பளபளக்கும் பற்கள்

Spread the love

பற்கள் என்பது மிகவும் அத்தியாவசியமானவை. பல்லு போனால் சொல்லு போச்சுஎனும் முதுமொழியே உள்ளது. பற்கள் நன்றாக அமைவதை பச்சரிசிப் பல் எனக் கூறுகிறோம். முகத்திற்கு அழகும் பொலிவும் சேர்ப்பவை பற்கள் நாம் பேசுகின்ற வார்த்தைகள் தெளிவாகவும் உச்சரிப்பு சரியாகவும் அமைந்திட பற்கள் அவசியம்.

நாம் உண்ணுகின்ற உணவினை ருசித்து மென்று உண்பதற்கு பற்கள் மிகவும் அவசியம். ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கிட பற்கள் மிக மிக அவசியம். நொறுங்கதின்றால் நூறு வயதுஎனும் முதுமொழிக்கு ஏற்ப நொறுங்க மென்று தின்றால் தான். உடலுக்கு ஆரோக்கியம் அப்பொழுது தான் நீண்ட ஆயுளைப் பெற முடியும்.

அத்தகைய பெருமை வாய்ந்த பற்களைப் பாதுகாப்பாக பராமரிப்பது மிகவும் முக்கியம் பற்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் அவற்றால் நமக்கு ஏற்படும் தொல்லைகளும் ஏராளம்.

பல் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பற்குழி விழுவது, பல் உடைவது, பல் பூச்சி, பல் கூசுவது, பல் முளைப்பது, பல்லின் மேற்பகுதி வெளியே வருவது ஈறுகளில் இரத்தம் வருவது ஈறுகள் வீங்குவது என ஏராளமான பல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பல்வலி ஏற்பட பெரிதும் காரணமாக அமைவது பற்குழிகள் தான், இரண்டு பற்களின் மேற்பகுதியின் நடுவில் பல்லின் இரு படலங்களுக்கு நடுவே உணவுப்பொருட்கள் தங்கியிருந்து அது நாளடைவில் அறிப்பை ஏற்படுத்தி பல்லில் குழி போல விழுந்து விடும். இது நாள் செல்லச் செல்ல ஆழமாக உள்ளே சென்று ஈறுகளையும் அதன் பின் பல் ஈறுகளின் நரம்புகளையும் இரத்த நாளங்களையும் பாதிக்கும். வெறும் குழியாக இருக்கும் பொழுது பல்வலி ஏற்படுவதில்லை. அதுவே ஆழமாக ஈறுகள் வரை சென்று விடும் பொழுது குளிர்ந்த அல்லது சூடான உணவுகளை உண்ணவோ பானங்களை பருகவோ, முடியாமல் வலியாக ஏற்படுகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் பற்கள் சரியாக பராமரிக்கப்படாததேயாகும்.

அடுத்த படியாக பல்வலிக்கு காரணமாக அமைவது ஈறுநோய்கள். ஈறுநோய்களுக்கு அடிப்படைக் காரணம் காரைகள். காரை என்பது உணவுத் துண்டுகள், பாக்டீரியா மற்றும் எச்சிப் சேர்ந்து ஏற்படும் ஒரு வகை. கலவை தான். இது நாளடைவில் பற்களில் தங்கி, பின் ஈறுகளை பாதிக்கும் இதனால் முதலில் ஈறுகளில் ரத்தக் கசிவாக ஏற்படும் பின்னர் அதுவே பற்களை தாங்கி நிற்கும் எலும்புகளையும் கூட பாதிக்கும். இதற்கும் அடிப்படைப் காரணம் சுகாதாரமின்மை அல்லது பராமரிப்பின்மையே ஆகும்.

பல்வலியிலிருந்து விடுபட

·    ஆங்கில மருந்துகளை உட்கொள்ளலாம் (மருத்துவர்கள் ஆலோசனையுடன்)

·    கிராம்புத் தைலத்தை பஞ்சில் நனைத்து வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொள்ளலாம்.

·    சூடான குளிர்ச்சியான பானங்களை உணவுகளைத் தவிர்த்திடலாம்.

·    இனிப்பு வகைகள் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

·    சுடு தண்ணீர் நிரப்பிய பையை (பாலிதீன்) வலியுள்ள வெளிப்புறத்தில் வைக்கலாம்.

·    பூண்டு, வெங்காயம் போன்றவை பல்வலியில் வலியைப் போக்கிடக் கூடியவை. அவற்றை அரைத்து வலியுள்ள இடங்களில் உள்ளே வைக்கலாம்.

ஆயுர்வேத முறை

·    மிதமான சூடான தண்ணீரில் 10 கிராம் திரிபலா சூரணத்தைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் வய் கொப்பளிக்கலாம்.

·    காஞ்சனார குகுலு மாத்திரை 2 – இரு வேளை உட்கொள்ளலாம்.

பல்வலி வந்த பின்னர் அவதிப்படுவதை விட பராமரிப்பது மிகவும் அவசியம். பற்பசை எதுவாக இருப்பினும் காலை எழுந்தவுடன் பல் துலக்குவது மிக மிக அவசியம். போதுமான நீரில் அந்த பற்பசை போகும் வரை நன்றாக வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இனிப்பான உணவுகள் உண்ட பின்னர் வாயை சுத்தப்படுத்துவது மிக மிக அவசியம். வாரம் ஒரு முறை மருதப்பட்டை தூளை வைத்து பல் துலக்கலாம். திரிபலா சூரணத்தை வைத்துக் வாரம் ஒரு முறை பல் துலக்கலாம். பற்களில் உள்ள கரைகள் நீங்குவதற்கு கொய்யாப்பழத்தை பற்களில் படும்படி சாப்பிடலாம். அல்லது எலுமிச்சம்பழம், உப்பு சேர்ந்த கலவையை வைத்து பல் துலக்கிடலாம். சரியான முறையில் பராமரிக்க விரும்புபவர்கள் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து பற்களை சுத்தம் செய்து கொண்டு அதன் பின்னர் பற்களை தாங்களே பராமரித்துக் கொள்ள பற்கள் பளபளக்கும்.


Spread the love