சந்தனம் என்றாலே நமக்கு தோன்றுவது நறுமணமுள்ள தெய்வீக பொருள். வேதங்களில் சந்தனம் ஒரு தெய்வீக பொருளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திரனின் சந்தனமரம், இந்திரலோகத்திற்கே வாசனை தருவதாக நம்பப்படுகிறது.
சந்தன மரம் ஒரு உன்னதமான மரம், அதை வெட்டும் கோடாரி கூட சந்தன வாசத்தை அடைகிறது என்று கருதப்படுகிறது. உலகில் சந்தன மரம் தென்னிந்தியா, இந்தோனேசியா தவிர சிறு அளவில் ஆஸ்திரேலியா – இந்த இடங்களில் மட்டுமே விளைகிறது.
சந்தன மரம் பசுமையானது. 30 அல்லது 50 அடி உயரமும், 3 அல்லது 8 அடி சுற்றளவும் கொண்டது. அது பழுப்பும் சிவப்பும் கொண்ட பட்டையும், சிறிய பழுப்பு நிற பூக்களும் உடையது. சந்தனமரம் ஒர் வேர் ஒட்டுண்ணி ரகத்தை சேர்ந்தது சில குறிப்பிட்ட மரங்களிலிருந்து தனக்கு தேவையான உணவை இழுத்துக்கொள்கிறது. அதன் சிறிய பழங்களை சாப்பிடும் பறவைகளின் எச்சத்திலிருந்து பரவும் விதைகள் சந்தன மரம் பரவுவதற்கு உதவுகின்றன. காட்டில் அல்லது உள்ள பாறைகள் மலைப்பாங்கான இடங்களில் இயற்கையாக வளரும்.
சந்தன மரத்தின் விஞ்ஞானப் பெயர் Santalaceae Santalum Altum இம்மரத்தின் நடுப்பகுதி நடுத்தண்டு (Heart Wood) தான் சந்தன மணத்தை தருவது. 10 வருட வளர்ச்சிக்கு பிறகே எண்ணெய் சேர்ந்து நடுப்பகுதி வாசமுடையதாக ஆகிறது. 20 வருடங்களுக்கு பிறகு வேகமாக வளர ஆரம்பிக்கும். நடுத்தண்டு 50 அல்லது 60 வருடங்களில் முழு வளர்ச்சியையும் அதிகபட்ச வாசனையும் அடைகிறது. வளர, வளர சந்தன மரம் மஞ்சள் நிறமாகும். வாசனையும் அதிகரிக்கும். 50 அல்லது 60 வருட வளர்ச்சியும், 60 அடி உயரமும் அடைந்த மரங்கள் வெட்ட தகுதியடைகின்றன. நடு மரத்தை விட வேரில் அதிக சந்தன எண்ணெய் இருப்பதால், மரம் வேருடன் பிடுங்கப்படுகிறது. மிகச்சிறந்த வாசனையுள்ள மரங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்களில் மலைப்பாங்கான இடங்களில் தான் காணப்படுகின்றன.
வேருடன் பிடுங்கப்பட்ட மரம், இலைகளும் நடுமர தண்டு இல்லாத கிளைகள் வெட்டி நீக்கப்படுகின்றன. மரத்தின் வெளிப்பட்டை, (நடுத்தண்டை மூடியிருக்கும்) முழுமையாக வெட்டப்படாமல், நடு மரத்தை சுற்றி 3/4 அங்குலம் விட்டு வாசனையில்லாத வெளிப்பட்டை இருக்கும் வரை வெட்டப்படுகிறது. மரங்களை வெட்டும்போது ஏற்படும் மரத்தூள் கூட பத்திரமாக சேகரிக்கப்படுகிறது. கெட்டியான, கனமான மரத்தண்டுகள், 3 1/2 அடி நீள துண்டுகளாக்கப்படுகின்றன.
முடிச்சுகளும், நசுங்கிய மரப்பாகங்களும் இல்லாத மரம் அதிக விலைக்கு போகும். வெட்டப்பட்ட மரங்கள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இங்கே நடுத்தண்டை சுற்றியுள்ள வெளிப்பட்டை (Sap wood) முழுதும் நீக்கப்படுகிறது. மரத்தின் எல்லா பாகங்களும் (துண்டாக்கப்பட்ட நடுத்தண்டு வெளிப்பட்டை, கிளைகள் முதலியவை) ஏலம் விடப்படுகின்றன. இவையெல்லாம் அரசாங்கமே செய்கிறது.
இம்மாதிரி விற்கப்பட்ட சந்தன மரத்திலிருந்து, தொழிற்சாலைகள் எண்ணெய்யை பிரித்தெடுக்கின்றன. பழங்கால முறையில், நடுமரம், வேர், வெளிப்பட்டை எல்லாம் பொடியாக்கப்படும். 20 அல்லது 30 கிலோ பவுடர்கள் காய்ச்சி வடிக்கும் முறையில் தாமிர பாத்திரத்தில் 2 நாள் (48 மணி நேரம்) ஊற வைக்கப்படுகின்றது. பிறகு அடுப்பில் வைக்கப்பட்டு நெருப்பு மூட்டி காய்ச்சும் போது எழும் வாசனை ஆவிகள் தாமிர குழாய் வழியாக, தண்ணீரில் வைக்கப்பட்ட வேறு ஒரு தாமிர பாத்திரத்தில் குளிர வைக்கப்பட்டு, திரவமாக மாற்றப்படுகிறது. மேலே மிதக்கும் எண்ணெய் அகப்பையால் எடுத்து சேகரிக்கப்படும். மறுபடியும் செய்யப்படும். இந்த பிரிவினை மூலமாக முழு எண்ணெய்யும் எடுக்கப்படும். இம்முறையில் கிடைக்கும் எண்ணெய் 4 லிருந்து 5 சதவீதமாகும்.
புதிய நவீன முறையில் நீராவியால் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. இதனால் அதிகமாக, வேகமாக, எண்ணெய் எடுக்கப்படும். இம்முறையில் பயன்படுத்தப்படும் தாமிரம் அல்லது எவர்சில்வர் பாத்திரங்கள் 500 அல்லது 1000 கிலோ வரை கொள்ளளவு உடையவை. நீராவியை உண்டாக்க, நிலக்கரி பாய்லர்கள், ரயில் இஞ்சின் பாய்லர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இம்முறையில் 4.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதம் வரை எண்ணெய் கிடைக்கும்.
ஆனால், புதிய நீராவி முறையினால் தயாரிக்கப்படும் எண்ணெய்யை விட, பழைய முறையில் எடுக்கப்படும் எண்ணெய் தரத்தில் உயர்ந்தது. காரணம் நீராவி முறையில் ஏற்படும் அதிக சூடும், அழுத்தமும் தான்.
வேர்களிலிருந்து 2 முறைகளிலும் அதிக எண்ணெய் 10 சதவீதம் வரை கிடைக்கும். உயர்ந்த தரமுள்ள சந்தன எண்ணெய்யில் 90 சதவீதம் மேல் சாந்தலால் என்றும் வேதிப்பொருள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சில சந்தன ஆலைகளில் 13 அல்லது 15 நாள் வரை நிதானமாக நடத்தப்படும் காய்ச்சி வடிகட்டும் (Distillation) முறையால், 94 சதவீதம் சாந்தலால் உள்ள எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
சந்தன எண்ணெய் இனிமையான, மரவாசனை கூடிய, குளிர்வான, பரவசமூட்டும் ஒரு எண்ணெய். மரத்துண்டுகளும் எண்ணெய்யும் அருமையானவை. பலவித உபயோகங்கள் உள்ளவை எனவே, இவற்றின் மதிப்பும் விலையும் மிக அதிகம். இதனால் மரங்களை கடத்துவதும், வெளிநாட்டிற்கு விற்பதும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த 1792 லியே, மைசூர் சுல்தான் சந்தன மரங்கள் அரசரை சேர்ந்தவை என்ற ஆணை பிறப்பித்தார். அதன் பிறகு அரசாங்கமே ஒவ்வொரு சந்தன மரமும் அரசாங்க உடமை என்று அறிவித்தது. நசித்து வரும் மரங்களின் ஒன்றாக சந்தன மரம் அறிவிக்கப்பட்டது. தனியார் நிலத்திலிருந்தாலும் சந்தன மரம் அரசாங்க உடமையே. சந்தன மரங்களின் பராமரிப்பு, வெட்டுதல், விற்பது எல்லாமே அரசாங்கத்தாலே செய்யப்படுகிறது. இருந்தும் சந்தனக்கடத்தலை முழுவதும் நிறுத்த முடியவிலை என்பது தான் உண்மை.
சந்தன மரம், எண்ணெய் இவற்றின் உபயோகங்களை பார்ப்போம்.
மருத்துவம்
ஆயுர்வேதத்தில், சந்தனத்தை அரைத்துப் பற்றுப்போட்டால் ஜுரம் குறையும்.பன்னீர் சேர்க்கப்பட்ட சந்தன விழுது தலைவலி, தேள் கடி, தோல் வியாதிகள், வேர்க்குரு இவற்றை குணப்படுத்தும். குழந்தைகளின் தோலை மிருதுவாக பராமரித்து அரிப்பு, வேர்க்குரு வராமல் தடுக்கும். உடலுக்கு மட்டுமன்றி மனதையும் மகிழ்விக்கும் சந்தன எண்ணெய் ‘அரோமா‘ வைத்தியத்தில் உபயோகப்படுகிறது.
சந்தன களிம்பு தோல் கான்சர், மருக்கள், பருக்கள் இவற்றுக்கு நல்லது. அரைத்த சந்தன தண்ணீருடன் சேர்த்த கஷாயம் உடல், வாய் துர்நாற்றங்களை போக்கும். ஜீரணக் கோளாறுகளுக்கு சந்தன களிம்பு, தேன், அரிசித்தண்ணீர், சர்க்கரை சேர்ந்த கலவை நிவாரணமளிக்கும்.
தலைமுடி எடுக்கப்பட்ட (மொட்டை அடிக்கப்பட்ட) பெரியவர்கள், குழந்தைகளுக்கு தரையில் சந்தனம் தடவுவது ஒரு கட்டாய வழக்கம். தலை குளிர்ச்சிக்கும், சிறு வெட்டுப்புண்களை ஆற்றும் திறனுக்கும் சந்தனப்பூச்சு அவசியம். சந்தனை எண்ணெய் ஒரு கிருமி நாசினி.
அலங்கார பொருட்களில்
சந்தன எண்ணெய் வறண்ட, வயதான சருமத்திற்கு நல்லது. மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து தலைக்கு தடவும் எண்ணெய்யாகவோ, உடலில் தடவும் எண்ணெய்யாகவோ உபயோகிக்கலாம்.
தீப்புண்களுக்கு நல்லது
விலை உயர்ந்த சந்தன எண்ணெய் தோல் பராமரிப்பு கலவைகளில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. மாசு மருவில்லாத முகத்திற்கு சந்தனமே சிறந்தது. முகச்சுருக்கங்களை அகற்றும். சந்தன எண்ணெய் ஒரு Astringent.
இறை வழிபாட்டுக்கு
சந்தனத்தால் கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனத்தை நெற்றியில் இடுவது தொன்று தொட்டு வழக்கம். சந்தன ஊதுபத்திகள் கடவுளுக்கு ஏற்றப்படுகின்றன. சந்தன நறுமணம் மன அமைதியை கொடுக்கும்.
வாசனை திரவியங்களில்
சந்தன எண்ணெய் பலவித வாசனைப் பொருட்களுடன் கலந்து உபயோகிக்க உகந்தது. ரோஜாவிலிருந்து அத்தர் தயாரித்த சந்தன எண்ணெய் உபயோகப்படுகிறது. Blotting paper (ஒன்றும் காகிதத்தில்) சிறிது சந்தன எண்ணெய் ஒரு துளிவிட்டு புத்தக அலமாரியிலோ, தூண் அலமாரியிலோ வைத்தால், புத்தகங்களும், துணிகளும் மணக்கும்.
கைவினைப் பொருட்கள்
சந்தன மரம் அழகிய சிறு பெட்டிகள், சீப்பு, படசட்டங்கள், கடவுள் உருவங்கள் போன்றவை செய்ய ஏற்றது. சந்தன கைவினைப்பொருட்கள் விலை உயர்ந்தவை. இத்தகைய அருமையான ஒரு மரம் நமது தென்னிந்தியாவில் வளர்வது நமக்கு பெருமையாக இருக்க வேண்டும். சந்தன மரத்தை பாதுகாப்பது நமது கடமை.
ஆயுர்வேதம். காம்