முகச் சுருக்கம் முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
முகத்தினை வைத்துத் தான் அவன் அழகாக இருக்கிறான்… அவள் அழகாக இருக்கிறாள் என்று நாம் கூறுகிறோம். அந்த முகத்தில் சுறுசுறுப்பும் வாடி வதங்கியது போல தோற்றமும் காணப்பட்டால் என்ன நினைப்பீர்கள்? அழகு கெடுவதற்கு பல காரணங்கள் அமைந்தாலும் முகத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது முகச்சுருக்கம் தான். முகச்சுருக்கம் ஏற்பட்டால் சருமத்தின் ஆரோக்கியமும், அதன் காரணமாக அழகும் கெட்டு அல்லது குறைந்து விட்டது என தயக்கமில்லாமல் சொல்லி விடலாம். 20 வயது முதல் 30 வயது வரை “ப்ரி ஏஜிங்” காலம் ஆகும். இந்த வயதில் நாம் எந்த அளவுக்கு முக்கியம் தருகிறோமோ அந்த அளவுக்கு பிற்காலத்தில் தோல் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கலாம்.
தோல் சுருக்கத்தினை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு என்று சந்தையில் சிறிய கம்பெனி முதல் பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்களின் அழகு சாதன தயாரிப்புப் பொருட்களை பார்வைக்கும், விற்பனைக்கும் குவித்து வைத்து இருக்கிறார்கள். அத்தனை அழகு சாதனப் பொருட்களிலும் நல்லவை, தீயவை என இரண்டும் கலந்து தான் விற்கப்படுகின்றன.
ஒரே மாதத்தில் தோலில் நிறம் மற்றும் தோலின் தன்மையை ஒரு கிரிமால் மாற்றி விடும் என்பதில் துளியும் உண்மையில்லை. இந்த வகைக் கிரிம்களில் இரசாயனம் கலக்கப்பட்டிருக்கக் கூடும். இதனால், இந்தப் பொருட்களினால் தோல் சம்பந்தமான பல பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. உடனே பலன் தருவது போல, முகத்தைப் பொலிவாக்கி அதோடு பிரச்சனைகளையும் அந்த அழகுப் பொருட்கள் உண்டாக்கி விடலாம். வீரியம் அதிகம் உள்ள இரசாயன தன்மையுள்ள பொருட்களைப் பயன்படுத்துவதால் தோலில் புண்,எரிச்சல், தடித்து விடுதல், வீங்குதல், தோல் சுருங்கி தேமல் கரும்புள்ளி போன்ற பிரச்சனைகள் உருவாகும். விலை குறைவாகத் தருகிறார்கள் என்று மட்டமான பொருளை வாங்கக் கூடாது.
வைட்டமின் ஏ அல்லது வைட்டமின் சி மற்றும் பழத்தன்மை அதிகம் கொண்ட கிரிம்கள் தோலின் தன்மையை மாற்றி தோலுக்கு புதுப் பொலிவைத் தரும். எந்த வகை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது? அதன் நன்மை,தீமை என்ன? என்பதை முதலில் தெரிந்த பிறகு வாங்க வேண்டும். புதிதாக வாங்கிய கிரிம் சிலருக்கு அலர்ஜியைத் தரலாம். உடனே அந்த கிரிம் உபயோகிப்பதை நிறுத்தி விட்டு தோல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது. பழங்களால் தயாரிக்கப்பட்;ட இயற்கை கிரிமாக இருந்தால் அது தோலுக்கு நல்லது.
முகச் சுருக்கத்தைப் போக்க வேண்டுமெனில் நாம் இயற்கைக்கு மாற வேண்டும். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உங்கள் சருமத்திற்கு உகந்த கிரிம்களைப் பயன்படுத்த வேண்டும்.
முகச் சுருக்கம் குறைவதற்கு சில டிப்ஸ்கள்:
- தினம் தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.
- இளநீர், நுங்கு, தர்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- தினமும் வைட்டமின் ஏ நிறைந்த காரட், மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். இதன் மூலம் சருமம் புதுப் பொலிவாகவும், இளமைத் தோற்றமாகவும் அமையும்.
- மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல் துணியால் மெதுவாக ஒத்தி எடுக்கவும்.
- மனதில் கவலையைக் குறைத்துக் கொண்டாலே போதும். முகத்தில் எப்போதும் இளமையும், புத்துணர்வும் பெருகி விடும்.
- இரண்டு வைட்டமின் ‘இ’ காப்ஸ்யூல்களிலிருந்து எடுத்த எண்ணெய்யை தடவி 15 நிமிடத்திற்கு பின்பு கழுவி விடவும்.
- சோள மாவு ஒரு மேஜைக் கரண்டி, தேன் அரை தேக்கரண்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். அரை மணி கழித்து கழுவி விடவும்.
- கற்றாழை பொடி, ஆரஞ்சுப் பழத் தோல் பொடி, ரோஜாப்பூ பொடி, சந்தனப் பொடி இவற்றை தலா அரை தேக்கரண்டி எடுத்து, உலர்ந்த சருமமுடையவர்கள் பாலிலும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டி கலந்த தண்ணீரிலும் குழைத்து முகத்தில் பூசவும்.
- காரட் 250 கிராம் மற்றும் பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள் கேரட்டை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு முகத்தில் கன்னங்களில் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவவும். 30 நிமிடம் அப்படியே உலர வைத்த பின்பு கழுவி விடவும். இது எல்லா டைப் சருமத்திற்கும் உகந்தது.
தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்துகள் அனைத்தும் சுத்தமானவை என்று சொல்ல முடியாது. சிலவற்றில் சோடியம் லெவல் சல்பேட் (Sodium Lavel Salphate ) கலந்திருக்கலாம். இது சருமத்திற்கு கேடு செய்யும். எனவே பிரபலமான நம்பகமான தயாரிப்புகளை வாங்கவும்.