சித்தாமுட்டி

Spread the love

Sithamutti

சித்தாமுட்டி அனைத்து இடங்களிலும், சாலையோரங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய தாவரமாகும். இதனை சிட்ராமுட்டி என்றும் அழைப்பர். சித்தாமுட்டி மணல் கலந்த பாறை உள்ள இடங்களில் நன்கு வளரும்.

இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது மூன்று அடி உயரம் வரை வளரக் கூடியதாகும். பூக்கள் ஐந்து இதழ்களுடன் சிறியதாக மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை பூக்களும், காய்களும் அதிகளவில் காணப்படும்.

சித்தாமுட்டி உருண்டை வடிவ காய்களை கொண்ட சிறு செடியாகும். இதன் தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். இதன் செடி முழுவதும் மருத்துவ குணம் நிறைந்தவை. இது இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது, விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது,

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சித்தாமுட்டி வீரியமும் குறையாததாகும். இது பல்வேறு நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. இது கடுமையான வாதங்களை நீக்க கூடியதாகும். இதன் மருத்துவ குணங்கள் பற்றிப் பார்க்கலாம்.

தாவர விபரம்

மூலிகையின் பெயர்சித்தாமுட்டி
தாவரப்பெயர்PAVONIA ZEYLANICA
தாவரக்குடும்பம்மால்வேசியே
வேறு பெயர்கள்சேங்கன், மம்மட்டி, தெங்கைப் பூண்டு
பயன் தரும் பாகங்கள்செடி முழுவதும்

மருத்துவ பயன்கள்

இத்தாவரம் இரத்தக் கசிவு, வயிற்றுக்கோளாறுகள், சீதபேதி, கழிச்சல், மூட்டுவலி, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல், முகவாதம், பக்கவாதம், உடல் சம்பந்த நோய்கள், எலும்புருக்கி நோய்கள், வீக்கம் போன்ற பல நோய்களுக்கு எளிதில் தீர்வு காண உதவுகிறது.

சித்தாமுட்டி கஷாயத்துடன் சுக்கு சேர்த்து குடிக்க எலும்புகளில் ஏற்படும் வலி குறையும்.

வயிற்றுப்புண் நீங்க

சித்தாமுட்டி, கடுக்காய், பேராமுட்டி, நெல்லி, வற்றல், சுக்கு ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது வயிற்றுப்புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

வாதம் நீங்க

சித்தாமுட்டி வேர் 10 கிராம் அளவு எடுத்து அதனை நன்கு இடிக்கவும். இதனை  நீருடன் சேர்த்து 25 மில்லியாக வற்றும் வரை காய்ச்சவும். பின் இதனுடன் 2 சிட்டிகை அளவு திப்பிலி சூரணம், திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை என இரு வேளையும் 3 நாள் தொடர்ந்து சாப்பிட வாதம், சுரம் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

சித்தாமுட்டி வேறுடன் பனை வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பால் கஷாயம் உடலிற்கு ஊட்டத்தை அளித்து, கடினப்பட்ட மலத்தை எளிதில்  வெளியேற்றுகிறது.

சித்தாமுட்டி இலையை, துத்தி இலையுடன் சேர்த்து கீரையாக சமைத்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், வலி போன்றவை நீங்கும்.

சித்தாமுட்டி எண்ணெய்

சித்தாமுட்டி வேரிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது நோய்களின் தீவிரத்தை குறைக்க பயன்படுகின்றது. இதனை தலையில் தேய்த்து குளித்து வரலாம்.

தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலியின் போது கடைகளில் கிடைக்கும் சிற்றாமுட்டி வேரின் எண்ணையை நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவலாம்.

இது கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உணவாக பயன்படுகிறது. இதன் தைலம் முடி உதிர்தலை தடுக்கிறது.

சித்தாமுட்டி தைலம்

தேவையான பொருட்கள்

விளக்கெண்ணெய், பூண்டு, சிறிது பெருங்காயம், சித்தாமுட்டி வேர் காயவைத்து ஈரமில்லாமல் நறுக்கி வைக்கவும்.

செய்முறை

சித்தாமுட்டி வேறுடன் 5 பூண்டுப் பற்கள் சேர்த்து நன்கு நசுக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும் வேர் மற்றும் பூண்டு நசுக்கியது, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

இது தைலம் பதம் வரும் வரை நன்கு கிளறி  அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். இதனை கட்டி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் மேல் பூச்சாக பூசலாம்.

சித்தாமுட்டி தேனீர்

தேவையான பொருட்கள்

சித்தாமுட்டி இலைகள்      –     ஒரு கைப்பிடி

சுக்குப் பொடி               –     அரை தேக்கரண்டி

கடுக்காய் பொடி            –     அரை தேக்கரண்டி

நெல்லி வற்றல்            –     சிறிதளவு

தண்ணீர்                   –     தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் சமயத்தில் சுத்தம் செய்து வைத்த சித்தாமுட்டி இலைகள், சுக்கு, கடுக்காய் பொடி மற்றும் நெல்லிவற்றல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின் இதனை வடிகட்டி தினமும்  குடித்து வர பெருங்குடல் பலப்படும். செரிமானம் சீராகும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!