Sitharathai medicinal uses
சித்தரத்தை இஞ்சியை ஒத்த இந்தியா கிழக்காசிய நாடுகளில் அதிக விலையும் ஒரு மூலிகை ஆகும். இதற்கு சீன இஞ்சி என்ற பெயரும் உண்டு. சித்தரத்தை இருவகைப்படும் அவை சிற்றரத்தை, பேரரத்தை இரண்டுமே சளிக்கு ஏற்றதாகும். சித்தரத்தையை வாயில் போட்டு சுவைக்க வாய் நாற்றம் நீங்கும். இதன் நறுமணம் பல ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது.
சித்தரத்தையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, கொழுப்பு, புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் ஆற்றல் அடங்கியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றிப் பார்க்கலாம்.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சித்தரத்தை |
தாவரப்பெயர் | ALPINIA GALANGA |
தாவரக்குடும்பம் | INGER FAMILY, ZINGIBERDCEAE |
வேறு பெயர்கள் | சிற்றரத்தைச் செடி |
பயன் தரும் பாகங்கள் | வேர் கிழங்கு |
மருத்துவ பயன்கள்
வயிறு பிரச்சனை நீங்க
சித்தரத்தை பொடியை நீரில் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து பருகி வர வயிறு மற்றும் குடலில் உள்ள புண்கள் நீங்கும். இது வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கும் நல்ல பலனைத் தருகிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்க
சித்தரத்தை நம் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஊட்டமளிக்கிறது.
காலை உடல் உபாதைகள் நீங்க
காலை எழுந்ததும் சிலருக்கு குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கு ஒரு துண்டு சித்தரத்தையை எடுத்து வாயில் போட்டு மென்று வரலாம். இது உடலிலுள்ள வாதங்களை நீக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் மற்றும் இளைப்பு சளி போன்றவை நீங்க சித்தரத்தை துண்டை எடுத்து அதனை விளக்கெண்ணையில் நனைத்து நெருப்பில் சுட்டு கறியாக்கவும். பின் இதனை தேனில் தேய்க்க, தேன் கலந்த தூள் உண்டாகும். இதனை குழந்தையின் நாக்கில் தடவி வரலாம். இது மாந்தம் மற்றும் சளிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
சித்தரத்தை சிறந்த கிருமி நாசினியாகும். இதில் அமிலத்தன்மை உள்ளது. தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சித்தரத்தை கலந்த நீரை தினமும் பருகக் கொடுக்கலாம். இது உடலில் உள்ள கிருமிகளை அழித்து உடல் நலம் தேற மிகச்சிறந்த மூலிகையாகும்.
எலும்புகள் பலம் பெற
சித்தரத்தை, அமுக்கிராங்கிழங்கு இவற்றை நன்கு இடித்து பொடியாக்கவும். இதில் அரை டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து, தினம் இரண்டு வேளை என 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட எலும்புகள் உறுதி பெறும்.
இடுப்பு வலி நீங்க
சிலருக்கு முதுகில் தண்டு வடம் முடியும் இடத்தில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு சித்தரத்தை துண்டுகளை எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து நன்கு தேய்க்கவும்.
இதில் சித்தரத்தை நாரானது தனியே வரும். இதனை எடுத்து சிறிது இஞ்சி சாறு கலந்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதனை இளஞ்சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வர இடுப்பு வலி நீங்கும்.
மூட்டு வீக்க வலி நிவாரணி
சித்தரத்தை, சீந்தில் கொடி, நெருஞ்சில் வேர், சாரணை வேர் மற்றும் தேவதாரு பட்டை இவற்றை நன்கு உலர்த்தி பொடியாக்கவும். பின் சிறிதளவு எடுத்து 3 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து முக்கால் தம்ளர் அளவாக வற்றும் வரை காய்ச்சி தினம் இரு வேளை குடிக்கலாம். இது மூட்டு வீக்கங்கள் மற்றும் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆர்த்ரிட்டீஸ்
சித்தரத்தையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு தன்மை நோயை குணப்படுத்துகிறது. இதில் உள்ள சில ஜிஞ்சரோல்ஸ் புரோஸ்டோகிளான்டின் வினையை தடுத்து, ரூமேட்டிக் ஆர்த்ரிட்டிஸ் வராமல் தடுக்கிறது.
ஆஸ்துமா நீங்க
சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி, மிளகு, தாளிசபத்திரி ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து அதனை நன்கு வறுக்கவும். பின் இதனை அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்பொடியை தேனில் குழைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயின் தீவிரம் குறையும்.
சரும ஆரோக்கியம் மேம்பட
சித்தரத்தை சருமங்களில் உண்டாகும் பருக்கள், கொப்புளங்கள், கரும்புள்ளிகள், சரும செல்கள் பாதிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி செல்களை புதுப்பிக்க செய்கிறது. இதன் தன்மை சருமத்தில் அலர்ஜியை நீக்கி, எக்சிமா, எரிச்சல், அரிப்பு போன்ற சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.
இருமல், சளி நீங்க
சித்தரத்தையை நன்கு பொடியாக்கி அதனை அரை டீஸ்பூன் அளவில் தேனுடன் கலந்து தினமும் இரு வேளை உட்கொள்ள சளி, இருமல் முற்றிலும் நீங்கும்.
குழந்தைகளுக்கும் இப்பொடியை தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.
சித்தரத்தையை சிறு துண்டு எடுத்து அதனை வாயில் போட்டு மென்று வரலாம். இதுவும் சளி, இருமல், வாந்தி, தொண்டை கட்டுக்கு சிறந்ததாகும்.
அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசம், திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து அதனை நன்கு வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
பின் இதனை தேவைப்படும் போது கால் டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை காலை உணவிற்கு முன் கொடுக்கவும்.
சித்தரத்தை கசாயம்
சித்தரத்தையை நன்கு இடித்து அதனை 350 மில்லி வெந்நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் இதனை வடிகட்டி 22 – 44 மில்லி தேன் கலந்து குடித்து வர இருமல், சளி நீங்கும்.
கோழை நீங்க
சித்தரத்தை, வசம்பு, சுக்கு தூள் இவற்றை வெற்றிலையில் வைத்து சுண்ணாம்பு தடவுவது போல் தேன் தடவி சாப்பிட இறுகிய கோழை குழைந்து வெளியாகும்.
சித்தரத்தை பயன்படுத்தும் முறை
சித்தரத்தையை நன்கு கழுவி அதன் வேர்களை நீக்கவும். இதனை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்தலாம் அல்லது பேஸ்டாக அரைத்தும் பயன்படுத்தலாம்.
சித்தரத்தையை நாம் உண்ணும் உணவுகளில் துவையல் அல்லது சூப்பாக செய்து பயன்படுத்தலாம். இதன் தோலை நீக்கி சூப்களிலும், உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
குரல் வளம் மேம்பட சித்தரத்தை சேர்த்து மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். கப நோய்கள் நீங்க சித்தரத்தை மூலிகை கார குழம்பு சமைத்து உண்ணலாம்.
சித்தரத்தை டீ
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் தோல் நீக்கி நறுக்கிய சித்தரத்தையை சேர்க்கவும். பின் இதனை நன்கு கொதிக்க வைக்கவும். சிறு தீயில் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி சுவைக்கேற்ப தேன் கலந்து பருகவும்.
சித்தரத்தை ஜாம்
தேவையான பொருட்கள்
பெப்பர் மின்ட் ஆயில் – ஒரு துளி
ஆரஞ்சு ஆயில் – 5 துளிகள்
தேன் – 6 டீஸ்பூன்
மிளகு கீரை துருவியது – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – மூன்று
தண்ணீர் – அரை லிட்டர்
லெமன் கிராஸ் – 2
சித்தரத்தை துருவியது – 4 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதனுடன் எலுமிச்சை பழத்தை தோல் நீக்கி சேர்க்கவும். இதனை சிறு தீயில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். நீரானது பச்சை நிறத்தில் மாறும் வரை சூடுபடுத்தவும்.
பின் துருவிய சித்தரத்தை, மிளகு கீரை, லெமன் கிராஸ் சேர்த்து 15 நிமிடங்கள் வரை சமைக்கவும். பின் பாத்திரத்தை இறக்கி அதனுடன் மஞ்சள் தூள், லெமன் ஜூஸ், பெப்பர் மின்ட் ஆயில், ஆரஞ்சு ஆயில், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். சித்தரத்தை ஜாம் தயார்.
ஆயுர்வேதம்.காம்