Sarkarai kolli powder benefits in Tamil
சர்க்கரைக்கொல்லி கொடிவகை பயிராகும். சிறுகுறிஞ்சான் என்ற மூலிகையே சர்க்கரைக்கொல்லி என்றழைக்கப்படுகிறது. சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் தாவரம் முழுவதும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இது பசுமை இலை காடுகளிலும், பருவமழைக் காடுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றது. இது எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், இலைக் கோணத்தில் அமைந்த கொத்துக்களையும் உடைய கற்றுக்கொடி ஆகும். இதன் இளம் கொடியின் மேற்பகுதியில் வெளிரிய பசுமை இலைகளும், மஞ்சள் நிற பூக்களும் காணப்படும்.
இதன் முதிர்ந்த காயில் காற்றில் பறக்கக்கூடிய பஞ்சு பொருந்திய விதைகள் காணப்படும். இது முற்றிய குச்சிகள் அல்லது மூன்று முதல் நான்கு மாத நாற்றுக்கள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் மகாபலேஸ்வரர், தாய்வான் போன்ற இடங்களில் வேலிப் பயிராக வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சர்க்கரைக்கொல்லி |
தாவரப்பெயர் | Gymnema Sylrestre, Asclepiadaceae |
வேறு பெயர்கள் | சிறுகுறிஞ்சான், சிரிங்கி |
பயன் தரும் பாகங்கள் | இலை, வேர், தண்டு |
சர்க்கரைக் கொல்லி இலையை நன்கு மென்று துப்பியதும் சர்க்கரையை வாயில் போட அவை இனிப்பின்றி மண் போன்று இருக்கும். 1930-ல் இருந்து சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் உணரப்பட்டு வந்துள்ளது.
மருத்துவ பயன்கள்
சர்க்கரைக் கொல்லி தாவரத்தில் உள்ள ஃபிலவனோல்ஸ் முக்கிய காரணியாகும். இது மலச்சிக்கல், சளி, இருமல், ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகளுக்கு பெரிதும் துணை புரிகிறது,
இருமல் நீங்க
சர்க்கரைக்கொல்லி வேரை நன்கு நசுக்கி 40 கிராம் அளவு எடுத்து, அதனை ஒரு லிட்டர் அளவு நீர் சேர்த்து 100 மில்லியாக காய்ச்சவும். பின் இதனை வடிகட்டி 30 மில்லி காலை, மதியம், மாலை என கொடுத்து வர காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை நீங்கும்.
விஷக்கடி நீங்க
சர்க்கரைக்கொல்லி எப்படிப்பட்ட விஷக்கடியானாலும் விரைவில் முறிக்கும் தன்மையுடையதாகும். இதன் கீரையை விஷப்பூச்சி கடித்த இடத்தில் வைத்து கட்டலாம். அல்லது கீரையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
உடல் ஆரோக்கியம் மேம்பட
சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வர பசி உணர்வு தூண்டப்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மூச்சுத் திணறல் நீங்க
சர்க்கரைக்கொல்லி வேர் சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை இவற்றை வெந்நீரில் சேர்த்து உட்கொள்ள கபம் வெளியாகி ஆஸ்துமா, மூச்சுத் திணறல் நீங்கும்.
உதிரச் சிக்கல் நீங்க
சர்க்கரைக்கொல்லி கொடி இலை 10 கிராம், களா இலை 20 கிராம் இவற்றை நன்கு மையாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள், உதிரச் சிக்கல் கற்பாயாசக் கோளாறு ஆகியவை நீங்கும்.
சுரம் நீங்க
50 கிராம் சர்க்கரைக்கொல்லி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை 10 கிராம் வீதம் எடுத்து நன்கு இடித்து ஒன்றாக சேர்த்து அரை லிட்டர் அளவில் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இது கால் லிட்டர் அளவில் வற்றியதும் இறக்கவும். பின் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை என 10 மில்லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் கூடிய சுரம் தணியும்.
நீரிழிவு கட்டுப்பட
சர்க்கரைக்கொல்லி கீரை மற்றும் நாவல் பழக் கொட்டைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கவும். இதனை தினமும் காலையில் இரண்டு தம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு பொடி சேர்த்து நன்கு காய்ச்சி ஒரு தம்ளர் அளவில் கஷாயமாக்கி குடித்து வரலாம்.
சர்க்கரைக்கொல்லி கீரையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நீர் ஊற்றி நன்கு அவிக்கவும். பின் சிறிது நேரம் இதனை அப்படியே ஊற வைக்கவும். இவ்வாறாக வாரம் இரு முறை சாப்பிட்டு வர நீரழிவு நோயின் தாக்கம் குறையும்.
சர்க்கரை நோய் கட்டுப்பட
இன்சுலின் குறைபாட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிக்கிறது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து, கணையத்திலிருக்கும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும் இதிலுள்ள ஜிம்னிக் அமிலம் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவை குறைக்கிறது.
சர்க்கரைக்கொல்லி சூரணம் பல வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் துணை மருந்தாகவும் பயன்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் இனிப்புகள் மீதான சுவை உணர்வை வெகுவாக மட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வர இது பெரிதும் உதவுகிறது.
சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து அதனை இடித்து பொடி செய்யவும். பின் இதனை நெய்யில் கலந்து உட்கொள்ளவும். இவ்வாறு செய்து வர சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் நீங்கும்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கண்டறிய உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் சிறு குறிஞ்சான் பொடியை ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இப்பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை
சர்க்கரைக் கொல்லி இலையை பவுடர், டீ மற்றும் மாத்திரையாக எடுத்துக் கொள்ளலாம்.
மாத்திரையாக – 100 மில்லி கிராம்
பவுடராக – அரை டீஸ்பூன்
இலைகள் – ஒரு டீஸ்பூன்
தேநீர் தயாரிக்கும் முறை
சர்க்கரைக் கொல்லி இலையை கொதிக்கும் நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.பின் இதனை வடிகட்டவும். இதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்தும் குடிக்கலாம்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம்.
ஆயுர்வேதம்.காம்