சித்தகத்தி சிறப்பானது!

Spread the love

சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை எனவும் பெயர் பெறும். கருஞ்சிவப்பு மலர்களை உடையவை. கரும்செம்பை எனப்படும். இலை பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும்; பூ வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், தாய்ப்பால் குறைக்கும் மருந்தாகவும், நாடி நடையை அதிகரிக்க கூடியதாகவும் பயன்படும்.

இலையை அரைத்துக்கட்டி வர எவ்வகைக் கட்டியும் பழுத்து உடைந்து ஆறும்.

இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்ட ஒடு வாயுக் கட்டிகள் ஆறும்.

இலை, இலைச்சாறு ஆகியவற்றை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வர, வெட்டுக்காயம் சீழ்ப்பிடிக்காமல் ஆறும்.

இலைச்சாறு 15 மி.லி. சாப்பிட்டு வர இரத்தம் தூய்மையாகி கரப்பான், மேகரோகக் கிருமிகள் நீங்கும். சிறுநீர் பெருகும்.

இலைச்சாறு 15 மி.லி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வாய்வால் தடைப்பட்ட மாதவிடாய் வெளியாகும்.

கருஞ்செம்பை இலையுடன், குப்பைமேனி இலை சமன் கலந்து சிறிது உப்பு சேர்த்து அரைத்துத் தடவி (3 மணி நேரம் கழித்து) குளிக்க சொறி, சிரங்கு, படை தீரும்.

நல்லெண்ணெயில் 10 பூ, சிறிது கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி சேர்த்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க (4 நாள்களுக்கு 1 முறை) தீராத தலைவலி, சன்னி, நீர்க்கோவை, கபாலக்குத்து, குடைச்சல், பீனிசம், தலைப்பாரம், மண்டையில் நீர் ஏற்றம், கழுத்து, இசிவு, கண், மூக்கு ஆகியவற்றில் தொடக்க நோவுகள் தீரும்.

விதையை ஊற வைத்து அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்து வர ஒழுங்கில்லாத மாதவிடாய் ஒழுங்கு படும். பெரும்பாடு தீரும்.

இலைச்சாறு வெள்ளுள்ளிச்சாறு வகைக்கு அரை லிட்டர் நல்லெண்ணெய் 1 லிட்டருடன் கலந்து அதில் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் பாலில் மென்மையாய் அரைத்துக் கலந்து சிறுதீயில் எரித்துப் பதமுறக் காய்ச்சி வடித்து (கருஞ்செம்பைத் தைலம்) வாரம் 1 முறை தலையில் இட்டுக் குளித்து வர மூக்கடைப்பு, மண்டைக்குத்தல், தலைப்பாரம், தலை நீரேற்றம், காது மந்தம் ஆகியவை தீரும்.

சத்யா


Spread the love