கறுப்பு சில்க் துணிகளைத் துவைப்பதற்கு முன் உப்புக் கரைத்த நீரில் முக்கிச் சிறிது நேரம் கழித்து துவைக்கவும். பின்னர் நீலம் நிறையக் கலந்த நீரில் முக்கி எடுக்கவும். இதனால் கறுப்பு நிறம் எடுப்பாக இருக்கும்.
அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்துவிட்டால் எத்தனை நாள்கள் சேமித்து வைத்திருந்தாலும் அரிசி புதிதாகவும், புழு, பூச்சி பிடிக்காமலும் இருக்கும்.
பட்டுத் துணிகளைத் துவைக்கும்போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலசினால் பட்டுத் துணியின் மிருதுத் தன்மையும், நிறமும் மாறாமல் இருக்கும்.
சுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சமையல் பாத்திரங்களில் வெங்காய நெடி அடிக்கிறதா? உப்பு கலந்த சூடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் வெங்காய வாசனை அறவே நீங்கிவிடும்.
கடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும். குக்கரின் அடியில் கறை படிந்திருக்கிறதா? வெறும் குக்கரை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி குக்கரின் அடிப்பாகத்தைச் சுத்தம் செய்தால் கறை போய்விடும்.