மாதவிடாய், கருத்தடை மாத்திரைகள் தரும் ஆபத்து

Spread the love

அவசர காரியமாக ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்பொழுது தானே திருமணமாகி இருக்கிறது, இன்னும் இரண்டு மூன்று வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து மாதவிடாய் மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை இப்பொழுது அதிகரித்துக் காணப்படுகிறது. மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடக் கூடிய மாத்திரகளை முழுங்குவது மிகப் பெரிய பாதிப்பைத் தரக் கூடியது இல்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது ஒரு சில சிக்கல்களை நமக்குத் தெரியாமலே உருவாக்கி விடும்.

திருமண நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் நடைபெறும் விஷேசமான நிகழ்ச்சிகள் நடக்கும் காலத்தில் மாதவிலக்கு வந்து விட்டால் கலந்து கொள்ள இயலாமல் போய் விடும். அல்லது ஒரு வித சங்கோஜமான நிலை ஏற்படுமே என்று பெண்கள் நினைப்பதால், மாதவிலக்கைத் தள்ளிப் போட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று எண்ணுகிறார்கள்.

புரோஜெஸ்ட்ரான் கலந்த மாத்திரைகள் மேற்கூறிய மாதவிலக்கு காலத்தை சற்றே தள்ளிப் போடுகின்றன. இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையைச் செய்யும் இம்மாத்திரைகளை தொடர்ந்து பல வருடங்களுக்கு பயன்படுத்தும் பொழுது, புரோஜெஸ்ட்ரான் சுரப்பியில் பல பாதிப்புகள் ஏற்படும்.

தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி, உடலில் நீர் சேருதல், மார்பகங்களில் வலி, ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், இரத்தம் உறைதல் பிரச்சனை போன்றவை ஏற்படும். மேற்கூறிய மாத்திரைகளின் செயல்பாடு, பயன்படுத்தும் நபரின் உடல் ஏற்றுக் கொள்ளும்படியாக அமையும் என்று கூற இயலாது. இதன் காரணமாகவே மாதவிலக்கு மாத்திரையை பயன்படுத்த துவங்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை, பரிசோதனை அவசியமாகிறது. முதலில் கர்ப்பப் பையை ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் மூலம் கருப்பையின் நிலை என்ன? அதில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்றெல்லாம் தெரிந்து கொள்வார்கள்.

இப்பாதிப்புகளை நாம் தெரிந்து கொள்ளாமல், மாத்திரைகளை பயன்படுத்தும் பொழுது தான் மேலும் சிக்கலை உருவாக்கி விடுகிறது. மேலும், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க் கசப்பு, அதிக ரத்தப்போக்கு, உடல் உஷ்ணமும் அதிகரிக்கிறது. எனவே, மேற்கூறிய மாத்திரகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைப்பதே நல்லது.

கர்ப்பத் தடை மாத்திரைகள்

கர்ப்பத் தடை மாத்திரைகளை, கர்ப்பம் தரித்து விடாமல் தாமதப்படுத்துவதற்கும், குழந்தைப் பிறப்பை உடனே விரும்பாமல் சிறிது நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதற்கும் பயன்படுத்துகின்றனர். மருத்துவ ஆலோசனை இன்றி பெண்கள் பயன்படுத்தலாம் என்றாலும், எந்த வித நோயும், உடல் சார்ந்த பிரச்சனைகளும் இல்லாதவர்கள் தவிர, மற்ற அனைவரும் மருத்துவ ஆலோசனை பெற்றுத் தான் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகள், தைராயிடு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைகளை பெறுவது நல்லது. மேலும், இரத்தம் உறைதல், கல்லீரல் நோய் சார்ந்த நோயாளிகளும் மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

கர்ப்பத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் எனும் செயற்கை ஹார்மோன் பொருட்கள் உள்ளன. இதில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு காணப்பட்டால், நீர் உடலில் அதிகம் தங்கி உடல் பருமன் ஏற்படும். ஆனால் தற்போது தயாரிக்கப்படும் மாத்திரைகளில் குறைந்த அளவு ஹார்மோன் இருப்பதால் பக்க விளைவுகள் அவ்வளவாக இல்லை. தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒரு சிலருக்கு உடலுறவில் நாட்டம் குறைய மாத்திரையில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்கும். குறிப்பாக புரோஜெஸ்ட்ரான் உள்ள மாத்திரைகளில் மாதவிலக்கு இடையே இரத்தத் திட்டு, இரத்தப் பெருக்கினை காணலாம். ஆனால், இது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்பு அறவே மறைந்து விடும். ஹார்மோன்கள் குறைந்த அளவு கொண்ட மாத்திரைகள் கூட ஒழுங்கற்ற ஹார்மோன் சம நிலையை சரி செய்ய, கரு உருவாவதலுக்கு உதவ இயலும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும் பொழுது, குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் வரை மாத்திரைகள் பயன்படுத்துவதை நிறுத்திய பின்பு தான் கருவுறுதலை உறுதிப்படுத்த இயலும். ஒரு சிலருக்கு மாத்திரைகள் பயன்படுத்துவதை நிறுத்தி ஆறு மாதங்கள் கூட கருவுறுதலுக்கு காலங்கள் அதிகரித்து விடும்.

கருத்தடை மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் பொழுது, பொதுவாக ஏற்படும் சில பிரச்சனைகள் உடல் வீக்கம், உடல் எடை அதிகரிப்பது, தலைவலி, குமட்டல் மற்றும் மன இறுக்கம் தான். குறைந்த அளவு ஹார்மோன்கள் கொண்ட மாத்திரைகளாக இருப்பதால், எந்த வித பக்க விளைவையும் உருவாக்குவதில்லை. மேலும், இவை தற்காலிகமாக மாற்றங்களே ஒழிய, நிரந்தர பிரச்சனைகள் இல்லை.

பா. முருகன்


Spread the love