அளவுக்கு மீறினால் வைட்டமினும் நஞ்சே!

Spread the love

உடலுக்கு அத்தியாவசியமானது வைட்டமின். ஆனால், அதுவே அதிகமானால், நஞ்சாக மாறி, உடலை கெடுத்துவிடும்.

அதாவது, சிலர் மருத்துவர்களின் ஆலோசனை எதுவும் இன்றி, தாங்களாகவே மருத்துவர்களாக மாறி வைட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்வதை பார்த்திருக்கலாம். இதுபோன்ற நபர்கள், தங்களுடைய செயல் எவ்வளவு தவறானது என்பதை இந்த கட்டுரையை படித்தால் தெரிந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் அதையே பழக்கப்படுத்துவார்கள்.

உதாரணத்துக்கு வீட்டில் கண்ணாடி போடும் குழந்தை இருந்தால், அவர்களுக்கு வைட்டமின் ஏ மாத்திரைகளை கொடுத்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வைட்டமினையும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கொடுக்க வேண்டும். அதன் அளவு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவ்வாறின்றி வைட்டமின் சத்துக்களை அதிகளவில் எடுத்து கொண்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.

வைட்டமின் ஏ:

வைட்டமின் ஏ சத்து உடலில் அதிகமானால், அது விஷத்தன்மையை உருவாக்கும். தேவையைவிட இந்த சத்து அதிகமானால், வறண்ட முடி, வறட்சியான, கடினமான தோல், தலைவலி, கல்லீரல் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படும்.

மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, கர்ப்பிணிகள் வைட்டமின் சத்தை எடுத்து கொள்ளவே கூடாது.

வைட்டமின் டி:

இந்த சத்தும், அதிகமானால் விஷத்தன்மையாகிவிடும். ரத்தத்தில் அதிகளவு கால்சியம் சேர்ந்தால் (ஹைபர்கால்சிமியா), அது கிட்னியை சேதப்படுத்தும். இதுமட்டுமின்றி, ரத்தக்குழாய், நுரையீரல், இதயம் ஆகியவற்றையும் தாக்கும்.

வைட்டமின் இ:

சிலருக்கு அடிபடும்போது ரத்தம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு காரணம் வைட்டமின் இ அதிகம் இருப்பதுதான். இந்த சத்து அளவுக்கு அதிகமாக உயரும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். பெரியவர்களுக்கு பக்கவாதம் வரும். குறிப்பாக அவர்கள் ரத்தம் உறையாமல் தடுக்க உதவும் மருந்தை உட்கொள்ளும்போது இந்த பாதிப்பு உருவாகும்.

தசை பலவீனம், உடல் ஒருங்கிணைப்பு இழத்தல், நடப்பதில் கூட சிக்கல் ஆகியவை உருவாகும்.


Spread the love