மெழுகு ஆப்பிள்கள்

Spread the love

நீங்கள் கடைகளில் வாங்கிய ஆப்பிளை சுத்தம் செய்யாமல் அப்படியே சாப்பிடுபவர்களானல் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகும்.

கடைகளில் வாங்கும் ஆப்பிளின் தோலை லேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு பொருள் திரண்டு வரும். உண்மையில் இது மெழுகுதானா என்றால் சந்தேகமே வேண்டாம். மெழுகேதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. இமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் போன்ற ஆப்பிள் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ ஆப்பிள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன. இந்த ஆப்பிள்கள் எல்லாம் பறித்த இடத்திலிருந்து இங்கு வந்து சேரவே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. ஆப்பிளின் இயற்கை தன்மை 10 நாட்களில் கெட்டுப்போய்விடும். அவ்வாறு கெட்டுப்போகாமல் இருக்க ஆப்பிளின் மேல் ஒரு வகை மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகைப் பூசிவிட்டால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு கவலையில்லை. ஆப்பிள் அப்படியே கெடாமல் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் இஷ்டப்படி விற்றுக்கொள்ளலாம்.

பொதுவாக ஆப்பிள்களில் மட்டுமின்றி எல்லா காய்கறிகள் மற்றும் அனைத்து பழ வகைகளுக்கும்  மெழுகுப் பூச்சு போன்று இயற்கையாகவே இருக்கும். இது பத்து நாட்களுக்கு மட்டுமே கவசமாக இருக்கும். இப்படிப்பட்ட மேலுறை அதற்கு மேல் தாங்காது, வியாபாரிகளுக்கு இந்த 10 நாள் தான் இயற்கையின் கெடு. ஆனால் அவர்கள் அது போதாது என்று ஆப்பிளை தண்ணீரில் கழுவி இயற்கை மெழுகுப் பூச்சை அகற்றிவிட்டு, பளபளப்பாகவும் கவர்ச்சியாகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் செயற்கையான மெழுகுப் பூச்சை பூசுகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் மெழுகில் மூழ்கி எடுக்கப்படாத, ஒரு ஆப்பிள் கூட சந்தைக்கு அனுப்பப்ப்டுவதில்லை வெளிநாடுகளிலேயே இதை செய்துதான் அனுப்புகிறார்கள்.

இவ்வாறு மெழுகுப் பூச்சுக்கென சில நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் இருக்கிறது. பீஸ் வேக்ஸ், கார்னோபா வேக்ஸ், ஷெல்லாக் வேக்ஸ் என்ற மூன்று வகையான மெழுகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும், ஓர் ஆப்பிளின் மேல் 3 மில்லி கிராம் என்ற அளவிலே பயன்படுத்த வேண்டும். இதில் பீஸ் வேக்ஸ் (ஙிணிணிஷி கீகிஙீ) என்பது தேனடையில் இருந்து கிடைக்கும் மெழுகாகும்.. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களில் இருந்து கிடைக்கும் மெழுகு. இந்த இயற்கை மெழுகுகளை உபயோகிக்க இந்திய உணவு கலப்பட தடுப்புச் சட்டமும் அனுமதியளிக்கிறது. ஆனால், பிரச்சினை இந்த மெழுகில் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து மெழுகில் குளித்து வரும் ஆப்பிள்களை மேலும் பளபளப்பாக காட்டுவதற்காக, நம்மூர் வியாபாரிகள் பெட்ரோலிய மூலப்பொருளில் இருந்து எடுக்கப்படும் நைட்ரேட் கலந்த செயற்கை மெழுகு திரவத்தில் மூழ்க வைத்து அத்துடன் உள்நாட்டு ஆப்பிள்களையும் இந்த மெழுகில் குளிப்பாட்டி அதில் ஸ்டிக்கர் ஒட்டி, வெளிநாட்டு ஆப்பிள்கள் என்று கூறி அதிக விலைக்கு விற்கிறார்கள். மெழுகோடு நைட்ரேட் சேர்க்கப்படுவதால் பளபளப்பும் கவர்ச்சியும் கூடுகிறது. நீர்சத்து வெளியேறாமல் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கிறது.

மெழுகில் சேர்க்கப்படும் நைட்ரேட்டானது, ‘நைட்ரைஸோ மார்போலின்’ என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கேன்சர் நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இப்போது ஆப்பிள் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு, செர்ரி பழம், குடைமிளகாய் போன்றவற்றிலும் மெழுகுப் பூச்சு பூசப்படுகிறது. இந்த மெழுகு நமது உணவுக் குழாயில் செரிமானம் ஆகாமல் அப்படியே படிந்து நின்றுவிடும். இந்தப் படிமம் கேன்சரை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது என்கிறது நவீன மருத்துவ உலகம்.

தோலை நீக்கி விட்டு மற்றொரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி சாப்பிடுவது,  இல்லையென்றால் கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவதுதான் நமக்கு நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.


Spread the love