிஸில் உள்ள வியர்வை சுரப்பிகள், வியர்வையை வெளியேற்றி உடல் உஷ்ணத்தை பராமரிக்கின்றன. ரத்த நாளங்கள் தோலுக்கு சத்துணவுகளை கொடுக்கின்றன. டெர்மிஸை கோரியம் (Corium) என்றும் சொல்வார்கள். டெர்மிஸ் பகுதியில் பாபில்லா (Papilla) மற்றும் வலைப்பின்னல் போன்ற அடுக்குகள் இருக்கும்.

3. கொழுப்பு அடுக்கு: இதை, Sub-cutaneous அல்லது Hypodermis என்றும் சொல்வார்கள். இந்த கொழுப்பு அடுக்கு, உடலை வெப்பத்திலிருந்தும், குளிரிலிருந்தும் பாதுகாக்கும்.

தோலைப் பற்றிய தகவல்கள்

நமது தோலின் தடிப்பு (Thickness) சராசரி 2 மி.மீ. சில இடங்களில் (உள்ளங்கை, உள்ளங்கால் போன்றவை) அதிகமாக இருக்கும்.

எபிடெர்மிஸ் அடுக்கில் ‘லாங்கர்ஹான்ஸ்’ செல்களும் உள்ளன. இவை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதிய முடி கொட்டுவதை தடுக்க என்ற புத்தகத்திலிருந்து.

To buy Herbal products>>>


Spread the love