குளிர்பான மோகம்

Spread the love

அமெரிக்கர்கள் இன்று தண்ணீரை விட அதிகமான அளவில் சோடா கலர் பானங்களை அருந்துகிறார்கள். இந்தக் கலாசாரம் இந்தியாவிலும் விரைந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்தக் குளிர்பானங்களின் மீது மக்களுக்கு ஏன் தான் இப்படி ஒரு மோகமோ தெரியவில்லை. இந்தப் பழக்கம் இப்போது சிறு குழந்தைகளையும் பிடித்தாட்டுகிறது. இந்தக் கலர், சோடாக்களில் மற்றும் பாட்டிலில் வரும் பழரசங்களில் உள்ள சர்க்கரைச் சத்தும், பதனப் பொருள்களும், பலவகை வண்ணங்களும் செயற்கை மணமூட்டிகளும் பல்வகை நோய்களை உண்டாக்கக் கூடியவை என்று கிரீஷ்ஷர், சன்னோன் என்னும் இருவர் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஒவ்வொரு பாட்டில் குளிர்பானத்திலும் 6 முதல் 8 தேக்கரண்டி வரை ஜீனி உள்ளது. அதாவது 120 முதல் 160 கலோரி தரக்கூடிய வெறும் சர்க்கரைச் சத்து. இதில் விட்டமின்களோ, கனிமச்சத்தோ, நார்ச்சத்தோ எதுவுமில்லை. இப்பானங்களைக் குடித்ததுடே சர்க்கரைச் சத்து உடலில் சார்ந்து இரத்தச் சர்க்கரை தற்காலிகமாகச் ஜிவ்வென்று உயருகிறது. இரத்தச் சர்க்கரை உயரும் போது அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வர இரத்தத்தில் இன்சுலின் அளவு உயர்கிறது. சிறிது நேரத்தில் ஒரு தளர்ந்த உணவு. இதை ஈடு செய்ய இன்னொரு பானம்.

“சத்தற்ற உணவுகளும் உணவுப் பழக்கங்களும்” என்ற தலைப்பில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பி.டி.ஸாய் என்.எஸ்.ஸ்கிரிம்ஹவ் என்னும் இரு மருத்துவர்கள் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில் குவதமலாவைச் சேர்ந்த ஒரு கர்பிணிப் பெண் கருவுற்றிருந்த காலத்தில் அதிகமான குளிர்பானங்கள் அருந்தி வந்ததால் அவருக்குப் போதிய ஊட்டச்சத்துக் கிடைக்காது போயிற்று. இதனால் அவருக்குப் பிறந்த குழந்தை “க்வார்ஷியோர்கர்” என்னும் நோயுடன் பிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.

குளிர்பானங்களில் சத்து இருக்கிறதோ இல்லையோ சிட்ரிக் அமிலமும், பாஸ்பாரிக் அமிலமும் இருக்கின்றன. ஏற்கனவே நாம் அதிகளவு பாஸ்பாரிக் அமிலத்தை பல செயற்கைப் பொருள்கள் மூலம் உட்கொள்ளுகிறோம். அத்துடன் இதுவும் சேர்ந்து சிறுநீரகங்களின் வேலைப் பளுவை அதிகரிக்கின்றது. அதோடு மட்டுமன்றி இது கால்ஷியத்துடன் சேர்த்தே வெளியேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதனால், உடலில் கால்ஷிய இருப்பு குறைகிறது. எலும்புகள் நொய்மையுற்று மெலிந்து எளிதில் உடைந்து விடும் தன்மையடைகின்றன. இது பெண்களை மிகவும் பாதிக்கிறது.

பின் எது தான் சிறந்த பானம் என்று கேட்கிறீர்களா? தண்ணீரை விடச் சிறந்த பானம் எதுவுமில்லை. ஆனால், இன்றைய நம் மக்கள் தண்ணீரை விட Soft drink – குகளையும், ஆல்கஹாலையுமே அதிகம் குடிக்கின்றனர். இதற்கு மேல் காபி, டீயும். குடலில் செரிமானம் தடையின்றி நடைபெறவும், உடலின் கழிவுறுப்புக்களான தோலும், சிறுநீரகங்களும், பெருங்குடலும் தத்தம் பணியைச் செவ்வனே செய்யவும் நிறைந்த அளவில் நீர் தேவை. இந்தத் தேவையைத் தண்ணீர் மட்டுமே ஈடு செய்ய முடியும். தண்ணீருக்குப் பதில் பிற பானங்களைக் கொண்டு தேவையை நிறைவேற்ற முயல்கின்றவர்கள் ஒரு குவளை தண்ணீரில் ஒரு கூடை பாத்திரங்களை அலம்ப நினைக்கின்றவர்களை ஒத்தவர்கள். மேலும், இவர்களுக்குச் செலவு கூடுவதுடன் வேண்டாத சில தொல்லைகளும் வந்து சேர்கின்றன. இவர்களது வியர்வையும், சிறுநீரும் நெடியடிக்கும். மலச்சிக்கல் இவர்களது இணைபிரியா நண்பனாகும். இதற்கு மேல் ஒற்றைத் தலைவலி, அலர்ஜி, நரம்புத் தளர்ச்சி, எலும்பு நொய்மை போன்ற நோய்கள் தோன்றும். தேவையா இவையெல்லாம்?

இரைப்பையில் உணவிருந்தாலும் இல்லாவிட்டாலும் தண்ணீர் எளிதாகச் செல்கிறது. செரிக்கப்பட வேண்டிய தேவை இல்லை. உடல் செயற்பாடுகளில் குறுக்கிடுவதில்லை. குடலை உறுத்துவதில்லை. சிறுநீர் வைக்கோல் நிறத்தில் இருக்கின்ற அளவு நிறையத் தண்ணீர் குடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 குவளை வரை குடிக்கலாம். இந்தியா போன்ற வெப்ப நாட்டில் தண்ணீர் அவசியம் தேவை. காலை, மாலை, கடும்பகல் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், ஒரு எச்சரிக்கை. குடிக்கின்ற நீர் பாதுகாக்கப்பட்ட நல்ல குடிநீராக இருக்க வேண்டும். தனியாக மினரல் வாட்டர் எதுவும் வாங்கிக் குடிக்க வேண்டுவதில்லை. நம் ஊர் தண்ணீரிலேயே நிறைய மினரல்கள் (கனிமச்சத்து) இருக்கின்றன. நல்ல குடிநீர் போதும்.


Spread the love