விரைவில் நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்!

Spread the love

1. இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். அதிகாலையில் அரைத் தேக்கரண்டி கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான சுடுநீரில் கலந்து அருந்தி வர, குடல் சுத்தமாகும். தண்ணீர் அதிகமாக அருந்தவும். இதன் மூலம் ஓரிரு மணி நேரத்தில் குடல் சுத்தமாகி விடும்.

2. மிளகு பொடி, சுக்குப் பொடியை எடுத்துக் கொண்டு தண்ணீரில் இட்டு கஷாயமாக சூடுபடுத்தி பாலும், வெல்லமும் சேர்த்து அருந்தி வர உடம்பு வலி தீரும்.

3. படிகாரத்தைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

4. சுக்கு, ஏலக்காய், கொத்து மல்லி ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு எடுத்துக் கொண்டு இத்துடன் ரோஜா மொக்குகள் சேர்த்து வாணலியில் சிறிது இளவறுப்பாக்கி, இடித்து பொடி செய்து கொண்டு காலை, மாலை வாயில் இட்டு மென்று முழுங்க தேக உஷ்ணம் சரியாகும்.

5. சூட்டினால் ஏற்படும் வலி நீங்க தொப்பிளைச் சுற்றி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் (அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்) தடவி தொப்புளுக்கும் விட வேண்டும்.

6. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்கு சுறுசுறுப்பு தரும்.

7. சோம்பு சிறிது எடுத்துக் கொண்டு லேசாக வறுத்து பொடித்து, 2 கிராம் அளவு எடுத்து அத்துடன் சர்க்கரை கலந்து தினசரி காலை, மாலை இருவேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரிமானம் இன்மை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையைப் பெருக்கும். சிறுநீரை அதிகப்படுத்தும்.

8. வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை அருந்தி வர சிறுநீரகத்தை குளுமைப் படுத்தும்.

9. சிறுநீர் எரிச்சல் நீங்க சீரகத்தையும் கற்கண்டையும் இடித்துச் சுவைத்துச் சாப்பிடலாம்.

10. வெங்காயத்தை உப்புடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தை வேகவைத்து குடிநீர் செய்து அருந்திவர நீர்த்தாரை கோளாறுகள் குணமாகும்.

11. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் குறையும். ஏலக்காய் எண்ணெய் தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்ட வீக்கம் முதலியவற்றின் மீது தேய்த்து தடவி வர வலி நீங்கும்.

12. நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டுவர இருமல், கபம் நீங்கும்.

13. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து அருந்தச் செய்ய குழந்தைகளுக்கு சளித் தொல்லை நேராது.

14. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்கு அளவு எடுத்து ஓமத்தையும் கலந்து கொடுத்துவர குழந்தைகளின் மாந்தம், வயிற்றுப் பொருமல் நீங்கும்.

15. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது. வாதத்தை, கபத்தை கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவுச் செரிமானம் ஆகவும் உதவுகிறது.

16. வெந்தயக்கீரை செரிமான கோளாறை குணப்படுத்தும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

17. இலவங்கத்தை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டுவர தலைப்பாரம் குணமாகும். இதை வாணலியில் இட்டு சூடுபடுத்தி வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தை தடுக்கும். புண்களில் சீழ் பிடிப்பதை, கை, கால் நடுக்கத்தை இலவங்க எண்ணெய் விட்டு தேய்த்து வர வேண்டும்.

18.       அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சி அருந்த தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயத்தை ஊற வைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர தலை முடி நன்றாக வளரும்.


Spread the love