ரோஸ் பொடி

Spread the love

ரோஸ் பொடியின் பயன்கள்

ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.

ரோஜா இதழ்களில் நல்ல நறுமணம் இருப்பதால் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜாவின் நறுமணம் மனதை அமைதியாகவும், ஒரு நிலைப்படுத்தவும் உதவுகிறது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை குளிக்கும் போது நீரில் ஊற வைத்து குளித்து வர  உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

ரோஸ் பொடி முகத்தில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. இது  சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி,  செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. 

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. சருமத்திற்கு நல்ல நிறத்தையும், பொலிவையும் தருகிறது.

ரோஸ் பொடியினை மிகவும் எளிமையான முறையில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்

ரோஸ் பொடி பயன்படுத்தும் முறை

கரும்புள்ளிகள் மறைய

ரோஸ் பூ பொடி ஒரு டீஸ்பூன், சந்தனத் தூள் ஒரு டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், பன்னீர் சில துளிகள் இதனை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் சென்ற பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறாக வாரம் ஒருநாள் என தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

ரோஸ் பொடி ஒரு டீஸ்பூன், கடலை மாவு ஒரு டீஸ்பூன், தயிர் கால் கப், தண்ணீர் தேவையான அளவு இவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் சென்ற பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றதாகும்.

மந்தமான சருமத்திற்கு

ரோஸ் பொடி ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு பொடி ஒரு டீஸ்பூன், காய்ச்சாத பால் 3 டீஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர மந்தமான சருமம் மாறும்.

இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது. இதனை தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

வறண்ட சருமத்திற்கு

ரோஸ் பொடி ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் 10, முட்டையின் வெள்ளைக்கரு 1 டீஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட்டாக்கவும். இதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் சென்ற பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். நன்கு கழுவியதும் மாய்ஸ்சுரைசர் உபயோகிக்கவும். இவ்வாறு செய்து வர வறண்ட சருமம் மென்மையாகும்.

முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க விரும்புவோர் இந்த பேக் பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசை நீங்க

ரோஸ் பொடி 2 டீஸ்பூன், முல்தானி மிட்டி 3 டீஸ்பூன், பன்னீர் சில துளிகள் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் சென்ற பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இது முகத்தில் உள்ள எண்ணெய் பசையை சரும துளைகள் வரை சென்று நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

சரும நிறம் மாற

முகத்தில் அதிகப்படியாக ஏற்படும் முகப்பருக்கள், சரும நிறம் மாறுதல், சிகப்புத் தடித்தல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் ரோஸ் பொடி 2 டீஸ்பூன், பாதாம் 3 ஊற வைத்து தோல் உரித்தது, கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து மையாக அரைக்கவும்.

இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் சென்ற பின் சாதாரண நீரில் கழுவவும். இது சருமத்தில் உள்ள முகப்பருவை அகற்றி சரும செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது.

ரோஸ் பொடி 2 டீஸ்பூன், தக்காளி சாறு தேவையான அளவு, தண்ணீர் சில துளிகள் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது.

ரோஸ் பொடியுடன் பால் அல்லது வெண்ணெய் கலந்து முகத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் முகம் மிருதுவாகும்.

எதுவும் இல்லை என்றாலும் ரோஸ் பொடியினை மட்டும் முகத்திற்கு பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love