ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தப்பருவத்தில் எத்தகைய உணவு, பழக்க வழக்கங்கள் உடல் பயிற்சி முதலியன உடலுக்கு வளர்ச்சி, வலிமை, நிறம் ஆகியவற்றை வளர்க்கின்றனவோ அத்தகைய உணவு, பழக்கவழக்கங்கள் அந்த மனிதனுக்கு அந்தப் பருவத்திற்கு ஏற்றவை. நன்மை அளிப்பவை. உடலுக்கு ஏற்றவைகளாகின்றன.
சரகசம்ஹிதை
ஆயுர்வேதம் 5000 வருடங்களாக வழி வந்த மருத்துவ சிகிச்சை முறை. பருவ பருவகால மாற்றங்களை கணித்து, அவற்றுக்கு ஏற்றபடி வாழ வேண்டிய வாழ்க்கை முறையை வலியுறுத்திருப்பது ஆயுர்வேதத்தின் தனிச்சிறப்பு. உணவை அளவுடன் உண்ண வேண்டும். அந்த அளவுடன் உண்ணும் உணவும் பருவகாலத்திற்கேற்ப அமைய வேண்டும். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் குறிப்பிட்ட உணவு வகைகள் இருக்கின்றன.
பருவகால வாழ்க்கை முறையை ‘ருதுச்சர்யா‘ என்கிறது சரகசம்ஹிதை. இதில் தினசரி உணவு, வாழ்க்கை முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ரிது என்றால் காலம் (அ) பருவம் என்று பொருள். ‘சர்ய‘ என்றால் நியமம் (அ) ஒழுக்கம். ரிதுச்சர்யத்தை அனுசரித்து வாழ்ந்தால், உடலின் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகரித்திருக்கும்.
பருவ காலங்கள் ஒருவரின் த்ரீதோஷங்களை பாதிக்கும். உதாரணமாக வெய்யில் காலம் பித்த தோஷத்தை தூண்டி விடும். பித்த தோஷம் அதிகமுள்ளவர்களுக்கு வெய்யிலின் தாக்குதல் அதிகமாக பாதிக்கும். ஏனென்றால் பித்த தோஷத்தின் தன்மையே சூடு, ஈரம் முதலியவை. இதே போல, வாத தோஷம் அதிகமுள்ளவர்கள் இலையுதிர் காலங்களில் (மார்கழி, தை, மாசி) அதிகமாக ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்படுவார்கள். கபதோஷமுடையவர்கள் குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பருவங்களின் பிரிவுகள்
பருவங்களைக் கொண்டு வருடம் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் சிசிர ருது, கிரிஷ்ம ருது, (மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி) இம்மூன்று பருவங்களில் கதிரவன் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கிச் செல்கிறான். அதனால் இப்பருவத்ற்கு உத்தராயணம் அல்லது ஆதான காலம் எனப்பெயர்.
வர்ஷருது, சரத் ருது, ஹேமந்த ருது (ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை) இம்மூன்று பர்வங்களில் தினகரன் தென்திசை நோக்கிச் செல்வதால் அதற்கு தக்ஷிணாயணம் அல்லது விஸர்க எனப் பெயர்.
உத்தராயனம்
இந்தகாலத்தில் காற்று மிக வறட்சியாக வீசும். இதனால் உலகில் (சுற்றுப்புற சூழ்நிலை) எண்ண¬ப்பசை நீங்கி வறட்சியாக காணப்படும். இதனால் மனிதர்களுக்கு வலிமைக்குறைவு ஏற்படுகிறது. என்பது சரகஸம்ஹிதையின் கருத்து.
தக்ஷிணாயனம்
இந்த பருவத்தில் சூர்யன் தெற்குத்திசையை நோக்கிச் செல்கின்றான். காலத்தின் இயல்பு, மேகம், காற்று, மழை இவற்றால் கதிரவனின் கருமை குறைந்து விடுகிறது. சந்திரனுக்கு வலிமை கூடுகிறது. உலகின் வெப்பம் தணிந்து மனிதர்களின் உடலில் வலிமை வளர்கின்றது.
ஆறு பருவ காலங்கள்
முன்பு சொன்னபடி பருவங்களுக்கேற்ப வருடம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் வருடம், சித்திரை மாதத்தை முன்னிட்டு தொடங்கி கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகின்றது.
வஸந்த ருது (சித்திரை – வைகாசி)
கிரீஷ்ம ருது (ஆனி – ஆடி)
வர்ஷ ருது (ஆவணி – புரட்டாசி)
சரத் ருது (ஐப்பசி – கார்த்திகை)
ஹேமந்த ருது (மார்கழி – தை)
சிசிர ருது – மாசி – பங்குனி)
ஆயுர்வேதம் மார்கழி மாதத்தையே ஆண்டின் தொடக்கமாக கருதுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாதங்களில் சிறந்தது மார்கழி என்பது மட்டுமல்ல, ஆரோக்கிய ரீதியில் மார்கழி முக்கியமான மாதம்.
உணவு நலம் ஜுலை 2010
சீசன், உணவு, மாற்றம், பருவத்திறகேற்ற, உணவு, உணவு, பழக்க வழக்கங்கள், உடல், ஆயுர்வேதம், மருத்துவ சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தி, பருவங்களின், பிரிவுகள், சரகஸம்ஹிதை, பருவம், மனிதர்கள், உடல் வலிமை, ஆரோக்கியம்,