சாதாரணமாக அடிக்கடி பரவலாக காணப்படும் தொற்று சைனுசைட்டிஸ். சைனுசைட்டீஸ் தொற்று, நான்கு சைனஸ்களில் எதை வேண்டுமானாலும் தாக்கலாம். ரைனீடீஸ் (Rhinitis) எனும் மூக்கடைப்பு பாதிப்புடன் தான் சாதாரணமாக சைனுசைடீஸ் தோன்றுகிறது. சைனுசைடீஸ் இருவகைப்படும்.
1. தீவிர சைனுசைடீஸ் (Acute Sinusitis)
2. நாட்பட்ட சைனுசைடீஸ் (Chronic Sinusitis)
முக்கிய காரணம் ஜலதோஷம் – அதுவும் நாட்பட்ட ஜலதோஷம். ஜலதோஷத்தால் ஏற்படும் கபம், சளி, சைனஸ்களின் அறைகளில் தேங்கி நின்று விடும். இவற்றினால் கிருமிகள் தோன்றி, சளி, சீழாக உருவாகி விடும். சுவாச மண்டலம் பாதிக்கப்படும்.
பாக்டீரியா (அ) வைரஸ் கிருமிகளும் சைனுசைடீஸை உண்டாக்கும். ஏன், பூஞ்சன தொற்று கூட மூக்கடைப்பு, சைனஸ் பாதிப்புகளை உண்டாக்கும்.
சைனுசைடீஸ் ஏற்படும் இன்னொரு காரணம் சைனஸ்களில் ஏற்படும் அடைப்பு. எட்டு சைனஸ்களிலிருந்து மூக்குக்கு செல்லும் “குழாய்கள்” நுண்ணியவை.
எனவே சுலபமாக அடைப்புகள் ஏற்படுகின்றன. அடைப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. மூக்கின் நடுவில் Septum என்ற தடுப்புச்சுவர், பிறவியிலிருந்தே சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால் மூக்கின் அருகிலிருக்கும் சைனஸ் அறைகளின் வாசலை அடைத்து விடும்.
காற்றுப் போக்குவரத்து தடைப்படும். சுற்றுப்புற சூழ்நிலையுள்ள மாசுகளும், தூசிகளும் அடைப்பு ஏற்பட காரணங்களாகலாம். சைனஸ் அறைகளின் வாசலில் ‘பாலிப்‘ (Polyp) என்ற சதை வளர்ச்சியும் வாயிலை மூடி விடும்.
முன்பே சொன்னபடி, ஜலதோஷத்தினால் மூக்கின் ஈரமான ஜவ்வுகள் வீங்கி புடைத்து விடும். இந்த வீங்கிய ஜவ்வுகள் சைனஸ்கள் திறப்பு துவாரங்களை அடைத்து விடும். இதனால் சைனஸ்களில் உள்ள காற்று ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. சைனஸ் அறைகளின் காற்றழுத்தம் குறைந்து, கபம், சளி திரவங்கள் காற்று போன இடங்களில் புகுந்து விடும். இந்த கபச்சளி திரவம் பாக்டீரியாக்கள் குடி புகுந்து இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடம். இதனால் சைனஸ் வலி ஏற்படும்.
அடினாய்டு சுரப்பியின் வீக்கத்தினாலும் சைனுசைடீஸ் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படும்.
அலர்ஜி, அதாவது ஒவ்வாமையும் காரணமாகும்.
பல் சொத்தையும் சைனஸ் தொல்லைகளை உண்டாக்கலாம். பற்களின் வேர்களின் அருகில் தான் மாக்ஸீலரி சைனஸ் அறைகள் உள்ளன. தீவிரமான, ஆழமான பல் சொத்தை வேர் வரை பரவும் போது, பக்கத்தில் இருக்கும் சைனஸ் அறைகளையும் தாக்கும்.
பொதுக்குளங்களில் நீச்சலடிப்பது, குளிப்பது. சைனஸ் தொற்றை உண்டாக்கலாம்.
அறிகுறிகள்
குழந்தைகள்
· மூக்கொழுகுதல் – தொடர்ந்து மஞ்சள் (அ) பச்சை நிற சளி மூக்கிலிருந்து ஒழுகிக் கொண்டே இருக்கும்.
· இரவில் இருமல்
· கண்களை சுற்றி வீக்கம்
பெரியவர்கள்
1. 10 நாளுக்கு மேல் நீடிக்கும் ஜலதோஷம்
2. தலைக்கனம், பாரம், தீவிரமான தலைவலி
3. மாக்ஸிலரி சைனுசைடீஸ், கண்களின் கீழே கன்னங்களில் வலி இருக்கும். பல் வலி, தலை வலி இருக்கும். ஃப்ரன்டல் சைனுசைடீஸில் கண்களின் பின்பக்கம், நடுவில் ‘பிளக்கும்‘ தலைவலி இருக்கும். ஸ்பினாய்டு பாதிப்பில் தலையின் முன்புறமும், பின்புறமும் வலி இருக்கும்.
4. தீவிரமான சைனுசைடீஸில் ஜுரம் வரும். ஜுரம் 102 டிகிரிக்கு மேல் போகும்.
5. முகம் ‘மென்மையாக‘ இருக்கும்.
6. அடுக்குத் தும்மல் ஏற்படும்.
7. வைரஸ் சைனுசைட்டீஸை விட பாக்டீரியா சைனுசைடீஸில் பாதிப்புகள் அதிகம். பாக்டீரியா பாதிப்பில், மூக்கிலிருந்து அடர்த்தியான சளி வரும். இருமலிருக்கும் கண்களை சுற்றியும் வீக்கம், வலி இருக்கும்.
8. வாயில் துர்நாற்றம் ஏற்படும். பல்துலக்கினாலும் துர்நாற்றம் போகாது.
9. தொண்டையும், குரலும் பாதிக்கப்படலாம்.
ஆயுர்வேத அணுகு முறை
ஆயுர்வேதத்தில் சைனுசைடீஸ் ‘பீனிசம்‘ (அ) துஷ்ட பிரதிச்சயா எனப்படுகிறது. வாதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான பிரானவாதம், தலை, மூளை, மனம் இவற்றை கட்டுப்படுத்தும். கபத்தின் உட்பிரிவில் ஒன்றான ‘ஸ்லேசக‘ கபமும் இந்த பிரான வாதமும் ஏறுமாறானால் பீனிசம் ஏற்படும் என்பது ஆயுர்வேத கருத்து. உடலின் கழிவுப்பொருள் (ஆமம்), சைனஸ் பிரதேசங்களில் உள்ள சிலேசக கபத்துடன் கலந்து விடுகிறது. இதனால் ‘சிலேச்மா‘ என்ற கெட்டி கோழை உருவாகி, சைனஸ்களை அடைத்து விடுகிறது. பித்த தோஷமும் சீர் குலைந்து அழற்சியை உண்டாக்கும்.
காற்றின் வழியே பரவும் கிருமிகள், தவறான வாழ்க்கை முறை, குளிர்ச்சியான உணவுகள், இனிப்புகளை உண்பது, தூக்கமின்மை, உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை இவைகளும் திரிதோஷங்களின் சமநிலையை பாதிக்கும்.
வீட்டு வைத்தியம்
. தினமும் உணவில் 100 கிராம் தேனை பால் அல்லது தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
· இரண்டு (அ) மூன்று பூண்டு பற்களின் சாற்றுடன், 2 தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை குடித்து வரவும். பூண்டு கிருமி நாசினி. பீனிச வலிகளை குறைக்கும்.
· பூண்டைப் போலவே, வெங்காய சாறு எடுத்து தேனுடன் குடிக்கலாம்.
· கருமிளகு 5 கிராம் அளவில் எடுத்து பொடிக்கவும். ஒரு கப் சூடான பாலுடன் கலந்து குடிக்கவும்.
· ‘நீராவி‘ பிடித்தல் (Steam Inhalation) சைனுசைடீஸின் பாதிப்புகளை குறைக்கும். மூக்கடைப்பு குறையும்.
· நீராவி பிடிக்கும் நீரில் யூகலிப்டஸ் தைலம், பூண்டு சாறுகளை சேர்க்கலாம்.
· வசம்பை சிறிது நீருடன் அரைத்த களிம்பை இரவில் மூக்கின் இரு பக்கங்களிலும் மற்றும் நெற்றியிலும் தடவி மறுநாள் காலை வரை விடவும்.
· மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்து, நெய் தடவி நெருப்பில் காட்டவும். எழும்பி வரும் புகையை, மூக்கின் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தால் உள்ளிழுக்கவும்.
· இதை மூக்கின் இரு பக்கங்களிலும் மாற்றி, மாற்றி செய்யவும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
1. மஞ்சள் – 2 பாகம், சீரகம் – 4 பாகம், தனியா – 4 பாகம், கருஞ்சீரகம் – 4 பாகம், இஞ்சி – 1 பாகம், கருமிளகு – 1 பாகம் இவற்றையெல்லாம் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியை சமைத்த காய்கறிகளின் மேல் தூவி சாப்பிடலாம். “சூப்”புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
2. மூலிகை கஷாயங்கள் நல்ல நிவாரணமளிக்கும். இரண்டு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் இரு துளசி இலைகள், இரு சிறிய இஞ்சித் துண்டுகள், 4 புதினா இலைகள், 2 கிராம்பு / இலவங்கம் சேர்த்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
3. மலச்சிக்கலை போக்கவும்.
4. ‘சோதன் நஸ்யம்‘ என்ற சிகிச்சை முறையில், மூக்கைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப்படும். மருத்துவ மூலிகைகள் கலந்த தைலம், மூக்கில் விடப்படும்.
5. மாதுளம் பூ, அருகம் புல், மஞ்சள், குங்குமப் பூ மற்றும் பல மூலிகைகள் கலந்து மருத்துவ நெய்களும் நாஸ்ய சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. தவிர வாய்வழி மூலம் மஞ்சள், முஸ்தா (கோரை), இஞ்சி, புங்கம், பெருங்காயம், வெண்நொச்சி முதலியவை கலந்த நெய்களும் தரப்படுகின்றன. அனு தைலம், பஞ்சேந்திரி வர்த்தன் தைலமும் தினசரி நாஸ்ய சிகிச்சையாக மூக்கில் விட்டு வர, அடிக்கடி வரும் சைனஸ் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
6. பஞ்சகர்மா சிகிச்சைப் போன்ற ‘நஸ்ய கர்மா‘ சிகிச்சையில் வியாகிரு தாய்தி லேகியம், வர்த்தமான பிப்பிலி முதலிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
7. பிரத்யேக யோகா முறைகளும் யோகி பிராணாயமம் மற்றும் யோகி நேதி – பரிந்துரைக்கப்படுகின்றன.
8. ஆயுர்வேதத்தில் சைனஸ் உட்பட பல சுவாச மண்டல பாதிப்புகளுக்கு நல்ல சிகிச்சை முறைகளும் பல வித மருந்துகளும் உள்ளன.
சில ஆயுர்வேத மருந்துகள்
· அனுத் தைலம்
· கற்பூராதி தைலம்
· மகாலஷ்மி விலாஸ் ரஸ்
· சித்ரக ஹரிதகீ
· கூஷ்மாண்ட லேஹியம்
· கதிராதி வடி
· வ்யோசாதி வடி
· காஞ்சநாரா குக்குலு
உடலின் நோய் தடுப்பு சக்தியை பலப்படுத்த
1. ச்யவனப் பிராசம்
2. லஷ்மி விலாஸ் ரஸ்
3. தவிர விட்டமின் ‘சி‘, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
சைனுசைடீஸை எதிர்கொள்ள உணவு முறைகள்
· உண்ணும் உணவு அதிக சூடாகவும் இருக்கக் கூடாது, அதிக “ஆறிப்” போனதாகவும் இருக்கக் கூடாது.
· பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சேர்த்துக் கொள்ள வேண்டியவை
முருங்கைக்காய், முள்ளங்கி, பூண்டு முதலியன.
தவிர்க்க வேண்டியவை
1. ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், வாழைப்பழம், குடமிளகாய், தக்காளி, வறுத்த, பொரித்த உணவுகள், மைதா உள்ள உணவுகள், இனிப்புகள், செயற்கை இனிப்புகள் முதலியன.
2. குடிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்தவும்.
3. இஞ்சிச் சாறுடன் வெல்லம் (அ) சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
4. மிளகு, சீரகம், இஞ்சி, இலவங்கம் கலந்த உணவுகளை உட்கொள்வதால் சைனுசைட்டீஸை கட்டுப்படுத்தலாம்.
5. இரவில் படுக்கும் முன், சிறிது இஞ்சி, மஞ்சள், மிளகு சேர்த்து காய்ச்சிய பாலை பருகி வரவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
· குளிர்காலத்தில் (பொதுவாகவே) தலைக்கு குளிக்க வேண்டாம்.
· மது அருந்துதல், புகை பிடிப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.
· அலர்ஜி உண்டாக்கும் தூசி, குப்பை, புண்கள், கொசுவை விரட்ட பயன்படும் வத்திகள் முதலியவற்றை தவிர்க்கவும்.
· இயற்கை உந்துதல்களான தும்மல், கண்ணீர், கொட்டாவி முதலியவற்றை அடக்க வேண்டாம்.
· தகுந்த பாதுகாப்பு உடைகளின்றி குளிரில் வெளியே செல்ல வேண்டாம். மழையில் நனைய வேண்டாம்.
· கோபம், பரபரப்பு, கவலைகளை தவிர்க்கவும்.
· பகலில் தூங்க வேண்டாம். தூக்கம் சைனஸை பாதிக்கலாம்.
· சரியாக பொருந்தாத கனமான மூக்குக் கண்ணாடி, மூக்கை அழுத்தும்.
· சைனுசைடீஸ் தாக்குதலின் போது, மூக்கு அழுத்தப்பட்டால் உபாதைகள் அதிகமாகும். சரியான இலகுவான மூக்கு கண்ணாடியை அணியவும்.
· அலர்ஜி உண்டாக்கும் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை தவிர்க்கவும். வாசனை திரவியங்களை தவிர்க்கவும்.
· சைனுசைடீஸ் தாக்குதல் இருக்கும் போது விமான பயணத்தை தவிர்க்கவும். காற்று அழுத்த மாறுதல்களால், சைனஸ்கள் மேலும் அடைத்துக் கொள்ளும்.
சைனுசைடீஸுக்கு சித்த வைத்தியம்
ஆயுர்வேதத்தை போலவே சித்த வைத்தியத்திலும் சைனுசைட்டீஸுக்கு சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. அதுவும் நாட்பட்ட சைனஸ் பாதிப்புகளுக்கு ஆயுர்வேத (அ) சித்த மருத்துவர்களை பலர் நாடுகின்றனர். சைனுசைடீஸை சித்த வைத்தியம், பீனிசம், மூக்கடைப்பு, நீர்கோர்வை என்கிறது.
சித்த நூல்கள் கூறும் பீனிசத்தின் காரணங்களும் அறிகுறிகளும்
இந்நோயுற்றவர்கட்கு மூக்கில் ஒரு வகை எரிச்சலும், நமைச்சலும் தாங்க முடியாதவாறு உண்டாவதால், மூக்கின் துவாரங்கள் சிவந்து, கண்கள் சிவந்து, தும்மல், நீர்வடிதல், தலைவலி, சளி, சீழ், இரத்தம் வடிதல் முதலியன ஏற்படும்.
இந்நோய் ஒன்பது வகைப்படும் என நூல்கள் கூறுகின்றன.
உணவு முதலியவை உடலுக்கு ஒவ்வாத நிலையில் உடலானது வெப்பமடைந்து பித்தம் அதிகமாகி ஐயத்தைப் பெருக்கக் கூடிய செய்கைகளால் ஐயம், பித்தத்துடன் சேர்ந்து இந்நோய் உண்டாகிறது. மேலும் மூலச்சூடு அதிகமாவதாலும் இந்நோய் தோன்றும்.
இந்நோயின் பொதுக்குணம்
மூலாதாரத்தில் வெப்பம் மிகுதியாகி கபாலத்தில் நீரை ஏற்றி ஒரு நாசி அடைத்து ஒரு நாசியில் நீர் வடியும். அடிக்கடி தும்மல் உண்டாகும். பிடரியும், தலையும் கனத்து வலிக்கும். வாரந்தோறும் கபாலம் வறண்டு நீர் திரண்டு நாறும். தேகத்தில் வதுப்புக்காணும். நாக்கில் ருசியும், நாசியில் மணமும் கெடும். சிரசுநீர் நெஞ்சில் இறங்கிக் கட்டும்.
சித்த வைத்திய சிகிச்சைகள்
1. நாட்பட்ட பீனிசத்திற்கு சித்த வைத்தியம் மூன்று வகை தைலங்களை பயன்படுத்துகிறது. இவை தலைக்கு தடவி குளிக்கும் தைலங்கள், மூக்கில் விடும் ‘நஸ்ய‘ தைலங்கள் வாய்வழியே கொடுக்கப்படும் தைலங்கள். நாசிரோக நாச தைலம், சுக்கு தைலம், நொச்சி தைலம், பீனிச தைலம் முதலியன நாட்பட்ட பீனிஸத்தை போக்க உதவும் தைலங்கள்.
2. ஆதொண்டை (Capparis Zeylanica) இலைச்சாறு 2 லிட்டர் எடுத்து 1 லிட்டர் நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சப்படுகிறது. காய்ச்சும் போது “கலாங்கல்” (Lesser Galangal – Alpinia officinarum) 120 கிராம், மஞ்சள் 120 கிராம் சேர்க்கப்படுகிறது. பக்குவமாக காய்ச்சப்பட்ட பின், வடிகட்டி, குளிர வைத்து பாதுகாக்கப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை தலையில் தடவி வெந்நீரில் குளிக்க வேண்டும். 3 வாரங்களில் நிவாரணம் தெரியும்.
3. மற்றொன்று தலையில் தடவி குளிக்க வேண்டிய தைலம் ‘மாதுளம் பூ‘ தைலம். வெண்நொச்சி (Vitex Negundo) சாறு, துளசி இலை சாறு, மாதுளம் பூச்சாறு மற்றும் தும்பை (Drona pushpi, Leucasaspera) இலைச்சாறு – தலா 3 தேக்கரண்டி எடுத்தக் கொண்டு, ஒரு மேஜைக்கரண்டி மிளகுப்பொடி சேர்த்து 1/2 கப் நல்லெண்ணையிலிட்டு காய்ச்சவும். பக்குவமாக காய்ச்சிய பின் வடிகட்டி குளிர வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயையும் தலைக்கு தடவி குளிக்கலாம். பீனிசம் குறையும்.
4. இவை தவிர மூக்கிலிடவும், தலைக்குத் தேய்த்து குளிக்கவும், பீனிச தைலத்தை சித்த வைத்தியம் பரிந்துரைக்கிறது. இந்த பீனிசத் தைலம் கீழ்க்கண்ட முறையில் செய்யப்படுகிறது. மூக்குத்தொடர்பான எல்லாவிதமான பிணிகளையும் இது நீக்கும். நாள்பட்ட ஜலதோஷத்திற்கு இது நல்ல மருந்து. இந்த தைலத் தயாரிப்புக்குத் தேவைப்படும் எண்ணெய் சாறு வகைகள் – நொச்சி இலைச்சாறு 1 லிட்டர், கரிசாலைச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர்.
கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் மருந்துச் சரக்குகளை வகைக்கு 10 கிராம் வீதம் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
1. சுக்கு, திப்பிலி, அதிமதுரம், வாயுவிடங்கம், இந்துப்பு, சித்தரத்தை, ஆமணக்கு வேர், குடசப்பாலை வேர், கிரந்தி தகரம், கோஷ்டம், சதகுப்பை, தேத்தான் கொட்டை.
2. நல்லெண்ணெய், நொச்சி இலைச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். மற்ற மருந்துச் சரக்குகளை வெள்ளாட்டுப் பால் விட்டு அரைத்து மேற்கண்ட திரவத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை நான்கு நாட்களுக்கு ஒரு முறை மூக்கில் சில துளிகள் விட்டு நஸ்யமிட வேண்டும். மற்றும் வாரத்துக்கு ஒரு தடவை தலையில் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
3. நாள்பட்ட ஜலதோஷத்தால் அவதியுறுவோர் ஒன்றுவிட்ட மறுநாள் ஒன்று என்று சில நாட்கள் தொடர்ந்து தேய்த்து ஸ்நானம் செய்யலாம்.
4. ‘நஸ்யத்திற்கு (மூக்கில் விட) சித்த வைத்தியம் “முத்தாண்டை தைலத்தை” பரிந்துரைக்கிறது. இதற்கு தேவையான பொருட்கள் – கருமிளகு – 2 மேஜைக்கரண்டி , அருகம்புல் வேர் – ஒரு மேஜைக்கரண்டி, கோரைக்கிழங்கு (Cyperus Rotundas) 30 கிராம். இவற்றை வெய்யிலில் உலர வைத்து பொடித்துக் கொள்ளவும். இந்த கலவையை 500 மி.லி. நல்லெண்ணெய் – 500 மி.லி. பசு நெய்யுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. வெய்யிலில், ஈரப்பசை முற்றிலும் உலர்ந்து போகும் வரை, சில நாட்கள் காய வைக்கவும். பிறகு இந்த தைலத்தை 10 நாட்களுக்கு தினம் 3 துளி எடுத்து மூக்கில் விட்டு வர சைனுசைடீஸ் குறையும். இந்த எண்ணெயை நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வரலாம்.
6. கோவைக்காயின் இலைகளை அரைத்து, அரைத்த களிம்பை தலையில் “பற்றிடுதல்” மூக்கில் ரத்தம் கசியும் நிலை மற்றும் சைனுசைடீஸுக்கும் குணமளிக்கும். இரவில் தொல்லை தரும் இருமலையும் குணப்படுத்தும்.
சூரணங்கள்
· மூக்கிரட்டை கிழங்கு (Punarnava) இந்துப்பு, கருமிளகு, சர்க்கரை சமஅளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். சைனுசைடீஸ் தாக்குதலின் போது 1/2 தேக்கரண்டி (இந்த) பொடியை எடுத்து, நெய்யுடன், தினம் இரு வேளை உட்கொள்ளவும்.
· சுக்கு சூரணமும் சைனுசைட்டீஸுக்கு மருந்தாக தரப்படுகிறது. சம அளவில் இதில் உள்ளவை சுக்கு, தான்றிக்காய், வால் மிளகு, கருஞ்சீரகம், தூதுவளை வேர், உத்தாமணி வேர், கடுக்காய், பேய் பீர்க்கை முதலியன உலர வைத்து பொடி செய்யப்பட்டவை.
· மேற்கொண்டவை தவிர மூககுப் பொடி போல் நஸ்ய மருந்துகளும், புகை பிடிக்கும் சிகிச்சை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இலுப்பை, சுண்டை, பாலை இவைகளின் உலர வைத்த வேர்களின் பொடி மூக்கு பொடி போல் நுகரப்படுகிறது. சுத்தமான மஸ்லின் துணி கேரட்டை (Trichosanthus palmate) பழச்சாறில் பல தடவை நனைத்து உலர வைக்கப்படுகிறது. பிறகு திரியாக சுற்றி, கொளுத்தப்பட்டு அணைத்தவுடன் எழும் புகை நோயாளியால் நுகரப்படுகிறது.
· தினம் 2 வேளை இந்த சிகிச்சை 8 நாட்கள் செய்யப்படும். சைனுசைடீஸ் மற்றும் தலைவலி முதலியன குறையும். வால் மிளகு, முருங்கைகாய் விதைகள், வாயுவிளங்கப் பழம், கருமிளகு – இவைகள் பொடிக்கப்பட்டு, மெல்லிய மஸ்லின் துணியில் கட்டி, நோயாளியால் நுகரப்படும். திருப்பி திருப்பி செய்யப்படும் இந்த “மூக்குப் பொட்டணம்” சிகிச்சை சைனுசைடீஸ், மூக்கடைப்பு, தலை வலிகளுக்கு நிவாரணமளிக்கிறது.
நெய்
நொச்சி (Vitex Negundo) யை முக்கிய பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் கருநொச்சி நெய் ‘நஸ்யம்‘ (மூக்கிலிருந்து) சிகிச்சைக்கு மருந்தாகும்.
கஷாயம் (குடிநீர்)
சைனுசைட்டீஸுக்கு வாய் வழியாக கொடுக்கப்படும் கஷாயம் கீழ்க்கண்ட மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது – வேம்பு (இளசான வேர்), வால் மிளகு, கோட்டம் (குஸ்தா, Costus / Sassurea Lappa), சுக்கு, குடூச்சி தண்டு, நிலவேம்பு, தேவதாரு பட்டை, கத்தரி (Solanàm melongena) இவைகளில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, தண்ணீரிலிட்டு, கஷாயமாக காய்ச்சி வடிகட்டி, ஆற வைத்து, சைனுசைட்டீஸுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
சித்த வைத்தியம் சொல்லும் பத்தியம்
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- பொதுவாக புளிப்பான, கசப்பான, துவர்ப்பான உணவுகளை சைனுசைட்டீஸ் பாதிப்புள்ளவர்கள் ஒதுக்க வேண்டும். முட்டை, பசும்பால், கருவாடு, நெய், விளக்கெண்ணெய், முருங்கைக்காய், கீரை, அத்திப்பழம், வறுத்த அரிசி மாவு, மிளகுத் தண்ணீர் இவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
- புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.