சைனஸ்?

Spread the love

நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் முன்னேற்றம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. நவீன வசதிகளும் பெருகி வருகின்றன. எங்குப் பார்த்தாலும் தொழிற்சாலைகள், ஆலைகள், இயந்திரங்கள், வாகனங்கள் என்று மனிதனின் வாழ்க்கையை சொகுசுப்படுத்தும் விஞ்ஞான முன்னேற்றம் வியக்கத் தக்கவை. அறிவியல் முன்னேற்றத்தினால் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வசதிபட அமைத்துக் கொண்டாலும் சுகாதாரத்துடன் அமைத்துக் கொள்ள இயலுவதில்லை. அவற்றிலும் நகர மனிதனால் சுகாதாரத்தை நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. நெருக்கடியான சுற்றுப்புற சூழ்நிலையினால் இயற்கையான தூய காற்று மாசுபடுகிறது. அதனால் தூய்மையான காற்றானது நச்சுக் காற்றாக மாறுகிறது. இந்த நச்சுக் காற்றை சுவாசிக்க வேண்டிய சூழ்நிலையில் இன்றைய மனிதன் இருப்பதால் அவன் பல்வேறு நோயினால் பீடிக்கப்படுகிறான். சுகாதாரமற்ற சூழ்நிலையின் காரணமாகத் தோன்றும் நோய்களில் பீனிச நோய் என்று கூறப்படுகின்ற சைனசைட்டிஸ் (Sinusitis) நோய் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான மக்களின் ஒயாத தலைவலிக்கு காரணமாக இருக்கும் சைனஸ் நோய் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

நம் முகத்தில் மூக்கு ஒரு முக்கிய உறுப்பாகும். முகத்துக்கு அழகிய எடுப்பான தோற்றத்தை தருவதும் மூக்கே ஆகும். மூக்கின் அமைப்பு பற்றி முதலில் காண்போம். மூக்கின் நாசித் துவாரத்தின் உள்ளே பல மேடு பள்ளங்கள் உள்ளன. அதில் சிறிய ரத்தக் குழல்கள் பஞ்சு போல் பரந்து விரிந்திருக்கும்.

பல்வேறு நுண்ணிய சுரப்பிகளும் நூற்றுக்கணக்கான நுண்ணிய ரோமங்களும் காணப்படும். மணத்தை நுகரக்கூடிய பல நரம்புகள் மூக்கின் மேற் பகுதியில் காணப்படும். இதன் மூலமே நாம் வாசனையைத் தெரிந்து கொள்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்றை நம் உடலின் உஷ்ணத்துக்கு ஏற்றவாறு நாசித் துவாரத்தின் மேடு பள்ளங்கள் பதப்படுத்துகிறது. மேலும் சளி போன்ற திரவம் நுண்ணிய ரோமங்களின் மேல் படர்ந்து தூசிகள், கிருமிகளைத் தடுக்கிறது.

மூக்கின் உட்பகுதியில் உள்ள வெற்றிடம் சைனஸ் எனப்படும். இதில் நீர்க் கோர்த்து, கொள்வதால் மூக்கடைப்பு நோய் தோன்றுகிறது. சுருக்கமாகக் கூறினால் மூக்கினுள் இருக்கக் கூடிய சளிச் சவ்வுகளில் அழற்சி ஏற்படுவதே பீனிசமாகும். இந்நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. சாதாரணமாக, நீர்க்கோவை மற்றும் சுரத்தை தொடர்ந்து இது ஏற்படுகிறது. சில வகை தொற்றுகள், கிருமிகள் காற்றறைகளில் தங்கி விடுவதாலும் பீனிசம் தோன்றுகிறது. மாசு படிந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதால் மூக்கின் உள் தண்டில் உள்ள சவ்வு போன்ற பகுதி பாதிக்கப்பட்டு அலர்ஜியை (Dust Allergy) ஏற்படுத்துகிறது. அதனால் பீனிச நோய் தோன்றுகிறது. பாக்டீரியாக்களினாலும் இது ஏற்படுவதுண்டு. மேலும் அருவி, கடல், குளம், ஆறு போன்றவற்றில் குளிக்கும் போது அது நீர்க்கோவையை ஏற்படுத்துகிறது. இதனால் சளித் தொல்லையும் தும்மலும் சேர்ந்தே வருகிறது. இதன் காரணமாகவும் பீனிசம் தோன்றலாம். ஒவ்வாமையினாலும் ஏற்படும். ரத்தத்தில் உள்ள அதிக அளவு நச்சுத் தன்மையால் மூக்கு, தொண்டை, தலை இவைகளில் உள்ள சளிச் சவ்வுகளைத் தூண்டி அதிக அளவு சளி சுரக்கச் செய்வதாலும் பீனிச நோய் தோன்றுகிறது.

இந்நோய்க்கான அறிகுறிகள். தொடர்ச்சியான தும்மல் அல்லது அளவுக்கு அதிகமான தும்மல் ஏற்படும். மண்டைக் குத்தல் காணப்படும். மூக்கின் நமைச்சல் இருக்கும். கண்கள் சிவந்திருக்கும். மூக்கில் நீர் வடியும். மூக்கு ஒன்றோ அல்லது இரண்டுமே அடைபடும். தலைவலி அடிக்கடித் தோன்றும். கண்களைச் சுற்றி வலி காணப்படும். கழுத்து வலியும் தோன்றும். குரலும் பாதிக்கப்படும். இந்நோய் அதிகமாகும் போது முகத்திலும் கணத்த உணர்வு தோன்றும். மேலும் இது குளிர்காலங்களில் அதிகமாகக் காணப்படும்.

சைனஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகக் காணப்படும். அதனால் புளிப்பு மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். குளிர் பானங்கள் மற்றும் குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திட உணவைக் குறைத்து பழ ரசங்கள், கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். பீனிசம் தோன்றுவதற்கு உணவு செரியாமை கூட ஒரு காரணமாகும். அதனால் நேரத்துடன் சாப்பிடுவதை பழக்கிக் கொள்ள வேண்டும்.

தைலம் போட்டு ஆவி பிடிப்பது இந்நோயின் கடுமையைக் குறைக்கும். தலைக்கு குளிக்கலாம். ஆனால் தலையில் ஈரம் சேராதபடி உலர்த்துவது அவசியம் ஆகும். குளிர்ந்த நீர், குளிர்ந்த இடம் தவிர்க்கப்பட வேண்டும். உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் முக்கியமாகும். நல்ல உறக்கமும், போதுமான ஒய்வும், தூய்மையான காற்றும் இந் நோயாளிகளுக்கு அவசியம் ஆகும்.

ஹோமியோபதி மருத்துவ முறையின் மூலம் சைனஸ் நோயை குணமாக்க இயலும். சைனஸ் நோயை நீக்கவல்ல பல அற்புதமான மருந்துகள் ஹோமியோவில் உள்ளன. ஆலியம் சிபா, ரூமெக்ஸ், ஸ்டிக்டா பல்மனேரியா, பிரையோனியா, காலிமூர், ஸாங்குரேனியா, போன்ற மருந்து வகைகள் இந்நோயை குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இம் மருந்துகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். இவை யாவும் அவரவர் உடல் மற்றும் மன நலக் குறிகளுக்கேற்ப அளிக்கப்படும்.


Spread the love