முடிந்த அளவு முடியைத் (Hair)தாழ்த்திப் பேசுவது நமது உடன் பிறந்த பண்பு. இருந்த போதிலும் முடிக்காக நாம் செலவழிக்கும் நேரமும் பொருளும் அளவிடமுடியாதது. தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறது. கண்டபடி முடி கொட்டுகிறது என்று பெண்கள் கவலைப்படும் அதே வேளையில் முகத்தில் வளரும் முடியை நாள்தோறும் வழித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம் ஆண்களுக்கு.
இந்த முடியை மழிக்கின்ற போது ஏற்படுகின்ற வெட்டுக்கள், குத்துக்கள், காயங்கள் தாம் எத்தனை. லட்சக்கணக்கான ஆண்கள் தினந்தோறும் இந்தச் சங்கடத்துக்கு ஆட்படுகிறார்கள். தாறு மாறான ரேசர் பயன்பாட்டால் வெட்டப்பட்ட பருக்கள், கட்டிகள் எத்தனை? இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி தரமான ரேசர்களைக் கொண்டு முறையாகச் சவரம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான்.
ஒரு வயது வந்த ஆணின் முகத்தில் இருக்கின்ற சுமார் 15,000 முதல் 30,000 வரையான முடிகள் தினமும் 0,385 மி,மீட்டர் வளருகின்றன. மூன்று நாட்களில் முகத்தில் வளருகின்ற 1.15 மீட்டர் முடி நம்மைப் பஞ்சையாய், பரதேசியாய், காய்ச்சலில் விழுந்தவனாய்க் காட்டமுற்படும். நல்ல வேளை பண்டைய காலத்து நாவிதர்கள் பயன்படுத்திய கத்திகளை விட்டு விட்டு நாம் வெகுதூரம் வந்து விட்டோம்.
1700 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 200, 300 ஆண்டுகள், அதாவது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஒரு பக்கம் கூர்மையுள்ளVALLET வகைப் பிளேடுகளே பயன்பாட்டில் இருந்தன. அதன் பின்னர் இரு பக்கமும் கூர்மையுள்ள (Double Edged) சேப்டி ரேஸர்கள் வந்தன. செப்டி ரேஸர்கள் என்று இவை அழைக்கப்பட்டாலும் இவற்றால் வெட்டுப்பட்டுச் செப்டிக் ஆன புண்கள் ஏராளம்.
இந்தத் தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்க வந்தது போல் பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனனம் செய்தது இரண்டு பிளேடுகள் இணைந்த கார்ட்ரிட்ச் வகை (Double bladed cartridge razors) பிளேடுகள். இவற்றை ரேஸரில் மாட்டுவதும் எடுப்பதும் எளிது. பிளேடுகள் உள்ளடங்கி இருப்பதால் வெட்டி விடும் என்னும் பயமில்லை. ஆனால் பென்சில் சீவவும் பேப்பர் கட் செய்யவும் இந்தப் பிளேடுகள் உதவாமல் போனது பற்றிச் சிறிது வருத்தம் தான்.
இந்தப் புதிய வகை கார்ட்ரிட்ஜ் ரேசரை அடுத்துப் பலகோடி ரூபாய் செலவில் கண்டுபிடிக்கப்பட்ட முன்னும் பின்னும் ஆடக்கூடிய ரேசரை அறிமுகப்படுத்திய ஜில்லெட் நிறுவனம் “சுகமான சவரம் வேறெதுவுமில்லை” என்று விளம்பரம் செய்தது.
சவரக் கத்திக் கம்பெனிகள் பல கோடி ரூபாய்களைப் புதிய புதிய கத்திகள் கண்டுபிடிப்பதற்காகச் செலவழித்த வண்ணம் உள்ளனர். நல்ல பல புதிய கண்டு பிடிப்புகள் வருமென்று எதிர்பார்ப்போம். அதற்கிடையில் தற்போது கிடைக்கும் சாதனங்களைக் கொண்டு ஆபத்தில்லாத சவரம் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதல் படி என்ன?
காலையில் எழுந்தவுடனே சவரம் செய்து கொள்ள முற்படாதீர்கள். முகத்திலுள்ள உறக்கக் கலக்கமும் நீர்ச்சுரப்பும் நீங்க ஒரு பத்து நிமிட இடைவேளி கொடுங்கள். பல் தேய்த்து ஒரு காப்பி குடித்த பின்னர் தொழிலைத் தொடங்கினால் வசதியாக இருக்கும்.
ஷேவிங் கிரீம் தேவையா?
ஆம் தேவைதான். ஆனால் முதலில் நன்றாகத் தண்ணீர் விட்டு முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். இதனால் தாடியும் மீசையும் மென்மையாகி எளிதாகச் சொன்னபடி கேட்கும். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை ஈரமாக்கிக் கொண்டு கிரீமைத் தடவுங்கள்.
எந்த மாதிரி கிரீம் தேவை?
மணமும் குணமும் உங்களுக்குப் பிடித்திருக்குமானால் எந்த கிரீமும் நல்ல கிரீம்தான். இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஒரு வகையான ஷேவிங்ஜெல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை முகத்தில் எளிதாகப் பரவுவதுடன் தாடி, மீசை முடியை விரைந்து மென்மையாக்குகின்றன என்று சொல்கிறார்கள். கிரீமோ, ஜெல்லோ எதுவானாலும் முகத்தில் தடவி நுரை எழச் செய்த பின்னர் 2,3 நிமிடங்கள் கழித்து சவரத்தைத் தொடங்குவது நல்லது.
எந்த ரேஸர் வாங்கலாம்.
கூர்மை மிக்க பிளேடுகள், பல கிடைத்தாலும் இரட்டை பிளேடு கொண்ட கார்ட்ரிட்ஜ் போடுகின்ற ரேஸர் தான் நல்லது, இதில் போடுவதற்கென்று வில்மன், ஸெவன் ஒகிளாக், ட்ரேசர் என்று பல காட்ரிட்ஜ்கள் கிடைக்கின்றன. ஒரே நாளில் இரண்டு முறை சவரம் செய்வதாக இருந்தால் எலெக்ரிக் ஷேவரைப் பயன்படுத்துவது நல்லது.
எப்படி மழிப்பது?
முதலில் காது அருகில் கன்னத்தில் தொடங்குங்கள். விட்டு விட்டு இழக்காமல் ஒரே நீளமாக இழுக்கப் பழகுங்கள். உதட்டுக்கு கீழும் தாடையிலும் உள்ள முடியைக் கடைசியில் எடுங்கள். ஏனெனில் அவை கடினமாக இருக்கும்.
ஆஃப்டர் ஷேவ் லோஷன் தேவையா?
நாமே செய்து கொள்ளும் சவரம் என்பதால் லோஷன் தேவையில்லைதான் என்றாலும் லோஷன் தடவும்போது நுண்மத் தொற்று ஏற்படவிருக்கும் ஒன்றிரண்டு வாய்ப்புகளையும் தவிர்த்து விடலாம். முகத்திற்கும் குளுமையாக இருக்கும்.
ஆயுர்வேதம்.காம்