குங்கிலியம்

Spread the love

குணப்படுத்தும் நோய்கள்

குங்கிலியம் வெண்ணெய், குங்கிலிய பற்பம், குங்கிலியத் தைலம் என்று மூன்று வித வகையில் தயாரிக்கப்பட்டு குங்கிலியம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. ஒவ்வொன்றிலும் குங்கிலியத்துடன் வேறு சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதனால் பல வித நோய்கள் குணமாக்குவது எளிதாகிறது.

குங்கிலிய வெண்ணெயை கொட்டைப் பாக்கு அளவு எடுத்து தினம் இருவேளை என உட்கொள்ள வெள்ளை, வெட்டை, நீர்ச் சுருக்கு, எரிச்சல், பிரமேகம் முதலியன குணமாகும். மேகப்புண், வெட்டை போன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு குங்கிலியத்திற்கு உள்ளது. புண்கள் குணமாக, புண்கள் மீது பற்றாகப் போட வேண்டும்.

இதற்கு குங்கிலியக் களிம்பு மருந்து தயாரித்துக் கொள்ளலாம். குங்கிலியம், மெழுகு ஒவ்வொன்றும் 100 கிராம் அளவு எடுத்து சிறு தீயில் உருக்கிக் கொண்டு, அதனுடன் 350 மி.லி. நல்லெண்ணெய் சேர்த்து சூடாக இருக்கும் பொழுதே, வடிகட்டிக் கொள்ளவும். இதனை மெல்லிய சுத்தமான பருத்தித் துணியில் தடவி புண்கள் மேல் பற்றிட குணம் பெறலாம்.

குங்கிலியத்தைச் சிறப்பிக்கும் பழம்பாடல்

‘பெரும்பாடு மேகம் போம்

பேரா உடலில் அரும்பிய புண் ஆறும்

இவியல்லால் துரும்பாம்

எலும்புருக்கி புண் சீழும் ஏகும்

உலகில் சலம் பருகும் குங்கிலியத்தால்’

மரத்தின் பிசின் துவர்ப்பு, சிறுநீர் பெருக்கி, கப நிவாரணி, எலும்பு முறிவினைக் கூட குணப்படுத்தும். கபம், வாதம், நீரிழிவு நோய்கள் குணமாகும்.

இளநீரில் குங்கிலிய பஸ்பம் சேர்த்து காய்ச்சி வடித்து குடித்து வர வெள்ளை, வெட்டை நீர்ச் சுருக்கு, சிறுநீர்க் குழாய் ரணம் போன்றவைகள் குணமாகும். மரத்தின் தண்டுப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் பிசின் மூலம் மூலிகை மருந்துகள் மட்டுமன்றி வாசனைத் திரவியம், கிருமி நாசினி போன்ற பொருட்களும் தயாரிக்கின்றனர்.

பா. முருகன்


Spread the love