சங்கடம் தரும் சைனஸ்

Spread the love

நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே தும்மிக் கொண்டே எழுந்திருக்கிறீர்கள். அடுக்கு தும்மல் ஓய்ந்தாலும், களைப்பையும், உடல் முழுவதும் வலியையும் உணர்கிறீர்கள். தலைவலி வேறு தாக்க ஆரம்பிக்கிறது. சரி, ஜலதோஷம் தான், என்று ஜலதோஷ மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள் ஒன்றும் குறையவில்லை. தலைவலி அதிகமாகிக் கொண்டே போகிறது. மூக்கில் இருந்து சளி வந்து கொண்டேயிருக்கிறது. தலை முழுவதுமே பாரமாகி விடுகிறது. டாக்டரிடம் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உங்களை பரிசோதித்த பின் சைனஸ் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி, அதைப் பார்த்து டாக்டர் உங்களுக்கு வந்திருப்பது சைனுசைட்டீஸ் (Sinusitis) என்கிறார்.

சைனஸ் என்றால் என்ன?

நமது முகத்தில் மூக்கு ஒரு ‘முக்கிய’ பாகம். வாசனைகளை அறியவும், காற்றை நுரையீரலுக்கு அனுப்பி திரும்பி வெளியேற்றும் பாதை மூக்கு. சுவாசிக்கும் காற்றை சிறிது சூடாக்கி, சிறிது ஈரமாக்கி, சுத்திகரித்து நுரையீரலுக்கு மூக்கு அனுப்புகிறது.

மூக்கை சுற்றி உள்ள முக எலும்புகளில் வெற்றிடங்கள் உள்ளன. மூக்கின் வலது, இடது பக்கங்களில் நான்கு ஜோடியாக, எட்டு சைனஸ் ‘அறைகள்’ இருக்கின்றன. அவை இருக்கும் இடத்தைப் பொருத்து சைனஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

எத்மாயிட் (Ethmoid) நெற்றிப் பகுதிக்கு சிறிது கீழே, இரண்டு கண்களின் குழிகளிடையே பிறவியிலிருந்தே அமைந்திருக்கும் ஜோடி.

மேக்ஸிலரி (Maxilary) முகத்தின் கன்னப்பகுதியில் அமைந்திருக்கும். இந்த சைனஸ் குழிகளும் பிறிவியிலிருந்தே இருக்கும்.

ப்ரன்டல் (Frontal) நெற்றிப்பகுதியில் அமைந்திருக்கும். ஏழு வயதுக்கு பிறகு தான் இவை உண்டாகும்.

ஸ்பீனாயிட் (Sphenoid) மூக்குக்கு பின்னால் அமையும் இந்த ஜோடி சைனஸ்கள் இளம் பருவத்தில் (13 லிருந்து 19 வயதுக்குள்) தான் உருவாகும்.

சைனஸ்களின் அமைப்பு

மூக்கைப் போலவே சைனஸ் அறைகளின் சுவர்கள், ஈரமான ஜவ்வுப்படலத்தால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர சிலீயா (Cilia) எனப்படும் நுண்ணிய ரோமங்களும் சைனஸ் அறைகளின் சுவர்களில் உள்ளன. சைனஸ் அறைகளிலிருந்து மூக்குக்கு செல்லும் குறுகிய, நுண்ணிய குழாய்கள் (வடிகால்கள்) உள்ளன. இதனால் மூக்கும் சைனஸ் அறைகளும், காற்றையும் சளியையும் பாமாறிக் கொள்ளும். மூக்கும் சைனஸ்களும் சிறு குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால், பாதிப்புகளின் சிகிச்சை இவை இரண்டுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது.

சைனஸால் என்ன பயன்?

மூக்கின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சைனஸ் அறைகள் உதவுகின்றன. மூக்கைப் போலவே, அதன் வழியே வரும் காற்றின் தூசி, அழுக்குகளை வடிகட்டி, நீரில் படகை தள்ளும் துடுப்புகள் போல, சீலியா ரோமங்களால் மூக்குக் குழியில் காற்றை தள்ளுகின்றன.

நமது குரலுக்கு நல்ல ஒலி வடிவத்தை கொடுக்கின்றன.

காற்றடங்கிய சைனஸ் வெற்றிடங்கள் இல்லாமலிருந்து அங்கு எலும்புகளே இருந்தால், தலையின் பாரம் அதிகமாகிவிடும். முக எலும்புகளின் வலிமையையும், வடிவத்தையும் பாதிக்காமல் அவற்றின் எடையை சைனஸ் அறைகள் குறைக்கின்றன.

சைனஸின் சளிப்படலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். பாக்டீரியா, வைரஸ்களை தாக்கும் பொருட்கள் சளிப்படலத்தில் உருவாகின்றன.

கண்களுக்கும், மூளைக்கும் நடுவிலே ஒரு ‘குஷன்’ மெத்தை போல, சைனஸ்கள் அமைந்திருக்கின்றன.


Spread the love