சாம்பார் பிறந்த கதை

Spread the love

சாம்பார் பிறந்த கதை


சாம்பார் நம் அனைவரின் வீடுகளிலும் சமைக்கப்படுகின்ற ஒரு சுவையான உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தமான உணவாகும். இது தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உணவு வகை இல்லை என்பது பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியுமா?.

தமிழ்நாட்டில் பல உணவு வகைகள் பாரம்பரியமிக்க வரலாறுகளைக் கொண்டுள்ளது. எனினும் அவை அனைத்துமே நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. குறிப்பாக உணவு அடிப்படையில் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் சாம்பார் தஞ்சாவூர் மரத்தாஸ் என்று அழைக்கப்படுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
தஞ்சாவூரை தலைநகரமாகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். அதன்பின் நாயக்கர்கள் தஞ்சாவூரை சிறப்பாக ஆட்சி செய்தனர். இவர்களிடமிருந்து தஞ்சாவூர் 1674-ல் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக்கு கீழே வந்தது. பின் 1798 ஆம் ஆண்டு சரபோஜி மன்னர் ஆட்சியில் தஞ்சாவூர் இருந்து வந்தது. இந்த காலக்கட்டத்தில் லக்னோவிலிருந்து உணவுகள் தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்தது.

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜிக்கு உணவு என்றாலே மிகவும் விருப்பமாம். எனவே அவர் தம்முடைய அரண்மனையில் சமையல் அறைக்கென்று தனி சிறப்பையே கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி சமையல் குறிப்புகள் அனைத்தும் எழுதி வைக்கவும் ஆணையிட்டார். இந்த சமையல் குறிப்புகள் தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூரை மராத்தியர்கள் ஆண்டு வந்த 1712 -ஆம் வருடத்தில் சாம்பார் தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் தான் முதன் முதலில் குழம்பில் பாசிப்பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பும், புளியும் சேர்த்து சமைக்கப்பட்டது. இந்தக் குழம்பு வைத்த முதல் நாள் தஞ்சாவூர் அரண்மனைக்கு விருந்தாளியாக ஒருவர் வந்துள்ளார். அவர் பெயர் சாம்பாஜி, இவர் மராட்டிய வம்சத்தில் இரண்டாவது பேரரசர். இவருக்கு விருந்தளிக்க தான் புதுவிதமான குழம்பு செய்துள்ளனர். எனவே அவருடைய பெயரையே அந்த குழம்பிற்கு “சாம்பார்” – என வைத்து விட்டனர். அந்த சாம்பார் நாடு முழுக்க மிகவும் பிரசித்தமாகியது.
இன்றைய காலத்தில் நாடு முழுவதும் சாம்பார் பல வகைகளாக சமைக்கப்படுகிறது. எனினும் சாம்பார் தஞ்சாவூர் மராட்டியர்களால் வந்தது. இதுவே நாம் அடிக்கடி உண்ணும் சாம்பாரின் கதையாகும்.


Spread the love