உருளைக்கு நிகரான சேம்பு-1

Spread the love

சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துள்ளனர். குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து உண்ணக் கொடுப்பார்கள். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.

சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பது தான். உருளைக்கிழங்கினைப் போன்ற சுவையுடன் சத்துக்களையும் கொண்டு வெப்பமண்டலங்களில் அதிகமாகக் காணப்படுவதால் இது வெப்பமண்டலத்தின் உருளை என்று அழைக்கப்படுகிறது.

இது ஆசியா, பசிபிக் நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவின் அமேசான் போன்ற பகுதிகள் இது பராம்பரிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் கொலோக்காசியா எஸ்குலென்டா என்பதாகும்.

சேப்பங்கிழங்கின் அமைப்பு மற்றும் வளரியல்பு

சேப்பங்கிழங்கு ஸ்டார்ச்சினை அதிகமாகக் கொண்டுள்ள நீண்ட உருளை வடிவ தண்டுக் கிழங்காகும். இது பெரிய செடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

இத்தாவரம் சுமார் 5-6 அடி வரை வளரும். இதனுடைய இலைகள் யானையின் காதுபோல் நீண்டு இதய வடிவில் காணப்படும். எனவே இது யானைக்காது கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

சேப்பங்கிழங்கு இலை

இச்செடி நன்கு வளர ஈரப்பதமான மண்வளமும், வெப்பமும் தேவை. நீர்நிலைகளுக்கு அருகில் நன்கு வளரும் தாவரங்களுள் இதுவும் ஒன்று. இத்தாவரத்தில் பூக்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.

சேப்பங்கிழங்குப்பூ

சேப்பங்கிழங்கு தரைக்கு அடியில் நீண்ட உருளைவடிவில் காணப்படும். கிழங்கின் மேற்புறமானது கடிமான வளையங்களைப் போன்ற அமைப்புடன் பழுப்புநிறத்தில் 35 செமீ நீளத்திலும், 15 செமீ குறுக்களவு கொண்டும் இருக்கிறது.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கானது பயிர் செய்து 8-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இச்செடியின் இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும்போது அறுவடைக்கு தயாராக இருப்பதை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

கிழங்கின் உட்புறமானது பயிரிடப்பட்டிருக்கும் கிழங்கின் வகையைப் பொறுத்து வெள்ளை, ஊதா, வெளிர் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களில் இருக்கும்.

இக்கிழங்கு லேசான இனிப்பு சுவையினைப் பெற்று இருக்கிறது. இக்கிழங்கு வரலாற்றுக்கு முந்திய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று.

சேப்பங்கிழங்கின் வரலாறு

சேப்பங்கிழங்கின் தாயகம் தென்இந்தியா என்று கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து இது சீனா, மியான்மார், இந்தோனேசியா நாட்டிற்குப் பரவியது.

அங்கியிருந்து ஜப்பான், ஹவாய், மெலனேசியா, பொலினேசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. வரலாற்று காலத்தில் இது எகிப்து, மத்தியதரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்கா, கரீபின், பாப்பு நியூகினிவா உள்ளிட்ட இடங்களுக்குப் பரவ தொடங்கியது.

வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் இது செழித்துப் பரவ தொடங்கியது. இன்றைக்கு இது மேற்கு இந்திய தீவுகள், மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய சீனா ஆகிய இடங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் குறைந்த இடங்களில் மட்டும் பயிர் செய்யப்படுகிறது. பசிபிக் தீவுகள் மற்றும் பாப்பு நியூகினியாவில் இது நிரந்தர உணவாக உள்ளது.


Spread the love