Sangu poo benefits
சங்கு பூவானது கொடி வகை செடியாகும். சங்கு பூவில் வெள்ளை மற்றும் நீல நிற மலர்களை கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளைப்பூ பூக்கும் தாவரத்தில் மருத்துவ பயன் அதிகம் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இதன் விதைகள் நல்ல மணமுடன், புளிப்புச் சுவையுடன் காணப்படும். இலைகள் துவர்ப்புத் தன்மை உடையது. சங்கு பூவானது அனைத்து இடங்களிலும், வேலி ஓரங்களிலும் வளரக் கூடியதாகும். இது அழகிற்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சங்குப்பூ |
தாவரப்பெயர் | CLITORIA TERNATEA |
தாவரக்குடும்பம் | FABACEAE, PAPINONACEAE |
வேறு பெயர்கள் | காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் |
பயன் தரும் பாகங்கள் | இலை, வேர், விதை. |
மருத்துவ பயன்கள்
வெள்ளைப்படுதல் நீங்க
சங்குப்பூ வேர், கீழாநெல்லியின் முழுத்தாவரம், யானை நெருஞ்சில் இலை இவற்றில் ஒரு கைப்பிடி என சம அளவு எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதனை நெல்லிக்காயளவு தயிரில் கலக்கி உட்கொள்ளலாம். இவ்வாறாக பத்து நாட்கள் வரை தொடர்ந்து காலை வேளையில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
யோனிப் புண்கள் நீங்க
சங்குப் பூவினை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரால் புண்களை கழுவலாம். இது பால்வினை நோய், வெள்ளைப்படுதல், யோனியில் ஏற்படும் துர்நாற்றம் போன்றவற்றிற்கு நல்ல பலன் தருகிறது.
மலச்சிக்கல் நீங்க
சங்குப்பூ இலைகளை நன்கு அரைத்து அதனை விளக்கெண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதனை மூலத்திற்கு மேல் பூச்சாக பூசலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல நிவாரணம் பெறலாம்.
காய்ச்சல் நீங்க
சங்குப் பூவின் வேரை 40 கிராம் அளவில் எடுத்து நன்கு நசுக்கி அதனை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கால் லிட்டராக வற்றும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று ஆறு முறைகள் ஒரே நாளில் சாப்பிட காய்ச்சல் நீங்கும்.
நினைவாற்றல் பெருக
தேர்வு எழுதும் குழந்தைகளின் மனச்சோர்வு நீங்கி, நினைவாற்றல் பெருக சங்குப்பூ சிறந்ததாகும். இதனை வாரம் அல்லது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவுகளில் சேர்த்து வரலாம்.
சங்குப் பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகள் உண்பதால் சுவாசம் சம்பந்தமான நோய்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
வீக்கங்கள் மறைய
சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர வீக்கங்கள் மறையும்.
கப நோய்கள் நீங்க
சங்குப் பூவின் பட்டையை நன்கு இடித்து அதனை சாறு பிழிந்து 24 கிராம் அளவில் எடுக்கவும். பின் இதனை குளிர்ச்சியான பாலுடன் கலந்து அருந்தி வரலாம். இவ்வாறு செய்வதால் நாள்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்.
வயிற்று பூச்சிகள் நீங்க
சங்குப் பூவின் வேரினை நன்கு இடித்து பொடியாக்கி இதனை ஒரு கிராம் முதல் 3 கிராம் வரையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுத்து வர வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்து வெளியேறும். இது மிகச்சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லி ஆகும்.
இது ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வாகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை ஒரு மண்டலம் அல்லது 2 மண்டலம் வரை கொடுக்கலாம்.
சங்குப் பூ டீ
தேவையானபொருட்கள்
வெள்ளை அல்லது நீல நிற சங்குப் பூக்கள் – 10
தேன் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
தண்ணீர் – 2 தம்ளர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதித்ததும் சுத்தம் செய்த பூக்களை சேர்க்கவும். நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின் இதனை வடிகட்டி அதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து, தேன் சேர்த்து கலக்கவும். எலுமிச்சை பழம் வேண்டுமானாலும் சேர்க்கலாம். சுவையான சங்கு பூ டீ தயார்.
குறிப்பு
சங்கு பூவினை வெயிலில் உலர வைத்து தினசரி டீக்கு பயன்படுத்தலாம்.
ஆயுர்வேதம்.காம்